Published:Updated:

நான்கு வருடம்... 100 கோடி... ஜெயலலிதாவைக் கலங்கடித்த குன்ஹா தீர்ப்பின் ஆச்சர்யங்கள்!

ஜெயலலிதா
News
ஜெயலலிதா ( Vikatan )

ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை, தீர்ப்புக்கு முன்பே மோப்பம் பிடித்துவிட்டது மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. அதன் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி 5-ம் ஆண்டில், குன்ஹா தீர்ப்பின் கதையைப் படிப்போம்.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று!

சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அரசியல் வரலாற்றில் முக்கியமான தடத்தைப் பதித்த தினம் 2014 செப்டம்பர் 27-ம் தேதி. இந்தியாவிலேயே முதன்முறையாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பதவி இழந்த முதல் முதலமைச்சர் என்கிற வரலாற்றை அன்றைக்குப் படைத்தார் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதத்தையும் வழங்கி, அன்றைய தினம் தீர்ப்பு எழுதினார் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா

குன்ஹா
குன்ஹா
Vikatan

ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை, தீர்ப்புக்கு முன்பே மோப்பம் பிடித்துவிட்டது மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. அதன் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதற்குள் நுழைவதற்கு முன்பு, முன் கதையைப் பார்ப்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒருவழியாக 2014 ஆகஸ்ட் இறுதியில் முடிவுக்கு வந்தது. பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் இருந்த சிறப்பு நீதிமன்றத்தில்தான் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்
பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்
Vikatan

"கர்நாடக குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை முடிக்கப்பட்ட வழக்குகளில், 14 நாள்களுக்குள் தீர்ப்பு எழுதப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் ஆவணங்கள் அதிகமாக இருப்பதால் 14 நாள்களுக்குள் தீர்ப்பு அளிக்க முடியாது என்பதால் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பை அளிக்கிறேன். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்'' என 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் நீதிபதி குன்ஹா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே புகைச்சல் நிலவி வரும் சூழலில், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அது சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் எனக் கருதி, கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஆலோசித்திருக்கிறார் நீதிபதி குன்ஹா. அதன் பிறகே தீர்ப்புக்குத் தேதி குறித்திருக்கிறார்.

ஜெயலலிதாவை ரவிசங்கர் பிரசாத் சந்தித்தபோது செய்தித் துறை வெளியிட்ட போட்டோ...
ஜெயலலிதாவை ரவிசங்கர் பிரசாத் சந்தித்தபோது செய்தித் துறை வெளியிட்ட போட்டோ...

தீர்ப்புத் தேதி அறிவிக்கப்பட்ட அதே தினத்தில், ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இவர் ஜெயலலிதாவுக்காக முன்பு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர்.

2014 செப்டம்பர் 20-ம் தேதி சனிக்கிழமை உகந்த நாள் இல்லை என்பதால் ஜெயலலிதா அப்செட். அதே நேரம் வழக்கு நடைபெற்று வந்த பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் 96 நீதிமன்றங்கள் இருக்கின்றன. 7 அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த வளாகம் பெங்களூரின் மையப் பகுதியான காந்தி நகரில் இருக்கிறது. அங்கே தீர்ப்புக்காக ஆஜர் ஆகும்போது நீண்ட படிக்கட்டுகளில் ஜெயலலிதா ஏற வேண்டியிருக்கும். இதனால், மீடியாவினர் எளிதாக அவரை படம் எடுக்கமுடியும். இந்த இரண்டு விஷயங்களைத் தவிர்க்க நீதிமன்றத்தை மாற்ற நினைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா
ஜெயலலிதா
Vikatan

`விடுதலைப் புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்ற வேண்டும்' என குன்ஹா கோர்ட்டில் செப்டம்பர் 15-ம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குன்ஹா, `பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரா சிறை வளாக நீதிமன்றத்தில் செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பதில் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்' என்றார்.

பரப்பன அக்ரஹாரா சிறை
பரப்பன அக்ரஹாரா சிறை
Vikatan

மீடியா கண்ணில் படாமல் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்குள் போகலாம் என்கிற ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறியபோதும், சனிக்கிழமையை அவரால் தவிர்க்க முடியவில்லை. தீர்ப்புதள்ளி வைக்கப்பட்ட செப்டம்பர் 27-ம் தேதியும் சனிக்கிழமைதான். தீர்ப்பு தேதி ஒருவாரம் தள்ளிப் போடப்பட்டாலும் சனிக்கிழமை என்பதை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `தீர்ப்பு தேதி சனிக்கிழமையாக இருக்கிறது. அதனால், வேறு கிழமைக்கு மாற்ற வேண்டும்' என நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை வைத்தார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார். அது கைகூடவில்லை.

குமார்
குமார்
Vikatan

பொதுவாக விடுமுறை நாள்களில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது வழக்கமில்லை. "மிக முக்கியமான வழக்கு என்பதால், விடுமுறை தினம் தேர்வு செய்யப்பட்டது. விடுமுறை தினத்தன்று தீர்ப்பு வழங்கினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை பெரிய அளவில் இருக்காது. முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் அரசுப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது'' என அதற்குக் காரணங்கள் சொல்லப்பட்டன. சனிக்கிழமையைத் தவிர்க்க முடியாத அப்செட்டில் ஜெயலலிதா இருந்ததாலும் "27-ம் தேதியின் கூட்டுத்தொகை 9. அது அம்மாவுக்கு ராசியான எண்'' எனச் சமாதானம் சொல்லிக்கொண்டார்கள் அ.தி.மு.க-வினர்.

செப்டம்பர் 27-ம் தேதியும் வந்தது. அன்று சென்னையில் மழை தூறிக் கொண்டிருந்தது. காரில் ஏறி, அவர் புறப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்தார்கள். சிரித்த முகத்துடன் விமானத்தில் ஏறினார்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும். தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பதால் `மதிய உணவு கொண்டு வர வேண்டாம்' எனச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா. நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் பார்த்து சென்னையிலிருந்து நம்பிக்கையோடு பெங்களூர் புறப்பட்டார் ஜெயலலிதா. அந்த நம்பிக்கை பரப்பன அக்ரஹாராவில் சுக்குநூறானது. ஜெயலலிதாவுக்கு நான்கு வருடச் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி குன்ஹா.

பரப்பன அக்ரஹாரா
பரப்பன அக்ரஹாரா
Vikatan
தமிழகத்தில் அந்தத் தீர்ப்பை முதலில் தெரிந்து கொண்டவர் கருணாநிதிதான்.

நீதிமன்றத்தில் மீடியாவினர் அனுமதிக்கப்படாததால், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம் உடனடியாக தெரியவில்லை. தி.மு.க. தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தாமரை செல்வன், தீர்ப்பு விவரம் தெரிவிக்கப்பட்டதுமே அதை முதலில் கருணாநிதிக்கு போனில் தெரிவித்தார். தமிழகத்தில் அந்தத் தீர்ப்பை முதலில் தெரிந்து கொண்டவர் கருணாநிதிதான். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்துத்தான் தீர்ப்பு விவரம் இந்தியா முழுவதும் தெரிந்தது.

குன்ஹா தீர்ப்பை வாசித்து முடிந்ததும், "உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தைவிட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்தப் பெஞ்சில் போய் உட்காருங்கள்'' எனச் சொல்லிவிட்டு, குன்ஹா எழுந்து போனார். வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் ஜெயலலிதா. ஒரு முதல்வரை இந்த இடத்தைவிட்டு எங்கேயும் நகரக் கூடாது' என குன்ஹா சொன்னபோது ஜெயலலிதாவின் ஆளுமை அங்கே சரிந்து விழுந்தது.

ஐ.பி
ஐ.பி

இந்த தீர்ப்புக்கு முன்பு நடந்த விஷயங்கள் சுவாரஸ்யமானவை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனையா... இல்லை விடுதலையா என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடிக்கப் பல தரப்பும் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றது மத்திய அரசின் உள்நாட்டு உளவுப் பிரிவான ஐ.பி-தான்.

2014 செப்டம்பர் மாதம் தொடங்கியதுமே பெங்களூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தீர்ப்பு தேதியை நீதிபதி குன்ஹா அறிவித்த அந்த தினத்திலிருந்து தமிழக, கர்நாடகா மாநில அரசுகள், அ.தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி., கட்சிகள் எனப் பல தரப்பும் தீர்ப்பை முன்கூட்டியே அறிந்துகொள்ள முற்பட்டன. மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவினர் களமிறங்கினார்கள். ஆனால், இந்திய உளவுத் துறையான IB-தான் (Intelligence Bureau) முன்கூட்டியே தீர்ப்பை மோப்பம் பிடித்தது.

குன்ஹா
குன்ஹா
Vikatan

வழக்கு விசாரணையின்போது குன்ஹா நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகிக் கொண்டிருந்த மீடியாவினர், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அங்கே போவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், ஐ.பி ஆட்கள் தீர்ப்பு தேதி வரையில் அங்கேயே வட்டமடித்தார்கள். குன்ஹா வழக்கம்போல நீதிமன்றம் வந்து போய்க்கொண்டிருந்தார். நீதிமன்றத்தில் வேறு யாரையும் அருகில் சேர்க்கவில்லை.

``புகழ்பெற்ற அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகர் ஒருவர், குன்ஹா வீட்டில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். `ஜட்ஜ் வீட்டில் குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடப்படும் காகிதங்கள் அனைத்தையும் குப்பைத் தொட்டியில் கொட்டாமல் அப்படியே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடு' என அந்தப் பிரமுகர் கட்டளையிட்டார்.

இன்னொரு பக்கம் அ.தி.மு.க-வினரும் தமிழக உளவுத் துறையினரும் தீர்ப்பு எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார்கள். இதுபற்றி கர்நாடகா உளவுத் துறையினர் ஒரு விஷயத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். ``புகழ்பெற்ற அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகர் ஒருவர், குன்ஹா வீட்டில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். `ஜட்ஜ் வீட்டில் குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடப்படும் காகிதங்கள் அனைத்தையும் குப்பைத் தொட்டியில் கொட்டாமல் அப்படியே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடு' என அந்தப் பிரமுகர் கட்டளையிட்டார். அந்த வேலைக்காரர் பணத்தை அந்தப் பிரமுகரிடமே திருப்பி அளித்துவிடுகிறார். காரணம் அந்த வேலைக்காரரால் ஒரு குப்பை காகிதத்தைக்கூட எடுத்துவர முடியவில்லை. தீர்ப்பு தொடர்பான வரைவு பேப்பர்கள், குறிப்புகள், பிரின்ட்-அவுட்களை எல்லாம் வேறு யாருடைய கைகளுக்கும் போய்விடக் கூடாது என உஷாராக தீ வைத்து எரித்து, டாய்லெட்டில் போட்டுவிடுகிறார். இதனால், இந்த முயற்சி தோற்றுவிடுகிறது'' என்றார்கள்.

ஜெயலலிதாவும் சசிகலாவும்...
ஜெயலலிதாவும் சசிகலாவும்...

ஐ.பி. அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள நீதித்துறை வட்டாரத்தில் புகுந்து புறப்பட்டார்கள். குன்ஹா நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இருவரின் உரையாடல்கள் திருப்பத்தைத் தருகிறது. "இந்த ஸ்டாம்புகளைப் பயன்படுத்த வேண்டாம். புது ஸ்டாம்புகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் பயன்படுத்த வேண்டும்'' இது உரையாடலின் சாரம்சம். அந்தப் பணியாளர்களிடம் ஐ.பி. அதிகாரிகள் பேச்சுக் கொடுத்தபோது, ஒரு டஜன் ரப்பர் ஸ்டாம்புகள் குன்ஹா நீதிமன்றத்துக்கு வரப் போகிறது என்கிற தகவலைத் தெரிந்துகொள்கிறார்கள். "வேறு தீர்ப்புகள் எதுவும் இருக்கின்றனவா?'' என விசாரித்து `இல்லை' என்பதை உறுதி செய்துகொள்கின்றனர். "வேறு என்னவெல்லாம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது?'' எனத் துருவிய போது "ஜெராக்ஸ் இயந்திரம்'' எனப் பதில் வந்திருக்கிறது. `ஏற்கெனவே ஜெராக்ஸ் இயந்திரம் இருக்கும்போது, இன்னொன்று எதற்கு?'' என ஐ.பி அதிகாரிகள் கேட்டபோது, "நல்ல நிலையில்தான் ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் இருக்கு. ஆனால், அதிக திறன் கொண்ட லேட்டஸ்ட்டான இன்னொரு இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது'' எனச் சொன்னார்கள் அந்தப் பணியாளர்கள்.

இந்தத் தகவலை உறுதி செய்யக் கர்நாடகாவின் சட்டத் துறைக்குள் நுழைகிறது ஐ.பி. நீதிபதி குன்ஹாவின் அலுவலகத்திலிருந்து கர்நாடகா சட்டத் துறைக்குக் கடிதம் எழுதிய விஷயம் அப்போது தெரியவந்தது. `அதிக திறன் கொண்ட ஜெராக்ஸ் இயந்திரம் உடனடியாகத் தேவை' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கேட்கப்பட்ட ஒரு டஜன் ரப்பர் ஸ்டாம்புகளும் புத்தம் புது ஜெராக்ஸ் இயந்திரமும் நீதிமன்றத்தில் வந்து இறங்குவதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்தார்கள் ஐ.பி. அதிகாரிகள்.

குன்ஹா
குன்ஹா
Vikatan

வழக்கில் ஒருவரை விடுதலை செய்வதாக இருந்தால் தீர்ப்பு நகலை உடனடியாக வழங்க வேண்டியதில்லை. ஆனால், தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக நகல்கள் வழங்கப்பட வேண்டும். விடுதலை செய்வதாக இருந்தால் தீர்ப்பின் முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும்தான் நீதிமன்றத்தின் ரப்பர் ஸ்டாம்ப் பதிப்பார்களாம். தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஸ்டாம்ப் பதிக்க வேண்டுமாம். பொதுவாக ஒருவரை விடுதலை செய்வதாக இருந்தால் தீர்ப்பு பக்கங்கள் குறைவாகவும் தண்டனை விதிக்கப்பட்டால் அதிகமாக இருக்கும். இதெல்லாம் நீதித்துறை வட்டாரத்தில் பேசப்படும் விஷயம். `தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக நகல்கள் வழங்கப்பட வேண்டும்' என்பதால்தான் ஜெராக்ஸ் இயந்திரமும் ரப்பர் ஸ்டாம்பும் பெறப்பட்டிருக்கலாம் என முடிவு செய்தது ஐ.பி.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், வழக்கு பதிவு செய்த தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி, அரசு மற்றும் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் ஷிவாரே மராடி, குமார், பன்னீர்செல்வம், மணிசங்கர், அமீத் தேசாய், அன்புக்கரசு, அசோகன் ஆகிய 13 பேர்களுக்கும் தீர்ப்பு நகலை அளிக்க வேண்டும். இவர்கள் தவிர தி.மு.க. வழக்கறிஞர்கள் இருவர், நீதிபதி குன்ஹா, நீதிமன்ற அலுவலகம், கர்நாடகா உயர் நீதிமன்றம், கர்நாடகா அரசு, தமிழக ஆளுநர், தமிழ்நாடு சட்டசபைச் செயலாளர், ஊடகம் என 22 தரப்பினருக்குத் தீர்ப்பு விவரம் அளிக்க வேண்டும்.

பெங்களுரூ நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி...
பெங்களுரூ நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி...
Vikatan

1,136 பக்கங்களுக்குத் தீர்ப்பு எழுதினார் நீதிபதி குன்ஹா. இந்த 1,136 பக்கங்களை 22 காப்பி எடுக்க வேண்டும் என்றால், 24,992 பக்கங்களுக்கு ஜெராக்ஸ் போட வேண்டும். அதற்குச் சக்தி வாய்ந்த ஜெராக்ஸ் இயந்திரம் தேவை. அதற்காகத்தான் அதிக திறன் கொண்ட புதிய ஜெராக்ஸ் இயந்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.

தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் கோர்ட் சீல் வைக்கப்பட்டு, நீதிபதி கையொப்பமிடுவார். இப்படி ஆயிரக்கணக்கான பக்கங்களில் சீல் வைப்பதற்காகத்தான் 12 ரப்பர் ஸ்டாம்புகள் புதிதாக வாங்கப்பட்டன. இதை வைத்துத்தான், ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டது ஐ.பி. `ஆயிரக்கணக்கில் ஜெராக்ஸ் போடுகிறார்கள்' என்றாலே தீர்ப்பில் நீதிபதி பின்னி எடுத்திருக்கிறார் என முடிவுக்கு வந்து, அதை உறுதியும் செய்தார்கள். ஐ.பி அளித்த ரிப்போர்ட் மத்திய அரசுக்குப் போய்ச் சேர்ந்தது.

பவானி சிங்
பவானி சிங்
Vikatan

1,136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 894 பக்கங்கள் வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், சாட்சிகள் ஆகியவை பற்றி தனித்தனித் தலைப்புகளில் எழுதியிருந்தார் குன்ஹா. 895 முதல் 907 வரையிலான பக்கங்களில் தீர்ப்பும், 908 முதல் 910 வரையிலான பக்கங்களில் தண்டனையும் எழுதப்பட்டது. தீர்ப்பு விவரங்களை நீதிபதி சொல்லச் சொல்ல அவருக்குக் கீழே இருக்கும் ஸ்டெனோ, கிளார்க் ஆகியோர்தான் டைப் செய்வார்கள். ஆனால், இறுதிப் பகுதியான தண்டனை விவரங்களை நீதிபதியே தன் கைப்பட எழுதுவார். அல்லது டைப் செய்வார். தண்டனை விவரம் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் ஏற்பாடு இது. அந்த கடைசிப் பகுதியை `ஆப்ரடிவ் பார்ட் ஆஃப் தி ஜட்ஜ்மென்ட்' என்பார்கள். இதை குன்ஹாவே எழுதினார்.

தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை விவரித்தார்கள் கர்நாடகா உளவுத் துறையினர். "தீர்ப்பு எழுதிய நேரத்தில் தன் குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பிவிட்டார் குன்ஹா. வீட்டுப் பணியாளர்களை தன் அறைக்குள் அவர் அனுமதிக்கவில்லை. போன் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

கிறிஸ்துவரான நீதிபதி குன்ஹா பல வருடங்களாகத் தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் இருக்கும் பாதிரியார் ஒருவரைப் பார்க்கப் போய் வருவார். டிராவல்ஸ் காரில்தான் அவர் சென்றுகொண்டிருந்தார். இதையறிந்து அந்த பாதிரியாரைச் சிலர் சந்தித்திருக்கிறார்கள். அவரும் குன்ஹாவிடம் பேசியிருக்கிறார். அதன்பின் அங்கே போவதையே குன்ஹா நிறுத்திவிட்டார்'' என்றார்கள்.
நீதிமன்றத்தில் சுதாகரன்
நீதிமன்றத்தில் சுதாகரன்
Vikatan

குன்ஹா தீர்ப்பு வெளியானபோது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. மத்தியில் மோடி ஆட்சி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 'மோடியா... லேடியா?' என ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்தார். அந்த தேர்தல் நடந்துமுடிந்து நான்கு மாதத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது.

தமிழக உளவுத் துறை வேறு வகையில் விசாரித்துக் கொண்டிருந்தது. கர்நாடகாவில் உள்ள சோர்ஸ்கள் மூலம் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தது. அப்போது பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் நடக்கும் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. சிறையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மராமத்து மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. சிறை சுவர்கள் திடீரென வெள்ளை பூசிக் கொண்டன. இந்த விஷயங்களை வைத்து `தீர்ப்பு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக இருக்காது' என முடிவு செய்தது தமிழக உளவுத் துறை. அப்போது உளவுத் துறை ஐஜி-யான அம்ரேஷ் பூஜாரி, ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் அனுப்பினார்.

ஜெயலலிதாவுடன் அம்ரேஷ் பூஜாரி
ஜெயலலிதாவுடன் அம்ரேஷ் பூஜாரி

கொதித்துப் போன ஜெயலலிதா, அம்ரேஷ் பூஜாரியை செப்டம்பர் 23-ம் தேதி தூக்கியடித்தார். அதாவது குன்ஹா தீர்ப்புக்கு நான்கு நாள்கள் முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் அளித்த ரிப்போர்ட்டில் `முதல்வர் விடுதலை ஆவார்' எனச் சொல்லியிருந்தார். "ஒரே காவல் துறையில் ஏன் இப்படி இரண்டு மாதிரியான ரிப்போர்ட் வருகிறது'' என ஜெயலலிதா கேட்டிருக்கிறார். அதில் அம்ரேஷ் பூஜாரியை அவருக்கு வேண்டாத அதிகாரிகள் பழிவாங்கிவிட்டார்கள்.

குன்ஹா தீர்ப்புக்குப் பிறகுதான் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய் பரப்பன அக்ரஹாரா சிறையில் 22 நாள்கள் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைத்து 217 நாள்கள் வெளியே வராமல் போயஸ் கார்டனிலே முடங்கிக் கிடந்தார். அதன்பிறகு கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பால் விடுதலை ஆகி மீண்டும் முதல்வர் ஆனார்.

அப்போலோ மருத்துவமனை...
அப்போலோ மருத்துவமனை...
Vikatan

குன்ஹா தீர்ப்பு அளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. `சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள்' என நீதிபதி குன்ஹா தெரிவித்த போது, உடனே ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம், "என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்டுவதற்காகப் போடப்பட்ட வழக்கு இது. என் உடல் நிலை சரியில்லை. அதனால், குறைந்தபட்ச தண்டனை அளியுங்கள்'' என்றார். பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொன்னது போலவே அவரது உடல்நிலை சரியில்லை என்பது அடுத்த இரண்டாண்டில் நிரூபிக்கப்பட்டது. 2014 செப்டம்பரில் குன்ஹா தீர்ப்பு எழுதினார். 2016 செப்டம்பரில் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனார்.

சுதந்திர இந்தியா வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்!

ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா முதல்வர் ஆக முற்பட்ட நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் குன்ஹா தீர்ப்பு உயிர் பெற்றது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்துசெய்து குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். சசிகலாவின் முதல்வர் கனவுக்கு ஆசிட் ஊற்றியது குன்ஹாவின் தீர்ப்பு. எந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் குன்ஹா தீர்ப்பு எழுதினாரோ அதே வளாகத்தில் உள்ள சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தல், நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் கர்நாடகா நீதித்துறை வட்டாரத்துக்குத் தெரியும். அப்படியான சூழலில் சுதந்திர இந்தியா வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்!