Published:Updated:

மூவர் தூக்கு தண்டனை: தமிழக அரசின் மனு விவரம்

சென்னை, அக்.29,2011

ராஜீவ் கொலை வழக்கில் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மூவர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இதில், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவின் விவரம்:

இந்தச் சம்பவத்தில் ராஜீவ் காந்தியுடன் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இங்குள்ள சிலருடன் சேர்ந்து நடத்திய கொடூர கொலை இது, என்பதுதான் அந்த சம்பவத்தின் வரலாறு.

மனுதாரர் மூன்று பேர் மற்றும் நளினி ஆகியோருக்கு தடா நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 11.5.99 அன்று உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 பேரும் தமிழக கவர்னரிடம் கருணை கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கவர்னர் நிராகரித்தார்.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். கவர்னரின் உத்தரவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அமைச்சரவையின் பரிந்துரைப்படி புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டது.

நளினிக்கு மட்டும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மற்ற 3 பேருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவை 20.4.2000 அன்று தீர்மானித்தது. அதன்படி கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து ஜனாதிபதியிடம் 3 பேரும் 26.4.2000 அன்று கருணை மனு கொடுத்தனர். அந்த மனுக்களை நிராகரித்து 12.8.11 அன்று ஜனாதிபதி உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் உத்தரவுப்படி 3 பேரையும் தூக்கில் போடுவதற்கு வேலூர் ஜெயில் நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் கருணை மனு மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு சிறையில் மருத்துவம் உள்ளிட்ட நல்ல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

அதேபோல், அவர்களின் தூக்குத் தண்டனையைக் குறைக்க தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவு எழுந்ததாகக் கூறப்படுவது குறித்தும் தமிழக அரசு எந்தக் கருத்தையும் கூறவில்லை. அவர்களின் கோரிக்கைகளுக்கு சட்டப்படி எந்தத் தகுதியும் இல்லை.

எனவே, அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.