Published:Updated:

தா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்!

ராஜார்திருவேங்கடம், கே.கே.மகேஷ்படங்கள் : எம்.விஜயகுமார், க.கார்த்திக்

##~##
'ம
க்கள் குரலே மகேசன் குரல்’...  இதைக் கொஞ்சம் மாற்றினால், 'தொண்டன் குரல்தான் தலைவன் குரல்’! பொதுவாகவே, திராவிட இயக்கம் டீக்கடை பெஞ்சுகளிலும் சலூன் கடைகளிலும்தான் வேர் பிடித்தது. இன்றும் கருணாநிதியின் நடவடிக்கைகளுக்கு அவரே யோசிக்காத விளக்கங்களை எங்கோ அமர்ந்து விளக்கிக்கொண்டு இருப்பார்கள் இவர்கள். ஜெயலலிதா செய்வது எல்லாம் சரிதான் என்பது இவர்களது வாதமாக இருக்கும். கட்சிக்கு ஒருவராக அப்படிப்பட்ட இரண்டு பேரை மடக்கிப் பிடித்துப் பேசினோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்!
திமிறும் ரத்தத்தின் ரத்தம்

பெரிய விஷயங்களைத் தி.மு.க-வினர் நீட்டி முழக்கிக்கொண்டு இருக்கும்போது... இரட்டை இலைக்காரர்கள் வாத்தியார் பாட்டைப் போட்டு கூட்டத்தைக் கூட்டிவிடுவார்கள். மதுரை கண்ணனேந்தல் பஞ்சாயத்து சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த தி.பிரபாகர் அப்படிப்  பட்ட ரகம்!

''சட்ட சபைத் தேர்தல்ல ஆளுங்கட்சி தோத்து, எதிர்க் கட்சி ஜெயிக்கிறதுதான் சார் தமிழகத்தின் பழக்க வழக்கம். சாமி சத்தியமா சொல்றேன்... கருணாநிதி தோற்கிறார்... அம்மா ஜெயிக்குறாங்க.

தா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்!

கருணாநிதிக்கு எப்பவுமே அவரது வாய்தான் சார் சனியே! நல்லாப் போயிட்டு இருக்கும்போது, அவரா எதையாச்சும் சொல்லி வம்பை விலைக்கு வாங்குவார். 'நான் அந்த அர்த்தத்துல சொல்லலை... இந்த அர்த்தத்துல சொல்லலை’ன்னு அப்புறம் விளக்க அறிக்கை கொடுக்குறதுலயே நேரம் சரியாப் போயிரும்.

சும்மா இருந்த புரட்சித் தலைவரைக் கட்சியைவிட்டு நீக்கினார். அப்புறம்,எம்.ஜி.ஆர்  உயிரோடு இருந்த வரை, கருணாநிதியால் முதல்வர் பதவியைப்பத்தி யோசிக்கவே முடியலை.

அம்மா ஏதோ ராஜினாமாக் கடிதம் எழுதி வெச்சிருக்காங்கன்னு வெளியிட்டார். அப்போ, அடிபட்ட சிங்கமா சீறி எழுந்த அம்மாவைச் சமாளிக்க முடியாம சிரமப்பட்டுட்டு இருக்கார். வைகோ, விஜயகாந்த் எல்லாமே கருணாநிதியால் சீண்டப்பட்டுத் தலைவரா ஆனவங்கதான். சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்கிறதுல கருணாநிதி சமர்த்தர்!

ஒரு ஊழல் குற்றச்சாட்டுதான் ராஜீவ் காந்தியையே மண்ணைக் கவ்வவைத்தது. விலைவாசி உயர்வு பிரச்னையால்தான் நரசிம்ம ராவ் ஆட்சியை இழந்தார். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து மதக் கலவரங்கள் வெடித்ததால்தான், பி.ஜே.பி-யின் 'பொற்கால ஆட்சி’ மரண அடி வாங்கியது. ஆனா, ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு இந்த மூணுமே இப்போ கருணாநிதி ஆட்சியில் பட்டொளி வீசிப் படபடக்குது!  

