Published:Updated:

செய்திச் சுருக்கம்: நவம்பர் 18, 2011

செய்திச் சுருக்கம்: நவம்பர் 18, 2011
செய்திச் சுருக்கம்: நவம்பர் 18, 2011

செய்திச் சுருக்கம்: நவம்பர் 18, 2011

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுக்கள் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மூன்று நாட்கள் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு, முத்து நாயகம் தலைமையிலான மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியிரிடம் அளித்தது.

பின்னர், மாநிலக் குழுவுடன் மத்தியக் குழு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக நிலை ஏற்படவில்லை. மத்தியக் குழு தெரிவித்த கருத்துகளை மாநிலக் குழுவைச் சேர்ந்தவர்கள் முழுமையாக ஏற்கவில்லை.

குறிப்பாக, மாநிலக் குழுவில் இடம்பெற்றிருந்த போராட்ட ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

*

இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். இந்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

*

கூடங்குளம் அணு உலையை மூடும் வரை, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மாட்டோம் என்று, கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

*

இந்தோனேஷியாவின் பாலியில் தெற்காசிய கூட்டமைப்பான ஆசியான் மாநாடில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

அணு விபத்து இழப்பீடு விதிமுறைகள் தொடர்பான அமெரிக்காவின் கவலைகள், இந்திய சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்கப்படும் என்று பராக் ஒபாமாவிடம் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

இதேபோல், சீன அதிபர் வென் ஜியாபாவோவையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

*

வெள்ளைக்கொடி வழக்கில், இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 36 மாத கால சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

*

சிபிஐ ஊழல் எதிர்ப்புப் பிரிவையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று அண்ணா ஹஜாரே குழு வலியுறுத்தியுள்ளது.

*

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேரின் உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

*

பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானியின் யாத்திரை தோல்வி அடைந்துவிட்டது என்றும், அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகி விடலாம் என்றும் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.  

*

செம்மொழி பூங்கா அமைந்துள்ள இடத்தில், தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தை தோட்டக்கலைக்கு ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை சென்னை உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*

புதிய தலைமை செயலகம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது.

*

இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பலர் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்தனர்.

*

அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு, இம்மாதம் 21-மே தேதி விசாரணைக்கு வருகிறது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

*

வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை நேரிடையாக போக்குவரத்து துறைக்கான இணையதளம் மூலம் செலுத்தும் திட்டத்தினை உடனடியாக துவக்கும்படி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இந்தப் புதிய திட்டம் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரிடையாக செல்லாமலேயே கட்டணங்கள் மற்றும் வரிகளை கணினி மூலம் செலுத்த வழிவகை செய்கிறது.

*
தமிழக அரசு அறிவித்தபடி, மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணங்கள் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வு காரணமாக, கொழுப்புச் சத்துள்ள ஆவின் பால், நெய் மற்றும் வெண்ணெய் விலையும் அதிகரிக்கவுள்ளது.

*

மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தன. நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்திருந்தது.

*

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,737 ரூபாயாக இருந்தது.

*

கடந்த 1996-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஃபிக்சிங் நடந்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வினோத் காம்ளி தெரிவித்த கருத்துக்கு, அப்போதைய அணியின் கேப்டன் முகமது அசாருதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு