சினிமா
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

ன்றே கொன்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்!

'கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்... தண்டனை வழங்கப்படும் நாளிலேயே பதவியை இழப்பார்கள்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுதலித்து அவசரகதியில் மத்திய அமைச்சரவை சட்டம் இயற்றியது. ஆனால், அதற்கு மறுநாளே, அப்பாவி வாக்காளர்களுக்குத் தோள்கொடுக்கும் விதமாக, தேர்தலில் 'வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை’யை அதிகாரப்பூர்வமாக வழங்கச் சொல்லி தீர்ப்பு அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் தகுதிகுறித்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யாவிட்டால், அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் உரிமையானது, இப்போது இந்தியாவுக்கு மிக அவசியமான ஒரு சட்டம். வேட்பாளர் பட்டியலில், 'இவருக்கு அவர் தேவலாம்’, 'அவருக்கு இவர் தேவலாம்’ என்ற ஒப்பீட்டு அளவிலேயே இதுவரை வாக்களித்துள்ளோம்; அல்லது வாக்களிக்க மறுத்துள்ளோம். விளைவு, நாட்டின் 543 எம்.பி-க்களில் 162 எம்.பி-க்கள் மீது கிரிமினல் வழக்குகள். 4,032 எம்.எல்.ஏ-க்களில் 1,258 பேர் குற்றப் பின்னணிகொண்டவர்கள். விகிதாச்சாரக் கணக்கில், நூற்றுக்கு முப்பது பேர் மீது கிரிமினல் கறை!

பண பலமும் அடியாள் பலமும் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சூழல் காரணமாகவே, சேவை மனப்பான்மைகொண்ட நேர்மையாளர்கள் பலரால் தேர்தலில் போட்டியிட முடிவது இல்லை; முன்வருவதும் இல்லை. இந்த அவலத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஓரளவேனும் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. 'எனது தொகுதியில் போட்டியிடும் எவரையும் எனது பிரதிநிதியாக சட்டசபைக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுத்து வாக்களிக்க நான் தயார் இல்லை. தகுதிக் குறைபாடு காரணமாக இவர்கள் அனைவரையும் நிராகரிக்கிறேன்’ என, நாம் அழுத்தும் அந்த ஒரு பொத்தானும் அரசியல் கட்சிகளுக்கான அபாய அறிவிப்புதான். இனியும் சாதி, பொருளாதாரக் காரணங்கள் சொல்லி அறமற்றவர்களை உங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடவைத்து, வாக்காளர்களுக்குத் துரோகம் இழைக்காதீர்கள்!

இந்த இடத்தில் வாக்காளர்களுக்கும் ஒரு செய்தி... 'அட, யாருக்கு ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது? என்று சப்பைக்கட்டு காரணங்கள் சொல்லி வாக்களிப்பதை இனி தவிர்க்கக் கூடாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கைவிரலைக்கூடத் தூக்க முன்வராமல், டீக்கடைகளிலும் இணையவெளிகளிலும் அரசியலைச் சாடினால், அவர்களின் மனசாட்சிகூட அவர்களை மன்னிக்காது!