அம்மா ஆட்சியில் எப்பவும் சட்டம் - ஒழுங்கும், குடிமக்களுக்கான பாதுகாப்பும் பக்காவா இருக்கும். ஆனா, தி.மு.க ஆட்சியில், போலீஸ், வக்கீல், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள், பஸ் தொழிலாளர் கள்னு யாருமே நிம்மதியா இல்லை.

'சொன்னதைச் செய்தார் கலைஞர்’ என்ற தி.மு.க-வினரின் பிரசாரம் எடுபடாது. காரணம், 20 ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பாடு, மானிய விலையில் சிமென்ட், ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள் என்று பல ஏமாற்றுத் திட்டங்களைத் தொடங்கி சத்தமே இல்லாமல் அதை கருணாநிதியே நிறுத்திவிட்டார். மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தவர், பஸ் கட்டணத்தையும் கள்ளத்தனமாக உயர்த்திவிட்டார்.

தா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்!

காங்கிரஸ் ஒரு காலி பெருங்காய டப்பா. பா.ம.க அய்யோ பாவம் கட்சி. பல தொகுதிகளில் தி.மு.க-வுக்கு எதிராகவே காங்கிரஸும் பா.ம.க-வும் வேலை பார்க்கும். காங்கிரஸுக்கு தி.மு.க-வும் சிறுத்தைகளும் குழி பறிக்கும்.

தி.மு.க-வின் கோட்டையான சென்னையில் இந்த முறை கறுப்பு - சிவப்பு வேட்டிக்காரன் ஒருத்தர்கூட எம்.எல்.ஏ. ஆக முடியாது. அதே நிலைமைதான் கன்னியாகுமரி வரைக்கும். இந்த உண்மை தெரிஞ்சுதான் கருணாநிதி முதல் கருப்பசாமி பாண்டியன் வரை எல்லோரும் அடக்கி வாசிக்கிறாங்க. ஆனா, மதுரையில் இருக்கும் ஒருவர் மட்டும், '2011 தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்ற இயக்கமே இருக்காது’ன்னு உறுமிட்டு இருக்கார். 'மதுரைக்கு வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ன்னு தன் அடிப்பொடிகளை விட்டு அம்மாவுக்கு மிரட்டல் விடுத்த அவர், அம்மா அங்கே வந்தப்போ, மதுரையைவிட்டே ஓடி ஒளிந்துகொண்டார்.

இன்னொரு முக்கியமான விஷயம். தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த சாட்சி நான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மிரட்டலுக்குப் பயந்து, போலீஸ் அதிகாரிகள் முதல் தா.கி. குடும்பத்தினர் வரை அனைவரும் கோர்ட்டில் பல்டி அடித்தார்கள். நானும்கூட உண்மையைச் சொல்ல முடியாமல் போனது. ஆனா, ஆட்சி மாறியதும் இந்த வழக்கை அம்மா நிச்சயமாக தூசி தட்டுவார். அப்போ நான் தைரியமாக சாட்சி சொல்வேன். சிறை செல்லும் படலம் மறுபடி அரங்கேறும்!''  

ஸ்பெக்ட்ரம் தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்!
உஷார் உடன்பிறப்பு

'டால்மியா’ தங்கவேலு... இவரது பேச்சும் மூச்சும் கறுப்பு சிவப்புத£ன்! சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிச்சாவடி கிராமம் தங்கவேலுவின் சொந்த ஊர். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, காலாட்டியபடியே தி.மு.க-வுக்காக வாய்ஸ் கொடுக்கிறார்!

தா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்!

'' 'தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் நான் மிதப்பேன். நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம். கவிழ்த்துவிட மாட்டேன்! தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் பாறையில் தூக்கி அடித்தாலும் சிதறு தேங்காயாகச் சிதறுவேன். அதை எடுத்து நீங்கள் சாப்பிடலாம்!’ - இது ஏதோ தலைவர் கலைஞரின் வார்த்தை விளையாட்டோ, திரைப்பட வசனமோ அல்ல. அவரது வாழ்க்கை. இதுதான் இந்தத் தமிழ்நாட்டின் 60 ஆண்டு கால சரித்திரம்!

