Published:Updated:

Long Read - திமுக: அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழிக்க முடியாத அரசியல் அஞ்சான்! #TNelections2021

திமுக
திமுக

திமுக-வின் உயிர்நாடியாக இருந்த திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இருப்பினும், ``திராவிட நாட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” எனத் தனது இக்கட்டான சூழலை வெளிப்படுத்தினார் அண்ணா.

'வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள்! இந்தியா விடுதலை பெற்றது! ஆனந்த சுதந்திரம்அடைந்துவிட்டோம்!' என நாடே மகிழ்ச்சிக் களிப்பில் இருந்தபோது, ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினார்... “நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இதுவரை பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இனிமேல் இந்த டெல்லிக்காரனிடம் அடிமையாக இருக்கப்போகிறோம். ஆட்சி கைமாறியிருக்கிறதே தவிர நாம் அடிமைகள்தான். எனவே, ஆகஸ்ட் 15 நமக்கு துக்கநாள்!” அந்த ஒருவர்தான் திராவிட மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி. அவருடைய திராவிடர் கழகத்தின் பயிற்சிப் பட்டறையில் பட்டைத்தீட்டப்பட்ட கூர்வாள்தான் பேரறிஞர் அண்ணா. "நாங்கள் இந்தியர்கள், எங்கள் நாடு பாரதம்" என இந்தியத் துணைக்கண்டம் முழுக்கக் கூக்குரலிட்டபோது, "நாங்கள் திராவிடர்கள், எங்கள் நாடு திராவிட நாடு. அடைந்தே தீருவோம் தனித் திராவிட நாடு!" என்று தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்து எதிர்க்குரல் முழங்கினார்கள் திராவிடர் கழகத் தோழர்கள். அந்த உரிமை நாதத்தின் அடித்தோன்றலில் விழைந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

பேரறிஞர் அண்ணா - பெரியார்
பேரறிஞர் அண்ணா - பெரியார்

இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டே ஆண்டுகளில், 1949, செப்டம்பர் 17-ம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில்வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா. பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றத்துக்கு ஆரம்பப்புள்ளி என்றாலும், கொள்கை, கோட்பாட்டளவில் பெரிய மாறுபாடு இருக்கவில்லை. அதனால்தான், திமுக-வைத் தொடங்கிய அன்று பேசிய அண்ணா,  “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது, திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல் மோதல் எதுவும் கிடையாது” என்று அறிவித்தார். மேலும்,“நமக்கெல்லாம் அப்போது நல்வழிகாட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்” என்று கூறி திமுக-வின்பொதுச்செயலாளராகவே பதவியேற்றுக்கொண்டார் அண்ணா.

கறுப்பும் சிவப்பும் சரிபாதி நிறமாக கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!அடைய வேண்டிய இலக்கோ திராவிட நாடு!” எனகொள்கை முழக்கமிட்டுவந்த திராவிட முன்னேற்றக் கழகம், 1952-ம் ஆண்டு நடைபெற்றசு தந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில், போட்டியிட மறுத்தது. காரணம், ``திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறுசெய்யும் வகையிலும், ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” எனக் கூறியது. இருப்பினும் தங்கள் கொள்கைகளை, திராவிட நாடு கோரிக்கையை ஏற்கும் கட்சியின் வேட்பாளர்களை மட்டும்ஆதரிப்பதாக அறிவித்தது தி.மு.கழகம்.

கருணாநிதி
கருணாநிதி

அதைத் தொடர்ந்து, 1953-ம் ஆண்டு அன்றைய முதல்வர் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்துப் போராட்டம், சித்தூர் தமிழர்களின் போராட்டத்தை "நான்சென்ஸ்” என்று கூறிய பிரதமர் நேருவை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம், கல்லக்குடியை 'டால்மியாபுரம்' என்று பெயர் மாற்றியதைக் கண்டித்து ரயில்மறியல் என அடுத்தடுத்த மும்முனைப் போராட்டங்களால் மக்கள் மத்தியில் பெரும்செல்வாக்கைப் பெறத் தொடங்கியது திமுக. இந்த கல்லக்குடி போராட்ட வெற்றிதான், பின்னாள்களில் மு.கருணாநிதியை 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி'  என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது.1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், ``தேர்தலில் பங்கேற்கலாமா, வேண்டாமா” என்பது குறித்த பொது வாக்கெடுப்பை நடத்தியது தி.மு.க. மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற அந்தப் பொது வாக்கெடுப்பில், தேர்தலில் போட்டியிட வேண்டும் என 56,942 பேரும், வேண்டாம் என 4,203 பெரும் வாக்களித்திருந்தனர். தி.மு.க இனிவரும் தேர்தல்களில் போட்டியிடுவது, அந்தக் கட்சியின் ஜனநாயக முறைப்படி உறுதிசெய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை மாகாணத்தில் இருந்த கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகள் தனி மாநிலங்கள் ஆகின. அதற்கு முன்னதாக 1953-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாகியிருந்தது. அதன் பிறகு, 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க 15 சட்டமன்றத் தொகுதிகளிலும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்ட திமுக-வின் முன்னணித் தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகினர். முதல் தேர்தலிலேயே திமுக-வின் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சியின் எஃகு கோட்டையைச் சற்றே அசைத்துப் பார்த்தது. முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் தடம்பதித்த திமுக., தனது கொள்கையில் ஒன்றைச் செயல்படுத்த முயன்றது. அதாவது, `சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலமாக’ மாற்றக் கோரிய தீர்மானத்தை கொண்டுவரவே, ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது அந்தத் தீர்மானம். திமுக-வின் இந்த தீர்மானத்திற்குப் பின்னணியில் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்க்கொடையும் இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், ``நாங்கள் இந்தச் சபைக்குள் நுழைந்தது, என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக அல்ல. இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான்போகிறோம்!” எனச் சூளுரைத்தார் அண்ணா.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

1958-ம் ஆண்டு, மார்ச் 2-ம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக வலுப்பெற்றது. உதயசூரியன் அந்தக் கட்சியின் சின்னமானது. பின் 1962-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திமுக., 50 சட்டமன்றத் தொகுதிகளையும், ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அண்ணா தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார் அண்ணா. 1963-ம் ஆண்டு தனிநாடு கேட்பது குற்றம் என்றும், பிரிவினைவாதம் பேசுவோர் தேர்தலில் போட்டியிட முடியாதபடியும், `பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதாவை’ நிறைவேற்றியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி. இது திமுக-வை முடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட சட்டம் எனக் கருதிய அண்ணா, பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக `திராவிட நாடு' கோரிக்கையைக் கைவிட்டார்.

மேலும் கட்சியின்விதி 2-ல், 'திராவிட நாடு' என்றிருந்த குறிக்கோளுக்கு பதிலாக, 'தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது' என திருத்தம் மேற்கொண்டார். திமுக-வின் உயிர்நாடியாக இருந்த திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இருப்பினும், `திராவிட நாட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” எனத் தனது இக்கட்டான சூழலை வெளிப்படுத்தினார் அண்ணா. 1965-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் முதல் `இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும்’ என்ற சட்ட முன்வரைவை அப்போதைய காங்கிரஸ் அரசின் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கொண்டுவந்தார். இதனால் வெகுண்டெழுந்த தமிழகம் மாபெரும் மொழிப்போராட்டத்தைக் கையிலெடுத்தது. திமுக ஜனவரி-26 குடியரசு நாளை துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சியில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தில் திமுக-வின் மாணவர் அணி தீவிரமாகச் செயல்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பணிந்த மத்திய அரசு

பிப்ரவரி 11-ம் நாளன்று, 'ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடரும்' என்ற அறிவிப்பை வெளியிட, போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்துக்கு அரணாக திமுக மாபெரும் பங்களிப்பை நிகழ்த்தியது என்பது எவராலும் மறுக்க முடியாத வரலாற்றுப் பதிவானது.

