Published:Updated:

ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: திரிவேதி

சென்னை: ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திங்கட்கிழமை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக ரயில் பயணிகளின் கட்டணம், குறிப்பாக 2-ம் வகுப்பு பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டன.

அதேபோல் ரயில்வே பணியாளர்களின் சம்பளம், ரயில் பெட்டிகளின் பராமரிப்பு செலவுகளும் பல மடங்கு உயர்ந்து விட்டன. இதனால் ரயில் பயணிகளின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

எனவே ரயில்வே துறை சிறப்பாக பணியாற்றிட, 8 ஆண்டுகளுக்குப்பிறகு ரயில் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்துவது குறித்தும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் ரயில்வே போர்டு பரிசீலித்து வருகிறது.

ஆயினும், கட்டண உயர்வு குறித்து தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டோம். நாட்டின் 91 சதவீத மக்கள் பயணத்துக்காக ரயில்வேயை நம்பி உள்ளனர். எனவே அவர்களின் நலன் கருதி பொது மக்களிடம் கருத்து கேட்டபின்னர்தான் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்," என்றார் தினேஷ் திரிவேதி.