தலைவர் கலைஞருடன் ஒப்பிடுவதற்கேனும் வேறு ஒரு தலைவர் மற்ற கட்சிகளில் உண்டா? பதவிக்காக மட்டும் தி.மு.க இல்லை. எமர்ஜென்சி என்னும் எமன் இந்தியாவை வளைத்தபோது, தமிழகத்தை அந்தக் கொடுங் கரம் வளைக்காமல் தடுத்தவர் கலைஞர். பதவி ஆசை இருந்து இருந்தால், அன்றைய பிரதமர் சொன்னதற்குத் தலையை ஆட்டிக்கொண்டு தமிழக முதல்வராக அவரால் தொடர்ந்திருக்க முடியும். 91-ம் ஆண்டு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, மறுபடியும் கலைஞர் ஆட்சியைக் கலைத்தார்கள். வெளியூர்ப் பயணத் தின்போது ஹோட்டல் அறையைக் காலி செய்யும் மனநிலையில் எந்தக் கவலை யும் இல்லாமல் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கி யவர் கலைஞர். அதனால்தான் 'தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சராகப் பணியாற்று என்றாலும், இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன்தான் என் தம்பி கருணாநிதி!’ என்றார் பேரறிஞர் அண்ணா!

இப்படிப்பட்ட தலைவரை ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மட்டுமே வைத்துக் காலி செய்துவிடலாம் என்று சில கருங்காலிகள் திட்டமிடுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது ஊழலே கிடையாது. பொதுமக்கள் அனைவருமே சகாய விலையில் செல்போன் வசதியை உபயோகிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதால் ஏற்பட்ட சிறு சிக்கல். 1.76 லட்சம் கோடியை ஆ.ராசா அபேஸ் செய்துவிட்டார் என்பதுபோலப் பலர் பொறாமையில் புகார் சொல்கிறார்கள். அதாவது, இந்த அளவுக்கு லாபம் அடைந்து இருக்க முடியும் என்பதுதான் அந்தக் கணக்கே தவிர, மற்றபடி யாரும் கன்டெய்னரில் அடுக்கி, கப்பலில் அவ்வளவு கோடி கரன்ஸியைக் கடத்திவிடவில்லை. அம்பானி சகோதரர்களது மேஜையில் இருந்த செல் போனை, கிழங்கு விற்கிற கிழவியின் இடுப்பில் மாட்டிவிட்டது எங்களது தயாநிதி மாறனும் ஆ.ராசாவும் அல்லவா?

தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். பெரிதாக ஒரு நல்லது நடக்கும்போது, சின்னக் குறைகளைக் கண்டுகொண்டு கைது செய்யக் கூடாது!

ஜெயலலிதா ஊழல் செய்யாதவரா... பணம் பதுக்காதவரா? பணத்தைப் பார்த்தால், முகத்தைத் திருப்பிக்கொள்பவரா? பெங்களூரில் நடக்கும் வழக்கு அவர் உத்தமி அல்ல என்பதைச் சொல்லும். 24 வயதுப் பையனை வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்து, வளமான கல்யாணம் நடத்தி, பல கோடி மதிப்புள்ள நகைகளை மாட்டி, அவரும் அவரது தோழியும் நடந்து வந்த காட்சியை இன்னமும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடையில் அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் - இவை எல்லாம் கொண்டுவந்த கலைஞரை தமிழ்நாட்டு மக்கள் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரமைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்.

எம்.ஜி.ஆர். காலத்தில்கூட கிராமங்கள் இரட்டை இலையின் கோட்டையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அனைத்துக் கிராமங்களிலும் உதயசூரியன் மட்டுமே இருக்கிறான். இந்த மாற்றத்தை கலைஞர் எப்படிச் சாதித்தார்? அவர்களுக்கு நல்லது செய்ததன் மூலமாக, மக்களே மனம் மாறிவிட்டார்கள். கிராமத்து மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால்கூட 'மகராசனா இரு’ என்று மனசு நிறைந்து வாழ்த்துவார்கள். அந்த அளவுக்கு நல்லவர்கள். நன்றி மறக்காதவர்கள். அந்த மக்கள் கேட்காமலேயே வாரி வழங்கி இருக்கும் கலைஞரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்களா?

எதிரிகளை வீழ்த்த வேண்டுமானால், பலசாலிகளை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார். கலைஞரின் வியூகங்களை ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது!''