Published:Updated:

கொடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரருக்கு 5 நாள் போலீஸ் காவல்... ஊட்டி நீதிமன்றத்தில் நடந்தது என்ன?!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் திடீர் திருப்பமாக இந்த வழக்கின் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர் தனபாலை ஐந்து நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாகக் கருதப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். அதிலும் குறிப்பாக கனகராஜின் சகோதரர்கள் தனபால், ரமேஷ் ஆகியோரிடம் பலகட்ட விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

கொடநாடு
கொடநாடு

இந்த விசாரணையில் இருவருமே முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த விசாரணைக்குழுவினர், இருவரிடமும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் போலீஸார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலில் கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

தனபால், ரமேஷ் ஆகிய இருவரிடமும் மேல் விசாரணை நடத்த வேண்டும் என விசாரணைக்குழு தரப்பில் மாவட்ட நீதிபதி சஞ்ய் பாபாவிடம் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, தனபாலை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி சுரேஷ் தலைமையிலான போலீஸார், கூடலூர் கிளைச் சிறைக்குச் சென்று, அங்கிருந்து தனபாலை ஊட்டிக்கு அழைத்து வந்தனர். ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஐந்து நாள்கள் போலீஸ் தரப்பில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி சஞ்சய் பாபா.

கொடநாடு
கொடநாடு

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களிர் ஒருவர், "இந்த வழக்கின் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது உட்பட நான்கு வழக்குகளின் கீழ் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்த கனகராஜின் செல்போனை எரித்து அழித்திருக்கிறார்கள். எனவே இவரிடம் மேலும் விசாரணை நடத்தவேண்டியிருக்கிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஐந்து நாள்கள் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதற்கிடையில் தனபால், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு வக்கீல்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தனபாலை காவலில் அழைத்துச் சென்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு பல முக்கியத் தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு