Published:Updated:

மோடி உடைத்தால் பொன் சட்டியா?

Vikatan Correspondent
மோடி உடைத்தால் பொன் சட்டியா?
மோடி உடைத்தால் பொன் சட்டியா?

டந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்நாள் வரை உலகின் முக்கிய நாடுகள் அனைத்திற்கும் சுற்றுப் பயணம் சென்று பிரதமர் மோடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இந்த பல நாட்டுச் சுற்றுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள்  கடுமையான விமர்சனங்கள் வைத்தாலும் அவர் அஞ்சவில்லை. இன்று கூட தென் கொரியாவில் அரசுமுறைப் பயணத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

மோடி உடைத்தால் பொன் சட்டியா?

மோடியின் இந்தப் பயணங்களில் அரசு அதிகாரிகள், உதவியாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக வண்ண வண்ண குர்தாக்களும், கண்ணைக் கவரும் கூலிங் கிளாசும் இடம் பெற்றுள்ளன. அதே போல அவரின் நண்பர் அதானியும் நிழல் போல கூடவே இருக்கிறார் என்பதும் முதன்மையான செய்தி.

பாஜக ஆட்சி மோடியின் தலைமையில் அமைந்து  ஓராண்டு நிறைவை எட்ட உள்ள நிலையில், மோடி விசிட் அடித்த நாடுகள், பூட்டான், பிரேசில், நேபாளம் (இரண்டு முறை), ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி, செஷெல்லீஸ், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா,சீனா,மங்கோலியா மற்றும் தென்கொரியா என மொத்தம் 18. 

மேலும்  பங்களாதேஷ், ரஷ்யா(யு.எஃப்.ஏ) டர்க்மெனிஸ்தான், ரஷ்யா (மாஸ்கோ) , சிங்கப்பூர், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்த சுற்றுப் பயணத் திட்டத்தில் செல்ல உள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், கூலிங் கிளாஸ் அணிந்து வந்ததற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, அவருக்கு விளக்க நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

மோடி உடைத்தால் பொன் சட்டியா?

கடந்த 3 நாளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட போது, பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே பிரதமருக்கு கை கொடுத்து வரவேற்றார்.இது தற்போது அதிகார வர்க்கம் தாண்டியும், அரசியல் உலகிலும் பரபரப்பாக அலசப்படுகிறது.

ஆட்சியர் அமித் கட்டாரியாவுக்கு சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள். எனவே, இத்தகைய தவறான அணுகுமுறையை இனி கடைபிடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது. நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்குப்  புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாகச்  சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது.

என்ன புதிரான விளக்கம் என்று எண்ணுவதைவிட, இதிலும் அரசியல் நுழைந்து அதிகாரிகளை படுத்துவதைத்தான் கவனிக்கவேண்டியுள்ளது. ஆனால் இதே பிரதமர் மோடி,  சீனாவின் 3000 ஆண்டுகளுக்கு முன்பான மியூசியத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு,  அங்கிருக்கும் சிலைகளோடு செல்பி எடுத்துக் கொண்டதும் செய்திகளாய் வெளிவந்துள்ளன.

மோடியின் இதுபோன்ற பல செயல்கள் பிரதமருக்குண்டான நெறிமுறைகளோடு உள்ளதா? என்ற கேள்வியுடன் இதுகுறித்து, சமூக வலைத் தளங்களிலும்  பத்திரிக்கைகளிலும் கடுமையாக விமர்சிக்கப்படு கின்றன.

மாமியார் உடைத்தால் மண்சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?