அண்ணா - பெரியார் - காமராஜர்
அண்ணா - பெரியார் - காமராஜர்

அதைத் தொடர்ந்து, 1967-ம் ஆண்டு தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மா.பொ.சி-யின் தமிழரசு கழகம், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அண்ணாவின் சட்டமன்றச் சூளுரை நிஜமானது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக.,138 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களிலும் வென்றது. தென்சென்னையில் போட்டியிட்ட அண்ணா நாடாளுமன்ற உறுப்பினரானர். திமுக-வின் இந்த அமோக வெற்றி, வரலாற்றையே புரட்டிபோட்டதாக இன்று வரையிலும் பார்க்கப்படுறது. காரணம், சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி, இந்திய தேசியத்தின் மாபெரும் கட்சி, பெருந்தலைவர் காமராசர் இருந்த காங்கிரஸை தமிழக மக்கள் புறந்தள்ளியதும், இறை மறுப்பு, இந்தி எதிர்ப்பு, திராவிட நாடு கோரிய திமுக-வை ஆதரித்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அன்று வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரையிலும் தனித்தெழ முடியாமல், அண்ணாவைப் பெயராகவும், அடையாளமாகவும் கொண்ட கட்சிகளே இன்றுவரையிலும் தமிழ்நாட்டு அரசியலை அலங்கரித்துவருகின்றன என்பதே நிகழும் வரலாற்று சாட்சி! திமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, 1967-ம் ஆண்டு, மார்ச் 6-ம் நாள் பேரறிஞர் அண்ணாத்துரை தமிழக முதல்வரானார். திமுக முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

18 ஆண்டுக்கால முரண்களைக் கடந்து, நேரில் சென்று, திமுக-வின் வெற்றியைப் பெரியாருக்குச் சமர்ப்பித்தார் அண்ணா. ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது திமுக. சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' மாநிலமாகப் பெயர் மாற்றம் பெற்றது. இந்தமுறை சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம் பலன்பெற்றது. ‘கவர்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ தமிழக அரசு ஆனது. ‘சத்யமேவ ஜெயதே’, 'வாய்மையே வெல்லும்' என்றானது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடை மெல்ல மறையத்தொடங்கி தனித்தமிழ் மேலெழுந்துவந்தது. சுயமரியாதைத் திருமணச் சட்டம், பேருந்துகள் நாட்டுடமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இருமொழிக் கொள்கை, உலகத்தமிழ் மாநாடுகள் என அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக., பெரியாரின் கனவுகளையும் சேர்த்து, தங்கள் கொள்கைகளையெல்லாம் சாதித்துக்காட்டியது. ஆனால், இந்தச் சாதனைப்பட்டியல் நீள்வதற்குள்ளாகவே, அண்ணா தனது மூச்சை நிறுத்திக்கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைகளை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அண்ணா, 1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் நாள் திராவிட மண்ணைவிட்டு மறைந்தார்.

அண்ணா
அண்ணா

அண்ணாவின் குறுகியகால சாதனைகள்போலவே, அவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டதாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி கருணாநிதிக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே ஏற்பட்டது. இறுதியில் கருணாநிதி முதல்வரானார். பிறகு ஜூன் மாத காலத்தில் திமுக-வின் தலைவராக மு.கருணாநிதியும், பொதுச்செயலாளராக இரா.நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1971-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கருணாநிதி தலைமையில் தேர்தலைச் சந்தித்த திமுக., 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றிபெற்றது. இதுவரையில் எந்தக்கட்சியாலும் முறியடிக்க முடியாத சாதனையை நிகழ்த்தி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது திமுக. கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களிலும் வென்றது.

1972-ம் ஆண்டு திமுக-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சியின் பல நிலைகளில் ஓரங்கட்டப்பட்டுவந்தார். ஏற்கெனவே கட்சியின்மீது அதிருப்தியில் இருந்தவர், திமுக-வின்பொதுக்கூட்ட மேடையிலேயே கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஊழல் புகாரைப் பொய்யாக்க வேண்டுமென்றால், திமுக-வின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை அனைவரும் தங்கள் சொத்து விவரங்களைக் காட்ட வேண்டும் என்றார். எம்.ஜி.ஆரின் இத்தகைய பேச்சால் அதிர்ந்துபோன திமுக தலைமை, அவரைக் கட்சியைவிட்டே நீக்கியது. திமுக-விலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர்., 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கினார். கட்சியின் கொடியிலும், பெயரிலும் அண்ணாவே இடம்பெற்றார். அதற்கு முன்பாக, 1961-ம் ஆண்டு திமுக-விலிருந்து பிரிந்து சென்ற ஈ.வெ.கி.சம்பத் தமிழ்த் தேசிய கட்சியைத் தொடங்கினார். ஆனால் காலப்போக்கில் அந்தக் கட்சி காங்கிரஸுடன் கலந்து, கரைந்துபோனது. ஆனால் அதிமுக-வின் எதிர்காலம், பின்னாள்களில் திமுக-வுக்கே நிரந்தரப் போட்டியாகும் அளவுக்கு விஸ்வரூம் எடுத்தது. 1974-ம் ஆண்டு 'மாநில சுயாட்சி' பெறும் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது திமுக.

