Published:Updated:

ஸ்டாலின்- அன்புமணி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

Vikatan Correspondent
ஸ்டாலின்- அன்புமணி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
ஸ்டாலின்- அன்புமணி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை: அறிக்கை போர் நடந்து வந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திடீரென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஸ்டாலின்- அன்புமணி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 2ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அரசை நிர்வாகம் செய்ய வேண்டிய நீங்களும் உங்கள் அமைச்சர்களும் தினந்தோறும் பூஜைகள் செய்து, பால் குடம் தூக்கி, தீமிதித்து கொண்டிருக்கிறீர்கள். இது என்ன தமிழகமக்கள் நலன் கருதியா செய்கிறீர்கள்? உங்கள் தலைவி விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தானே செய்கிறீர்கள்? உங்களது முதல் கடமை தமிழக மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதா? அல்லது உங்கள் கட்சி தலைவியின் நலனுக்காக மட்டும் பாடுபடுவதா? ”இந்த கேள்விக்கு மனச் சாட்சியை தொட்டு பதில் அளிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? என்று வினா எழுப்பி இருந்தார்.

இந்த கடிதத்திற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஆனால், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மே 4ஆம் தேதி ஸ்டானுக்கு பகிரங்கமாக கடிதம் ஒன்று எழுதினார். அதில், தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம். ஊழலையும், முறைகேடுகளையும் தி.மு.க. தொடங்கி வைத்தது. அதை அ.தி.மு.க. பிரம்மாண்டமாக்கியிருக்கிறது. இந்த குற்றத்திலிருந்து இரு கட்சிகளுமே தப்பிக்க முடியாது. தமிழகத்தை சீரழித்ததில் அதிமுகவும், திமுகவும் தனித்தனி கட்சிகள் அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான்" என்று கூறியிருந்தார்.

இதற்கு ஸ்டாலின் நேரிடையாக பதில் அளிக்கவில்லை. ஆனால், தருமபுரி தொகுதி முன்னாள் திமுக எம்.பி. இரா.தாமரைச்செல்வன், அன்புமணிக்கு பதில் அளித்தார். அதில், “வெட்டியாக கடிதம்” எழுதி இப்படி உங்கள் நேரத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் நேரத்தையும் வீணடிக்காமல், அரசியலில் அரிச்சுவடியை தளபதியின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அவரது தியாகத்தில் ஒரு சதவீதமாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கூடவே வன்னியர் சமுதாயத்தை “வசனம்” பேசியே வஞ்சிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்தரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள்" என்று கூறியிருந்தார்.

இதனால், ஆவேசத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி மீண்டும் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் கடிதம் எழுதினார். அதில், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும்  ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்... நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அன்புமணி, ஸ்டாலினை சீண்டும் வகையில் அறிக்கை விட்டு வந்து கொண்டிருந்தார். பின்னர் அறிக்கையை நிறுத்திக் கொண்டார் அன்புமணி.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு பேரின் அறிக்கை போர் முடிவுற்ற நிலையில், தற்போது இரண்டு பேரும் நேரில் சந்தித்துக் கொண்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராயர்நகரில் உள்ள அன்புமணி இல்லத்தில் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். தனது சகோதரரின் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்த ஸ்டாலினுக்கு, அன்புமணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அன்புமணி உடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசவில்லை என்றார்.

அன்புமணி கூறுகையில், ஆராேக்கியமான நிகழ்ச்சியை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார்.