Published:Updated:

ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

Vikatan Correspondent
ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?
ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

" காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் 60 ஆண்டு காலம் கொடுத்தீர்கள்...எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுங்கள்; உங்களுக்கு நல்ல நாட்கள் ( அச்சே தீன்) காத்திருக்கின்றன !" என்று 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களிடம் கெஞ்சினார் நரேந்திர மோடி. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மோடி சொன்ன அந்த நல்ல நாட்கள் எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலைதான் காணப்படுகிறது.

ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

தான் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் தலையெழுத்தும், மக்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வரும் என்ற வாக்குறுதியையும் தனது பிரசாரத்தின்போது அளித்திருந்தார் மோடி. ஆனால் மோடி பிரதமராக பதவியேற்று 365 நாட்கள் ஆகிவிட்டபோதிலும், அவரது கடிகாரம் என்னவோ இன்னமும் மெதுவாகவே சுற்றிக்கொண்டிருக்கிறது.

அதே சமயம் சாமான்ய மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வருகிறதோ இல்லையோ...குஜராத்திலிருந்து வந்த மோடியின் வாழ்க்கை மாறித்தான் போய்விட்டது. 10 லட்சம் மதிப்பிலான சட்டை தைத்து போட்டுக்கொள்கிறார். செல்லுமிடங்களிலெல்லாம் செல்ஃபி எடுத்து, இன்றைய யூத்களுக்கு சவால்விடும் விதமாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குகிறார்.

ஆனால் தன்னை மக்கள் எதற்காக ஆட்சியில் அமர்த்தினார்கள் என்பதை நினைவில் வைத்துள்ளாரா தெரியவில்லை. கடந்த கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட துரதிருஷ்டவசமான சில மோசமான பொருளாதாரக் கொள்கைகள்தான் சாமான்ய மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை நிர்ணயக்கொள்கைகள், நிலம் கையகப்படுத்தும் மசோதா, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கிலடாங்க வரிச்சலுகைகள் போன்ற ஏராளமான மக்கள் விரோத கொள்கைகள்தான் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வழிவகுத்தது.

ஆனால் காங்கிரஸ் அரசின் எந்த கொள்கைகளை விமர்சித்து மோடி ஆட்சியை பிடித்தாரோ, தற்போது அதே கொள்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசைக்காட்டிலும் வேகமாக அமல்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது அவரது தலைமையிலான பா.ஜனதா அரசு என்ற விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

மேலும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடனான எல்லை பிரச்னையில், காங்கிரஸ் அரசு கோழைபோல் நடந்துகொள்வதாகவும், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இமேஜே மாறிவிடும் என்றெல்லாம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எல்லையில் அதே சீண்டல்கள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக சீனா அவ்வபோது காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது அத்துமீறல்களை அவ்வப்போது நிகழ்த்திக்கொண்டுதான் உள்ளது.

அதிலும் மோடி தனது பதவியேற்புக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களையெல்லாம் அழைத்தது, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஒரு
நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பாகிஸ்தானுடன் உறவு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. அந்த நாட்டில் பதுங்கி இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவால் தேடப்படும் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராஹிம் எங்கிருக்கிறார் என்பதை சொல்வதிலேயே மத்திய உள்துறை இணையமைச்சருக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் முரண்பாடு வெளிப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனங்கள் மற்றும் அமளியை ஏற்படுத்த, பின்னர் ஒருவழியாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று ராஜ்நாத் சிங் அறிவித்தார். 

இலங்கையை பொறுத்தமட்டில் ஈழத்தமிழர் பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான அந்நாட்டு கடற்படையினரின் தாக்குதலுக்கு இன்னமும் ஒரு முடிவு ஏற்பட்ட பாடில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசில் காணப்பட்ட அதே நிலைமைதான் நீடிக்கிறது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், 100 நாளில் மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால், இன்னும் தீர்வு காணப்படவில்லை. மோடியுமே கூட சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, குஜராத் மீனவர்களும் தாக்கப்படுகின்றனர்...தமிழக மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் மத்தியில் ஒரு வலுவான அரசு இல்லாததுதான் காரணம் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றெல்லாம் உறுதி அளித்தார். ஆனால் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டதா என்பதை மோடியும், பா.ஜனதாவினரும்தான் சொல்ல வேண்டும்.

ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

அடுத்ததாக நிலம் கையகப்படுத்தும் மசோதா. முந்தைய காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை கொண்டுவந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பா.ஜனதா. ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் இம்மசோதாவில் விவசாயிகளுக்கு பாதகமான மேலும் பல அம்சங்களை சேர்த்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான மோடி அரசு என்ற குற்றச்சாட்டுக்களும் கடுமையாக முன்வைக்கப்படுகின்றன.

மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால், இச்சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் 2 ஆவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியிலும் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்கு பணிந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக இச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்கிறதோ, அவற்றை செய்து மசோதாவை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து, 3ஆவது முறையாக அவசரச்சட்டம் எனும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இத்தனைக்கும் நிலம் கையகப்படுத்துதலுக்கு மத்திய அரசு சொல்லும் முக்கிய காரணங்கள், நிலம் இல்லாததால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளன என்பதுதான். ஆனால் நிதியின்மை போன்ற வேறு பல காரணங்களால்தான் பெரும்பாலான திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளன என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அரசுக்கு சொந்தமாகவும், பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களாகவும் சுமார் 5 கோடி ஏக்கர்

ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

நிலங்கள் உள்ள நிலையில், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த எந்த தேவையும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வீண் பிடிவாதம் காட்டாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதா இயற்கையாக அதன் முடிவை அடைய அனுமதிக்க வேண்டும். மாறாக மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிப்பதற்குத் துடிப்பது வேறு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதையே காட்டுகிறது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, அந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு முன்பு முந்தைய அரசால் பயனடைந்த சில பெரு நிறுவனங்கள், தற்போது ஏமாற்றத்தில் உள்ளன.

இந்நிலையில், வர்த்தகக் கொள்கைகளில் விரைந்து முடிவெடுத்தும், உள்நாட்டு, சர்வதேச முதலீடுகளுக்கு மேலும் அனுமதியளித்தும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும். இதனால், நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்தைத் தாண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக கருப்பு பணம். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அதைப்பற்றி வாயே திறப்பதில்லை.

இது ஒருபுறமிருக்க, மோடி மீது பிரதானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிர இந்துத்வா கருத்துக்களை வெளிப்படுத்தும் பா.ஜனதாவினரை கண்டிப்பதில்லை என்பது.  மகாராஷ்ட்ராவில் மாட்டிறைச்சிக்கு தடை, கோட்சேவுக்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்தது, காதலர் தினங்கள் கூடாது என்ற எதிர்ப்புகள், சிறுபான்மை மதத்தினரின் மதப் பண்டிகை நாட்களில் சிபிஎஸ்இ பள்ளிகளில் விடுமுறை விடுவதில் செய்த மாற்றங்கள், ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நீதிபதிகளின் மாநாட்டை டெல்லியில் கூட்டியது போன்ற பல்வேறு நிகழ்வுகள், மோடி அரசை மதவாதத்திற்கு ஆதரவானது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள வைத்துள்ளது.

