Published:Updated:

கல்பாக்கம்: வெள்ளை அறிக்கை கோருகிறார் அன்புமணி

விகடன் விமர்சனக்குழு

காஞ்சீபுரம்: கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞர் சங்கத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

அவ்வாறு வெளியிடவில்லையெனில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பா.ம.க. சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

காஞ்சீபுரத்தில் திங்கட்கிழமை நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியே வளமாகிவிடும் என்று மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி கூறி வருகிறார். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு என்ன வளம் ஏற்பட்டு விட்டது?

உலகிலேயே மிகவும் பழமையான தொழில் நுட்பத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையத்தை பார்த்து வெள்ளைக்காரர்களே பயப்படுகின்றனர். அணு கதிர் வீச்சால் எத்தனை பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இல்லையேல் இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுமதியை பெற்று விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்," என்றார் அன்புமணி ராமதாஸ்.