Published:Updated:

என்ன செய்தார் அமைச்சர்? - சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

சேவூர் இராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
சேவூர் இராமச்சந்திரன்

- இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் - ஆரணி தொகுதி

என்ன செய்தார் அமைச்சர்? - சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

- இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் - ஆரணி தொகுதி

Published:Updated:
சேவூர் இராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
சேவூர் இராமச்சந்திரன்

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் இராமச்சந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோயில் கோயிலாகச் சுற்றியதாலோ என்னவோ... ஆரணி தொகுதியைக் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார் என்று சாடுகிறது எதிர்க்கட்சியான தி.மு.க!

ஆரணிக்கு அருகிலுள்ள சேவூர் கிராமத்தில், நெசவுத்தொழில் செய்துகொண்டிருந்தவர் சோமசுந்தரம். அவருக்கு மகனாகப் பிறந்த இராமச்சந்திரன், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கிராம உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். உறவினர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்து பந்தாவாக வலம்வந்ததைப் பார்த்து, இராமச்சந்திரனுக்கும் அரசியல் ஆசை பூத்தது. கிராம உதவியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க-வில் இணைந்தவர், ஒன்றிய கவுன்சிலருக்குப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பிறகு, இராமச்சந்திரனுக்கு ஏறுமுகம்தான். சொந்த கிராமமான சேவூரில் இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, கட்சிப் பொறுப்புகளும் தேடிவந்தன. அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர், தொகுதிச் செயலாளர் என அடுத்தடுத்து உச்சம் தொட்டார்.

இதற்கிடையே, 2016 சட்டமன்றத் தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார் இராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர் மீதிருந்த பற்றால், ‘இராமச்சந்திரன்’ என்ற பெயர்மீது ஜெயலலிதாவுக்கு அளப்பரிய மரியாதை உண்டு. அந்த அடிப்படையில், சேவூர் இராமச்சந்திரனுக்கு அடித்தது யோகம். ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு திருவண்ணாமலை மாவட்ட கோட்டாவில் அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. அதன் பிறகு இராமச்சந்திரனின் ‘கிராஃப்’ எகிற ஆரம்பித்தது. சர்ச்சைகளும் அணிசேர ஆரம்பித்தன.

தன் இரண்டு மகன்களான சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோரின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துகளை சேவூர் இராமச்சந்திரன் வாங்கிக் குவித்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. சேத்துப்பட்டு சாலையில், சர்வதேசத் தரத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை இவர் கட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. மூத்த மகன் சந்தோஷ்குமாருக்கு கெமிக்கல் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தவர், இளைய மகன் விஜயகுமாரை மட்டும் உதவியாளராகத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். சேவூர் இராமச்சந்திரனின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் விஜயகுமார்தான் பார்த்துக்கொள்கிறார்.

சேவூர் இராமச்சந்திரன்
சேவூர் இராமச்சந்திரன்

அறநிலையத்துறை அமைச்சராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கோயில் குடமுழுக்குகளை மாநிலம் முழுவதும் முறையாக நடத்தியிருப்பதை சேவூர் இராமச்சந்திரனின் சாதனையாகச் சொல்கிறார்கள். மற்றபடி தொகுதியின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை.

ஆற்காடு, போளூர், செய்யாறு, பெரணமல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஆரணி தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து, செய்யாறு அல்லது ஆரணியைத் தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் 30 ஆண்டுக்காலக் கோரிக்கை. அதேபோல, பட்டுக்குப் புகழ்பெற்ற இந்த ஊரில், ‘பட்டுப்பூங்கா’ அமைத்துத் தர வேண்டும் என்பதும் நெசவாளர்களின் எதிர்பார்ப்பு. அமைச்சராக இருந்தபோதும், இந்தக் கோரிக்கைகளை சேவூர் இராமச்சந்திரன் நிறைவேற்றாதது, தொகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரத்துக்காக, ‘50 வயதைக் கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என நெசவாளர்கள் கேட்டிருந்தார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் கூடுதலாகத் திறக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்கள். இந்தக் கோரிக்கைகளையும் அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், சேவூர் இராமச்சந்திரனை தி.மு.க சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.எஸ்.பாபுவிடம் பேசினோம். ‘‘தொகுதியில் பட்டுப்பூங்கா, சிப்காட் தொழிற்பேட்டை, அரசு கலைக்கல்லூரி கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தவர், அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டமும் முடங்கிக்கிடக்கிறது. போக்குவரத்து நெரிசல், பேருந்து நிலைய வசதி எனப் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. அரசு மருத்து வமனையை மேம்படுத்தாததால், அவசர சிகிச்சைகளுக்கு வேலூர் செல்ல வேண்டியிருக்கிறது. மக்கள் பணத்தைச் சுருட்டுவது எப்படி என்பதில் மட்டுமே ஐந்து ஆண்டுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார் சேவூர் இராமச்சந்திரன். இவர் அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை’’ என்றார் கோபமாக.

ஆர்.எஸ்.பாபு
ஆர்.எஸ்.பாபு

அமைச்சர் சேவூர் இராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டமும் கல்வி மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரிகளில் குடிமராமத்துப் பணிகளைச் செய்து கமண்டலநாத நதி, செய்யாறு படுகை ஆகியவற்றில் ஐந்து தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறேன். நகராட்சிப் பகுதியில் மட்டும் 47 கோடி ரூபாய்க்கு தார்ச்சாலைகளை அமைத்திருக்கிறேன். கோட்டை மைதானத்தில் 800 மீட்டருக்கு நடைப்பயிற்சி தளம், அரசு மருத்துவமனையில் ரத்தச் சுத்திகரிப்பு நிலைய கட்டடம் எனத் தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆரணியைத் தலைநகராகக்கொண்டு புதிய மாவட்டம் அறிவிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டன. பட்டுப்பூங்கா அமைப்பதற்கான 49 சதவிகிதப் பங்குத்தொகையைச் செலுத்த பொதுமக்களில் யாரும் முன்வரவில்லை. அதனால், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ரயில் பாதை திட்டத்துக்கும் நில ஆர்ஜிதம் செய்துவிட்டோம். தொழிற்பேட்டை, அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான பணிகளுக்குப் போதிய நிதியில்லாத காரணத்தால் அறிவிப்பு வெளியிடப் படவில்லை. தொகுதிக்காக வைத்த அனைத்து கோரிக்கை களையும் முதலமைச்சர் செய்துகொடுத்திருக்கிறார்’’ என்றார்.

என்ன செய்தார் அமைச்சர்? -  சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

தொகுதியில் வன்னியர், முதலியார் சமூக வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. அ.தி.மு.க-வில் போட்டியிட அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மீண்டும் சீட் கேட்கிறார். அமைச்சராக இருந்தும் தொகுதி மக்களின் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பதாலும் தற்போதைய நிலவரப்படி ஆரணியில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்பே அதிகம் தென்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism