Published:Updated:

ஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? - கருணாநிதி

Vikatan Correspondent
ஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? - கருணாநிதி
ஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? - கருணாநிதி
ஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? - கருணாநிதி

சென்னை: ஒரேநேரத்தில்  பால் விலை, பேருந்து மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தினால் ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுக ஆட்சியில் இருந்தபோது பஸ் கட்டணம், பால் விலை ஆகியவை உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டு தான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டது.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பையேற்றபோது சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்றிருந்த கட்டணத்தை ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட பேருந்துக் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பால் மற்றும் பேருந்து கட்டணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில், முந்தைய திமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை.

பால் கொள்முதல் விலையை, ரூ.2 மட்டுமே உயர்த்தியுள்ள அதிமுக அரசு, அட்டைதாரர்களுக்கான விற்பனை விலையில், ரூ.6.25 உயர்த்தியுள்ளது.

மேலும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கச் செய்யும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில், பால் விலை, பேருந்து மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தினால் ஏழை, நடுத்தர மக்களால் எப்படி சமாளிக்க முடியும்?" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.