''ஒற்றுமை விழாவில் மிஸ்ஸான மற்றொரு குடும்பம் முதல்வரின் மகனான மு.க.முத்துவுடையது. அவருடைய புதல்வரும் தலைவரின் பேரனுமான டாக்டர் அறிவுநிதி நேரில் வந்து பிறகு வருத்தப்பட்டாராம். 'முன்கூட்டியே சொல்லியிருந்தால் கோலாகல சந்திப்பில் நாங்களும் இடம் பெற்றிருப்போமே' என்றாராம். பதிலுக்கு கோபால புரம் இல்லத்தில், 'இது இங்கிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. குடும்பத்தின் சிண்டு சிறுசுகள் எல்லாம் கூடி நடத்திய சங்கமம். அவர்களோடு நீங்களும் தொடர்பில் இருந்திருந்தால் தானாகவே இங்கே வந்து சேர்ந்திருப்பீர்கள்' என்று சொல்லப்பட்டதாம்'' என்றவரி டம், ''குடும்பம் ஒரு கதம்பம்!'' என்று நாம் சொல்ல,
''உறவுகள் பிரிந்திருந்தபோது முழுக்க முழுக்க 'கலைஞர் தொலைக்காட்சி'யின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார், சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன். லட்டு லட்டாக திரைப்படங்களை 'கலைஞர்' பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு இப்போது பெருத்த சந்தேகம். இதே ரூட்டில் போகலாமா அல்லது 'சன்' டி.வி. பக்கமும் பார்வையைத் திருப்பலாமா? இதுவரை சிக்னல் கிடைக்கவில்லையாம்!''
''கேயாஸ் தியரி எப்படியெல்லாம் வேலை செய்கிறது..!''
''பேஷாகச் சொன்னீர்... தனிமைப் படுத்தப்பட்ட சோதனையான கால கட்டத்தில் தயாநிதி மாறனுக்குத் துணை யாக இருந்த நம்பிக்கைப் படையில் முக்கியமானவர், வீனஸ் வீரஅரசு! யாரையெல்லாம் தயாநிதி அருகில் சேர்க்கலாம் என்பதை மோப்பம் பிடித்து முன்கூட்டியே ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டு இருந்தவரும் அவரே. 'மாறன் பேரவை' என்ற பெயரில் தனி இயக்கம் தொடங்கும் திட்டத்தோடு தயாநிதியை நேரடியாக சிலர் சுழலுக்குள் இழுக்கப் பார்த்தபோதும், 'அவர்கள் ஆர்வத்தை அணைக்க வேண்டாம். அவசரப்பட்டு நீங்கள் நேராகக் கால் வைக்கவும் வேண்டாம்' என்று நடுவாந்திரமாகச் சொல்லித் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில், 'மாறன் பேரவை' என்று பேனர் வைத்து பரபரப்பு நடத்திய தி.மு.க. 'தைரியசாலி'கள், தற்போதைய ஒற்றுமைப்படலத்தில் வெலவெலத்துப் போயிருக்கிறார்களாம். தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலினோடு மு.க.அழகிரியின் படத் தையும் அட்டகாசமாக சேர்த்து அச்சிட்டு 'நாளை நமதே... நாற்பதும் நமதே' என்று அவசர அவசரமாக போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி, ஒரு குடையின் கீழ் தங்களையும் அடையாளம் காட்டிக்கொள்ள ஆரம்பித் திருக்கிறார்கள்!'' என்று சொல்லிக்கொண்டே,
தன் செல்போனில் நம்பர்களை ஒற்றி காதில் வைத்துக் கொண்ட கழுகார், ''டிசம்பர் ஐந்தாம் தேதிதானே தயாநிதி மாறனின் பிறந்தநாள்? என்னவெல்லாம் ஏற்பாடு அதற்கு?'' என்று கேட்டுக்கொண்டார். அதுபற்றி நம்மிடம் பேசாமல் அப்போலோ பக்கம் வண்டியைத் திருப்பினார்.
