Published:Updated:

ஜெ. வழக்கு: மேல்முறையீட்டுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

ஜெ. வழக்கு: மேல்முறையீட்டுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
ஜெ. வழக்கு: மேல்முறையீட்டுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

ஜெ. வழக்கு: மேல்முறையீட்டுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

ஜெ. வழக்கு: மேல்முறையீட்டுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர்  ரவிவர்ம குமார் வலியுறுத்தியுள்ளது இவ்விவகாரத்தில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில அரசு தலைமை வழக்குரைஞர் இரவிவர்ம குமார் மீண்டும் ஒருமுறை பரிந்துரை செய்துள்ளார்.

அதில், கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யாவிட்டால் அது நீதியைக்  கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக இருப்பதால், வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுனரிடம் அனுமதி பெற வேண்டுமா?, மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா? ஆகிய இரு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கும்படி  தலைமை வழக்குரைஞரிடம் கர்நாடக அரசு  விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரவிவர்மா குமார், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்தின் முன் தாக்குப்பிடிக்காது; இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால் நீதிக் கேலிக் கூத்தாக்கப்பட்டு விடும் என்று தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி,‘‘கர்நாடக நீதித்துறை மீதும், வழக்கை தொடர்ந்த அரசு மீதும் நம்பிக்கை வைத்து தான் இந்த வழக்கின் விசாரணையை கடந்த 2003 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமெனில் இவ்வழக்கை இயல்பான முடிவுக்குக்  கொண்டு செல்ல வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்றும் தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்கான அரசு வழக்கறிஞரை நியமிக்க உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. கர்நாடக சட்ட அதிகாரிகள்  நியமன விதிகள் 1977ன் படி அரசு  வழக்குரைஞரை நியமிக்க கர்நாடக அரசுக்கு அதிகாரம் இருப்பதால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வாதிட்ட பி.வி.ஆச்சாரியாவையே உச்சநீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றுவிட்டதால் அவரது விடுதலை தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு கோரிக்கைகள் வலுவிழக்க தொடங்கிவிடும் என அதிமுகவினர் நினைத்ததற்கு மாறாக, தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகளும், கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞரும் வலியுறுத்தி வருவது இவ்விவகாரத்தில் நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

'இன்னும் 3 தினங்களில் முடிவு'

இதனிடையே பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்  உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர்  ரவிவர்ம குமார் எழுதியுள்ள கடிதம் அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
 

அடுத்த கட்டுரைக்கு