Published:Updated:

ஊழல் குற்றச்சாட்டின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம்: அருண் ஜெட்லி பெருமிதம்!

Vikatan Correspondent
ஊழல் குற்றச்சாட்டின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம்: அருண் ஜெட்லி பெருமிதம்!
ஊழல் குற்றச்சாட்டின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம்: அருண் ஜெட்லி பெருமிதம்!
ஊழல் குற்றச்சாட்டின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம்: அருண் ஜெட்லி பெருமிதம்!

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் ஓராண்டை நிறைவு செய்கிறோம் என்று  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டுக்கான செயல் திட்டம் குறித்து, பி.டி.ஐ. செய்தியாளருக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டியில், ''பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வெளியாகின்றன. அந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், இதற்கு முன்பு முந்தைய அரசால் பயனடைந்த சில பெரு நிறுவனங்கள், தற்போது ஏமாற்றத்தில் உள்ளன.

இந்நிலையில், வர்த்தகக் கொள்கைகளில் விரைந்து முடிவெடுத்தும், உள்நாட்டு, சர்வதேச முதலீடுகளுக்கு மேலும் அனுமதியளித்தும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும். இதனால், நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்தைத் தாண்டும். மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள், அதே வேகத்தில் தொடரும். வர்த்தக நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் வரி விதிக்கப்படும். சரக்கு, சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரி, அடுத்த நான்கு ஆண்டுகளில் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொள்கைகளில் தெளிவின்றிச் செயல்பட்டதால், முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. அதுமட்டுமன்றி, தகுதியான நபர்களைத் தவிர்த்துவிட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு கடந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகியவற்றில் வெட்ட வெளிச்சமானது.

ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, எந்தவிதக் குழப்பமுமின்றி, சரியான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. அரசுக்கு அப்பாற்பட்ட யாரும் கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை. இதனால், ஊழல் புகார் எதுவுமின்றி, ஓராண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறோம். அதனால் இது ஊழலற்ற அரசு. நிலம் கையக மசோதா, மனை வணிக மசோதா, சரக்கு, சேவை வரி மசோதா ஆகிய விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தெளிவின்றிக் காணப்படுகிறார்கள். அந்த மசோதாக்களில் உள்ள அம்சங்களை, பிறரிடம் இருந்து தெரிந்துகொள்ளாமல் அவர்களே நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.