''சிகிச்சையில் இருக்கும் வீரபாண்டியாரைப் பார்க்க வந்த முதல்வர், திரும்பிச் சென்றதுமே அவருடைய விவசாய இலாகாவை நேருவிடம் கொடுக்கும் அறிவிப்பு வந்தது. வீரபாண்டியாரின் வாரிசுகள் இதை ரசிக்க வில்லையாம். 'கூடிய சீக்கிரம் அப்பா டிஸ்சார்ஜ் ஆவார். பயப்பட ஏதுமில்லை!' என்று முதல்வரிடம் சொன்ன பிறகும் இந்தப் பறிப்பு தேவையா? அமைச்சர் தா.மோ.அன்பரசன் செயல்படவே முடியாமல் மூன்று மாதத்துக்கும் மேலாக வீட்டிலேயே அடங்கியிருக்க வேண்டிய நிலை வந்தபோது, அவருடைய தொழிலாளர் நல இலாகாவைப் பறித்து யார் வசமாவது ஒப்படைத்தார்களா?' என்று புலம்புகிறார்களாம் இந்த வாரிசுகள்!''
''கழுகாரே... சமீப காலங்களில் ஸ்டாலினுக்குக்கூட வீரபாண்டியார் ரொம்பவே ராசியாகியிருந்தாரே...''
''அது நிஜம்! அதேநேரம், சமீபத்தில் நடந்த தொழிற் சங்கத் தேர்தலில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு வீரபாண்டியார் தரப்பு ஆப்பு வைத்ததும் நிஜம்!'' என்ற கழுகார் ஒரு சல்யூட் வைத்து விட்டுக் கிளம்பியபோது, தாவிச் சென்று கட்டிப் பிடித்து தட்டிக் கொடுத்தோம். திகைப்போடு அவர் பார்க்க...
'கடமையைச் செய்; பலனை எதிர் பார்' என்று சூப்பர் ஸ்டாரே சொல்கிறார். செய்திகளின் சூப்பர் ஸ்டாரான உமக்கு ஏன்தான் இவ்வளவு அடக்கமோ..? விமான நிலையத்தின் எதிரே அமைந்திருக்கும் பறக்கும் மேம் பாலம், தீவிரவாதிகளின் 'ராக்கெட் லாஞ்சர்' இலக்குக்குத் தோதான தளமாக மாறக்கூடும் என்று நீர் கொடுத்த எச்சரிக்கை வெளியான ஒரு சில மணிநேரத்திலேயே 'பாலத்தின் மீது பலமான பாதுகாப்புப் பார்வை படிந்தது' என்று நாளிதழ், சேனலில் எல்லாம் பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறதே...'' என்றோம் பிரமிப்பாக.
''அடியேன் பங்கு அணில் பங்கு!'' என்றபடி அந்தரத் தில் மிதந்தார் கழுகார்.
மொட்டைக் கடுதாசி போட்டேகூட உட்கட்சி எதிரிகளை முச்சூடும் காலி பண்ணிவிடலாம் என்றொரு ஸ்டைல் அ.தி.மு.க-வில் உண்டு. வேண்டாதவர்களைப் பற்றி ஏடாகூடமான புகார்களை எடுத்துவிட்டால், சரிவர விசாரிக்காமலே கட்சித் தலைமை சிரத்தை சீவிவிடும் என்று துடிப்பாகச் செயல்படுபவர்கள் நிறையவே அங்கு உண்டு. 'இத்தனைக்கும் காரணம், ஆராய்ந்து அறியாமல் முடிவெடுக்கும் தலைவிதான்' என்றே கட்சிக்குள் பலர் புலம்பிக்கொண்டிருக்க, அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசும்போது, 'ஜோடனையாக புகார் கொடுத்து அடுத்தவர் வாய்ப்பைக் கெடுக்காதீர்' என்று கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்திருப்பதைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
அ.தி.மு.க-வின் இன்னொரு பரபரப்பு... தோட்டத்தில் செல்வாக்காக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு திடீர் இறங்குமுகம் என்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோட்டத்துக்கு சம்மன் செய்யப்பட்டவரிடம் வெகுநேரம் விசாரணை நடந்ததாம். அதன் பிறகுதான், அவருக்கு இந்த இறங்குமுகம் என்கிறார்கள். விசாரணைப் படலத்தின் உள்விவகாரங்களை அறிய அவருடைய எதிர்ப்பாளர்கள் ஆர்வமோடு காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறார்களாம். |
|