ராஜபாளையம் தனித் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சந்திரா, 'நான் தலித்' என்று போலி சாதிச் சான்றிதழ் கொடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட விவகாரம் கோர்ட்டுக்குப் போயிருப்பது குறித்து கடந்த 18.03.07 இதழில் 'எம்.எல்.ஏ. பதவி... வேட்டு வைக்கும் தி.மு.க. - குபீர் குற்றச்சாட்டில் குளோரி சந்திரா' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு சொன்ன நீதிமன்றம், 'சந்திராவின் வெற்றி செல்லாது!' எனஅறிவித்திருக்கிறது.
தி.மு.க-வின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான வி.பி.ராஜனை எதிர்த்து நின்றுதான் சந்திரா வெற்றிபெற்றார். ராஜனின் மகனும் வக்கீலுமான இளம்பரிதிதான் ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கில் முனைப்பு காட்டி யவர். அவரிடம் பேசினோம்.
''சந்திராவின் மோசடி விவகாரம் ஜூ.வி-யில் வெளியானபோது பரபரப்பு உண்டானது. அடிப்படையில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான
சந்திரா, தான் இந்து பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லித்தான் தனித் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில் இது தெரிந்து அதிர்ந்துபோன நான், 'இந்த விவகாரத்தை கோர்ட்டுக்குக் கொண்டுபோகலாம்' என்று அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர்,'நான் ஏற்கெனவே ஒருவாட்டி தோத்துட்டேன். இன்னொரு தடவையும் தோற்க விரும்பலை!' என்று சொல்லிவிட்டார்.
அடுத்து சந்திராவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட என் அத்தை மகன் தங்கமுத்து சார்பாக நானே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். சந்திராவின் சாதிச் சான்றிதழ் மோசடி தொடர்பான அத்தனை ஆவணங்களையும் நண்பர்களின் உதவியோடு திரட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தேன்.
யாராவது 'எஸ்.சி., எஸ்.டி.' என்று பொய்யான தகவல் கொடுத்து சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தால், அதுபற்றி மாவட்ட கலெக்டரே விசாரித்து சான்றிதழை ரத்து செய்யமுடியும். அதன்படி, 'சந்திராவும் அவர் கணவர் சூசைமாணிக்கமும் பிறப்பால் கிறிஸ்துவர்கள். இன்னமும் கிறிஸ்துவர்களாகவே தொடரும் அவர்கள், போலிச் சான்றிதழ் பெற்று தலித்களுக்கான சலுகைகளை அனுபவிக்கிறார்கள்' என்று விருதுநகர் கலெக்டருக்கு புகார் அனுப்பிட்டு, மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தோம். கோர்ட் உத்தரவுப்படி சிவகாசி, பெரியகுளம் ஆர்.டி.ஓ-க்கள் விசாரணை நடத்தி, அவர்கள் கிறிஸ்துவர்கள்தான் என்று கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
நான் திரட்டிக்கொடுத்த ஆவணங்களை சீர்தூக்கிப் பார்த்த நீதிபதி, 'சட்டப் படியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சாதிச்சான்றிதழை சந்திரா பெற்றிருக்கிறார். அவருடைய வெற்றி செல்லாது!' என்று அறிவித்தார். என் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது!'' என்றார்.
|