Published:Updated:

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. மீண்டும் போட்டி?

Vikatan Correspondent
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. மீண்டும் போட்டி?
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. மீண்டும் போட்டி?
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. மீண்டும் போட்டி?

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின்  எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்றுப் பதவியை திடீர்  ராஜினாமா செய்ததால் மீண்டும் அங்கு தேர்தல் நடக்க உள்ள சூழலில், திமுகவும் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள ஜெயலலிதா போட்டியிட உள்ளார் எனக் கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா, இடைத்தேர்தலில் போட்டியிட, தமிழ்நாட்டில் உள்ள எந்த தொகுதியை தேர்வு செய்வார் என்று பரபரப்பாகப்  பேசப்பட்டு வந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி வெற்றிடமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்குமே ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக எதிர்க்கட்சிகள் ஜெயலலிதாவின் இந்த அதிரடி முடிவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு முதலில் இந்த தகவல் கடும் அதிர்ச்சியாகவே இருந்ததாகக் கூறப் படுகிறது. அதானால் உடனடியாக திமுக தலைமை இது பற்றிய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.

வெற்றிவேல் ராஜினாமா செய்தது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் நேற்று பிற்பகல் வெளியானதும், தி.மு.க. மூத்த தலைவர்களை அறிவாலயம் உடனடியாக வரும்படி கருணாநிதி அழைப்பு விடுத்தார். அவர்களிடம் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. களம் இறங்கும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளை  கருணாநிதி விவாதித்தார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக  சார்பில் யாரை வேட்பாள ராக நிறுத்தலாம் என்றும் கருணாநிதி ஆய்வு செய்தார்.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

கருணாநிதி நேற்று நடத்திய ஆலோசனை பற்றி திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதும், நாங்கள் மீண்டும் ஆலோசனை நடத்துவோம். ஆர்.கே.நகரில் திமுக சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது பற்றி தற்போதைய சூழ்நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் திமுகவின் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கும். அந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக  புதிய வியூகம் வகுக்கும்" என்றார்.

அன்மைக்காலமாக  மற்ற கட்சிகளை அணுகும் விஷயத்தில் திமுகவிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சில பெரிய கட்சிகளை ஒருங்கிணைந்து 2016 தேர்தலை எதிர்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை திமுக அரவணைக்க வாய்ப்புள்ளதாகக்  கூறப்படுகிறது. இதைக்  கருத்தில் கொண்டே நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் வந்து கொண்டிருக்கின்றன’ என்று கூறினார்.

எனவே பொதுத்தேர்தலுக்கு முந்தைய முன்னோட்டமாக   ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக  தலைமையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.