இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க - பா.ம.க இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படுவது தொடர்பான அந்த வாக்குவாதத்தில், “அன்பழகனுக்கு ஆண்மை இருந்தால், சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சீறியிருந்தார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி. வெகுண்டெழுந்த அன்பழகன், ‘‘என் மாவட்டத்தில் பிழைக்கவந்த அன்புமணிக்கே அவ்வளவு திமிர் என்றால், இங்கேயே பிறந்து வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...’’ என்று கர்ஜித்தார். இப்படி வார்த்தைக்கு வார்த்தை ‘என் ஊர்’ என்று பேசுகிற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதிக்குள் நடக்கும் காதுகுத்து, கல்யாணம், துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டுகிறார். `இப்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டுமே பாலக்கோடு தொகுதிக்கு அவர் செய்தது, வேறொன்றுமில்லை’ என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

சிறந்த மண்வளம், ஓரளவு நீர்வளம் கொண்ட தொகுதி பாலக்கோடு. தக்காளி, தேங்காய், பூ உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி இந்தப் பகுதியில் அதிகம். இங்கு விளையும் இளநீர் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை ஓலையிலிருந்து பிரிக்கப்படும் ஈர்க்குச்சிகள் துடைப்பமாக ஆக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மிகவும் பின்தங்கிய தொகுதியான பாலக்கோட்டில், தொடர்ந்து நான்கு முறை வென்று 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் கே.பி.அன்பழகன்.

அமைதியும் எளிமையும் இவரின் அடையாளம். ஆரம்பத்தில் அன்பழகனை ‘வாயில்லா பூச்சி’ என்று ஊருக்குள் கிண்டலடிப்பார்கள். அன்பழகனின் அப்பா கே.டி.பச்சியப்பனும், சித்தப்பா கே.டி.கோவிந்தனும் அரசியல் பின்னணி உடையவர்கள். அவர்கள் இருவரும்தான், 1996 உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் அன்பழகனை நேரடி அரசியலுக்குள் இழுத்துவந்தனர். அ.தி.மு.க சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் அன்பழகன். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். காரிமங்கலம் ஒன்றியச் செயலாளர், தருமபுரி மாவட்டச் செயலாளர் என அடுத்தடுத்து உச்சம் தொட்டார்.

இதற்கிடையே, 2001 சட்டமன்றத் தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார் அன்பழகன். பாலக்கோடு தொகுதியில் வன்னிய சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அவர்களே வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கு யோகம் அடித்தது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு, இரண்டு ஆண்டுகள் கழித்து அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. செய்தித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், சில மாதங்களில் உள்ளாட்சித்துறையையும் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தார்.

2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, மூன்றாவது முறையாகவும் அன்பழகன் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில், சில சர்ச்சைகளில் சிக்கியிருந்ததால் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அன்பழகனை மன்னித்த ஜெயலலிதா, அவரை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமித்தார். இப்படி அதிகாரத்தில் தொடர்ந்தபோதும், தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்று அன்பழகன் மீது குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. ‘தக்காளியிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்திசெய்ய ஆலைகள் அமைக்க வேண்டும்’ என்ற விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை. நீண்டநாள்களாக நிலுவையிலுள்ள அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஒகேனக்கல் மிகைநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

பாலக்கோடு பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.கே.முரளியிடம் பேசினோம். ‘‘தொகுதியின் வளர்ச்சிக்குப் பெரிய திட்டங்களை அன்பழகன் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாலக்கோடு கூட்டுறவுச் சர்க்கரை ஆலை இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், கரும்புச் சாகுபடி பரப்பும் குறைந்துவிட்டது. கரும்புக்கு பதில் மாற்றுப் பயிர் செய்யும் நிலையும் வந்துவிட்டது. விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என அன்பழகன் மீது விவசாயிகள் கொதிப்பில் இருக்கிறார்கள். மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள அன்பழகன், வீட்டுக்கு வீடு கணக்கெடுத்து ஓட்டுக்கு துணியும் பணமும் கொடுத்துவருகிறார்’’ என்றார் காட்டமாக.

அமைச்சர் அன்பழகனிடம் பேசினோம். ‘‘தொகுதிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறேன். யாரும் என்னைக் குறைசொல்ல முடியாது. நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை. 1,783 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் திட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஆயிரம் ஏக்கரில் முதல் தொழிற்பேட்டையை அமைக்கவிருக்கிறோம். தொடர்ந்து, தனியார் இடத்தையும் கையகப்படுத்தி 783 ஏக்கரில் இரண்டாவது தொழிற்பேட்டை தொடங்கப்படும். ஜெர்த்தலாவ் கால்வாயுடன் புலிக்கரை ஏரியை இணைக்கும் திட்டம், அலியாளம் அணைக் கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டம், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்ததும், இந்தப் பணிகளை நிறைவேற்றி முடிப்போம்’’ என்றார்.

தொகுதியில் வன்னியர்கள் பெரும் பான்மையாக இருந்தாலும், கொங்கு வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்களும் கணிசமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் அமைச்சர் அன்பழகன் ஐந்தாவது முறையாகக் களமிறங்கவிருக்கிறார். முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலும், அன்பழகனின் தனிப்பட்ட செல்வாக்கு, தன் சமூக மக்களின் வாக்கு, தொகுதியில் தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவிழந்திருப்பது ஆகியவற்றால், பாலக்கோடு தொகுதியில் மீண்டும் இரட்டை இலை மலர்வதற்கான வாய்ப்பே அதிகம் தென்படுகிறது!