அடுத்ததாக மோடி எங்கு சென்றாலும் முழங்குவது 'மேக் இன் இந்தியா' ( இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம். மாதத்தின் பாதி நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் மோடி, போகும் நாடுகளிலெல்லாம், குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடத்தில் இந்த முழக்கத்தை முன்வைக்கிறார். இது எந்த அளவுக்கு முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்க்கும் என்பது வரும் நாட்களில்தான் தெரியும். அதே சமயம் செல்லும் நாடுகளுக்கெல்லாம் தன்னுடன் தொழிலதிபர் அதானியை மோடி அழைத்து செல்வதும், ஆஸ்திரேலியாவில் நஷ்டமாகி மூடப்பட்ட நிலச்சுரங்க நிறுவனத்தை அதானி நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் செய்ததும், இதற்காக அதானி நிறுவனத்திற்கு நாட்டின் முதன்மையான பொதுவுடமை வங்கியான ஸ்டேட்  பேங்க் ஆப் இந்தியாவை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க வைக்க ஒப்பந்தம் போடப்பட்டதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் பெரும்பாலும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு செல்வதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான காவிரி நதி நீர் பிரச்னையில், குறிப்பாக கர்நாடக அரசின் மேக்கேதாட்டூ அணை கட்டும் முயற்சி, முல்லைப்பெரியார் அணையில் தடுப்பணை கட்ட கேரள அரசு மேற்கொள்ளும் ஆய்வு பணிகளை கண்டும் காணாமல் இருப்பது போன்றவையெல்லாம் மோடி அரசு மீது தமிழகத்தில் விமர்சனங்களை கிளப்பி உள்ளன.

அதே சமயம் மோடி அரசில் நல்ல அம்சங்கள் ஏதுமில்லையா? என்ற கேட்டால், குறிப்பிட்டு சொல்லும்படி வங்கி கணக்கு தொடங்குவது, தபால் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் போன்ற ஒரு சில செலவே இல்லாத திட்டங்களை குறிப்பிடலாம்.

இதில் .'பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா' என்ற வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், எந்த வைப்புத் தொகையும் இல்லாமல், ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கானது. அவ்வாறு கணக்கு தொடங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடும் செய்யப்படும். ஆறு மாதங்களுக்கு பின், 'ஓவர் டிராப்ட்' தொகையாக, 5,000 ரூபாய், வங்கிகள் வழங்கும். அந்த தொகையை முறையாக திருப்பி செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை, கடன் கிடைக்கும். ஏழை மக்கள், கந்து வட்டிக்காரர்களிடமும், அடகு கடைகளிலும் கடன் வாங்கி அவதிப்படுவதை தடுப்பதற்காக, இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது, இதனால் எத்தனை ஏழைகள் பயனடைந்துள்ளனர், எத்தனை வங்கிகள், எத்தனை ஏழைகளுக்கு எவ்வளவு தொகையை கடனாக வழங்கி உள்ளனர் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும். ஏனெனில் கல்விக்கடன் கொடுக்கவே பல வங்கிகள் முன்வராத நிலையில், இதுபோன்று 5,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் கடனை எத்தனை பொதுவுடமை வங்கிகள் ஏழைகளுக்கு கொடுக்க முன்வரும் என்று தெரியவில்லை.

ஓராண்டு ஆட்சி: மோடி சொன்ன 'நல்ல நாள்' வந்ததா?

அதேப்போன்று கடந்த மே 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) போன்ற 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை குறிப்பிடலாம். இதன்படி ஆண்டுக்கு ரூ.12 பிரிமியம் செலுத்தி ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு வசதி பெறுதல், ஆண்டுக்கு ரூ.330 பிரிமியம் செலுத்தி ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு வசதி பெறுதல், அமைப்பு ரீதியில் வராத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்குதல் இத்திட்டத்தில் வரும்.

மற்றபடி முந்தைய வாஜ்பாய் தலைமையிலான தங்க நாற்கர சாலை திட்டம், மன்மோகன் சிங் அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற மக்களுக்கு நேரை பயன்தரும் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்கள் எதையும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசில் இதுவரை காணப்படவில்லை.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் ஓராண்டை நிறைவு செய்கிறோம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தங்களின் ஓராண்டு ஆட்சியின் சாதனையாக   பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

எல்லாம் சரி...மோடி சொன்னபடி மக்களுக்கான அந்த நல்ல நாட்கள் வரப்போவது எப்போது?