எம்.ஜி.ஆர்-கருணாநிதி
எம்.ஜி.ஆர்-கருணாநிதி

1975-ம் ஆண்டு இந்திராவின் காங்கிரஸ் அரசு அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தது. இதை எதிர்த்து முதல் ஆளாக தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. அதைத் தொடர்ந்து, முறையற்ற ஆட்சி, வீராணம்  திட்ட முறைகேடு என விஞ்ஞான ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வின் முதன்மைத் தலைவரகள் மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.ஆனால் இந்த ஆட்சிக் கலைப்புக்குப் பின்னால் நெருக்கடி நிலைக்கு எதிராக திமுக செயல்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டது.1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அபார வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது எம்.ஜி.ஆரின் அதிமுக. திமுக கடும் தோல்வியைச் சந்தித்தது. அப்போது முதல் எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை சுமார் 13 ஆண்டுகள் திமுக-வை அரியணை ஏறவிடாமல் எதிர்க்கட்சியாகவே இருக்கச் செய்தது அதிமுக. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக.

ஆனால், 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது, பிரிவினைச க்திகளுக்கு திமுக ஊக்கமளிக்கிறது என்று கூறி, அப்போதைய சந்திரசேகர் அரசால், இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது திமுக. அதே ஆண்டு, மே மாதம் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி கொல்லப்படவே, அப்போது எழுந்த அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணி அமைத்த அதிமுக வெற்றிபெற்றது, திமுக படுதோல்வியைச்  சந்தித்தது.1993-ம் ஆண்டு, வைகோவின் அரசியல் நலனுக்காக, விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளனர் எனக் காரணம் கூறி, வைகோ திமுக-விலிருந்து நீக்கப்பட்டடார். இதற்குப் பின்னால் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் ஒளிந்திருப்பதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தனது கொள்கைக்கு நேரெதிரான பாஜக-வுடன் கூட்டணி அமைத்த திமுக., பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இதே கூட்டணி 2001-ம்ஆண்டு தேர்தலிலும் தொடர அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாமக., மதிமுக உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த திமுக, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்றஉறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று, அதிகாரமிக்க மத்திய அரசின் தவிர்க்க முடியாத அங்கமாயினர்.

கருணாநிதி சோனியா
கருணாநிதி சோனியா

தொடர்ந்து, 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 163 இடங்களில் வெற்றிபெற்றாலும், திமுக-வுக்கு 95 இடங்களே கிடைத்தன. கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க நேர்ந்தது. இதுவே திமுக-வை பின்னாள்களில், `மைனாரிட்டி திமுக’ என்று ஒவ்வொருமுறையும் ஜெயலலிதாவால் விமர்சிக்கப்பட காரணமாக அமைந்தது. 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், சிங்கள ராணுவத்தால் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கைப் போரை இந்தியா தலையிட்டு நிறுத்த வேண்டும் என மத்திய காங்கிரஸ் அரசையும், மாநில திமுக அரசையும் வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். முத்துக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தீக்குளித்து மாண்டனர். ஆனால், 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர் பிரசனைக்காகத் தனது பதவியையே ராஜினாமா செய்த கருணாநிதி, இந்த முறை இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தோடு நிறுத்திக்கொண்டார். இது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்தது. இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக வேதனை அடைந்தனர். இந்தச் சம்பவம் திமுக வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகிப் போனது. இதன் விளைவாகவும், 2ஜி அலைக்கற்றை ஊழல், தொடர் மின்வெட்டு, நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளாலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த முறை திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போனது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக-வால் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக., தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது. ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனாலும், வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவர் 50 ஆண்டுக்காலமாக இருந்து வந்த திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ஏற்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக அரசியலின் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி-ஜெயலலிதா மறவுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் தனது வலிமையைத் தக்கவைத்தது திமுக. திமுக-வின் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு பெயர் மாற்றம், பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து என ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தற்போது 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில், திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் திமுக கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. வரும் மே மாதம், 7 -ம் தேதி தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார் ஸ்டாலின். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி என்னும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் தொண்டர்கள். ஆனால், கொரோனா, பொருளாதாரச் சிக்கல்கள், அசுரபலத்துடன் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு எனக் கடுமையான சவால்களை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மட்டும் உண்மை..!

அடுத்த கட்டுரைக்கு