Published:Updated:

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்
தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

1905 ஆம் ஆண்டு டுபாண்ட்  என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் உடல்நிலை எதிர்பாராத விதமாக கெட்டது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட ஒரு கட்டத்தில் தன் தாய் நாடான பிரான்சுக்கு திரும்ப எண்ணினார். தனக்குச் சொந்தமான டேரா கொட்டகையை இங்கேயே யாரிடமாவது விற்று விட்டு செல்வதென முடிவெடுத்தார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

இந்த தகவல் கோவையை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு தெரியவந்தது. 21 வயது இளைஞனான அவருக்கு ஆரம்பகால பிரெஞ்சு மொழியின் பேசாத திரைப்படங்கள் மீது பெரும் ஈர்ப்பு இருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். தென்னிந்திய ரயில்வேயில் 25 ரூபாய் சம்பளத்திற்கு கிளர்க்காக பணியாற்றி வந்த அந்த இளைஞன் பிரெஞ்சுக்காரரிடமிருந்து (Dupond) ரூ.2000 (அப்போது மிகப்பெரிய தொகை இது) கொடுத்து 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேரா கொட்டகையை வாங்கினார்.

ஏற்கனவே சலனப்படங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்த  அந்த இளைஞனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் கொள்ளை மகிழ்ச்சி. அதனுடன் சில பிலிம் ரோல்களையும் விலைக்கு வாங்கிய அவர், தான் விலைக்கு வாங்கிய சினிமா புரொஜக்டரையும் அத்துடன் சில பிலிம் ரோல்களையும் தன்னுடன் எடுத்து கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடம் காட்டி அதிசயிக்க வைத்தார். முதல் சலனப்படத்தை காட்சிப்படுத்திய அந்த இளைஞர் சாமிக்கண்ணு வின்செண்ட்.

சினிமா பிறந்து அதன் 10 வருடங்களில் அதை தென்னிந்தியாவிற்கு அறிமுகம் செய்த வரலாற்றுக்கு சொந்தக்காரரான சாமிக்கண்ணு வின்செண்ட், 1883 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கோட்டை மேடு பகுதியில் பிறந்தவர். தென்னிந்தியாவின் முதல் தியேட்டரை கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர்.

டுபாண்டிடமிருந்து நகரும் சினிமா கொட்டகையை வாங்க இருப்பதாக வின்சென்ட்டின் உறவினர்களுக்கு தெரியவந்தபோது எழுந்த எதிர்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. 2000 ரூபாய் என்பது அக்காலத்தில் மதிப்பற்ற தொகை என்பதால் நண்பர்களும், உறவினர்களும், அவருக்கு போறாத காலம் ஏற்பட்டுவிட்டதாக கிண்டலடித்தனர். சிலர் நிஜமாகவே வின்செண்ட் எடுத்த முடிவுக்காக வருந்தினர்.

திரையில் விரிந்தது முதல் சலனப்படக்காட்சி

ஆனால் சினிமாவின் பிற்காலம் எவ்வாறு அமையும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்த வின்செண்ட் அதைப் பற்றி கவலையடையவில்லை. எந்த குழப்பமும் அடையவில்லை. போட்டியின்றி அந்த கொட்டகையை வாங்கிவிடுவதில் குறியாய் இருந்தார். அதில் வெற்றியும் கண்டார்.

சுமார் 500 அடிக்கு ஒரு ரீல் என்று 5 ரீல்களை விலைக்கு வாங்கியிருந்த வின்செண்ட் தமது முதல் படக்காட்சியை முதன்முதலாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரிக்கு அருகிலிருந்த ஒரு வெட்டவெளி மைதானத்தில் 1905- ம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டினார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

தென்னிந்தியாவின் முதல் சலனப்படம் சுமார் 45 நிமிடங்கள் திரையில் ஓடியது. வின்செண்ட் மக்களுக்கு காட்சிப்படுத்திய சலனப்படத்தின் பெயர் "இயேசு கிறிஸ்துவின் சரிதை" (Life of Jesus). தனது முதல் Tent சினிமாவை Edison's Grand Cinema Mega Phone என்ற பெயரில் வெளியிட்டார்.

சினிமா காட்சிக்கு மக்கள் தந்த ஆரவாரத்தைக் கண்ட வின்செண்ட் தெளிவான முடிவோடு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்து டென்ட் அமைத்து படங்களை மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார். தொடர்ந்து சிங்கப்பூர் ,மலேசியா ,பெஷாவர், மியான்மர் உள்ளிட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று திரையிட்டார்.

திருச்சியில் தொடங்கிய வின்செண்ட் பின் அப்படக் காட்சியை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடத்தினார்.

உருவானது தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு

ஆர்வத்துடன் மட்டுமே களத்தி்ல் இறங்கிய வின்செண்ட்டுக்கு அவரது முயற்சி பெரும் வியாபார களமாகவும் இருந்தது. கை நிறைய சம்பாதித்தார். சினிமாவின் மீதான இந்த ஈர்ப்பை உணர்ந்த வின்செண்ட் இதில் சம்பாதித்ததை வேறு தொழிலில் முதலீடு செலுத்துவதை தவிர்த்து மீண்டும் சினிமாவிலேயே செலவிட முடிவுசெய்தார். அவரது இந்த எண்ணம்தான் தென்னிந்தியாவின் முதல் நிலையான திரையரங்கு (Permanent theatre) கோவையில் உருவாக காரணமானது. 1914 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் திரையரங்கள் கோவையில் உருவானது. தான் கட்டிய திரையரங்கிற்கு Variety Hall என்று பெயர் சூட்டினார் வின்செண்ட்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

ஆம், அதுவரை சபாக்களிலும் திறந்தவெளி அரங்குகளிலும் நாடக காட்சிகளை மட்டுமே பார்த்து ரசித்துவந்த மக்களுக்கு வெள்ளைத்திரையில் உயிருள்ள மனிதர்கள் உலவுவதும் பேசுவதுமாக இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டதால் உண்மையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் அதற்குப் பொருத்தம்தான்.

அக்காலத்தில் கோவையில் மின் விளக்குகள் கிடையாது. வின்செண்ட் சகோதரர்கள் ஒரு ஆயில் என்ஜினும், ஜெனரேட்டரும் வைத்து பற்பல வண்ண விளக்குச் சரங்களை தங்கள் கொட்டகையைச் சுற்றிலும் எரியச் செய்து மக்களின் மனதைக் கவர்ந்தனர். வெரைட்டி தியேட்டர் அருகிலேயே மின்சாரத்தால் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரத்தை நிறுவினர்.

வெரைட்டி ஹாலில் சினிமா காட்சி திரையிடுவதற்கு முன் அரங்கேறும் காட்சிகள் இன்னும் ஜோர்.

கொட்டகையின் எதிர்புறம் ஒரு மேடை அமைத்து அதைச் சுற்றிலும் வெள்ளை நிற பேண்ட், வெள்ளை கோட், தொப்பி என ஒரே மாதிரியான சீருடையணிந்த பத்து பதினைந்து ஊழியர்கள் நின்றுகொண்டு காட்சி திரையிடப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னர் பாண்டு வாத்தியங்களை இசைப்பர். அந்த இசைக்கு தக்கபடி நளினமாக அழகிய பெண்கள் நடனமாடுவர். அது பொதுமக்களை வரவேற்பது போன்று தோன்றும்.

நடனமாடுவதற்கென்றே கோவையின் சுற்றுப்புறங்களில் அக்காலத்தில் வாழ்ந்து வந்த அழகிய ஆங்கிலோ இந்தியப் பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தியிருந்தார்கள் வின்செண்ட் சகோதரர்கள். இவர்களது இக்காட்சியைக் கண்டுகளிக்கக் கோவை மாநகரே அங்கு திரண்டுவரும்

தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்செண்ட். 1914 ல் உருவான வெரைட்டி ஹால் என்ற சினிமா கொட்டகையை தொடர்ந்து கோவையில் 10-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகளை அமைத்தார் வின்செண்ட். இவ்வாறு தமிழகத்தில் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டிய பெருமை சாமிக்கண்ணு வின்செண்ட், ஜேம்ஸ் வின்செண்ட் சகோதரர்களையே சாரும். வெரைட்டி ஹாலை ஒட்டியே சகோதரர்கள் தாங்கள் குடியிருக்க ஒரு பிரம்மாண்ட வீட்டையும் கட்டினர். பின்னாளில் அப்பகுதி வெரைட்டி ஹால் ரோடு என்றே அழைக்கப் பெற்றது.

சினிமா மீதான ஆர்வம் மட்டுமே கொண்டவரல்ல வின்செண்ட். ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத அக்காலத்தில் தான் சென்ற நாடுகளில் காணப்பட்ட வளர்ச்சியினால் கவரப்பட்ட அவர் அதை தமிழகத்தில் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

வெரைட்டி தியேட்டரில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட அதே சமயம் எடிசன் என்ற தனது மற்றொரு தியேட்டரில் ஆங்கில படங்களை திரையிட்டார். அந்தக் காலத்தில் ஆங்கில பட திரையிடலுக்கு அந்த தியேட்டர் புகழ்பெற்றிருந்தது. கோவையில் முதன் முதலில் எலெக்ட்ரிக் பிரஸ் அச்சு இயந்திர சாலையை நிறுவியவரும் அவரே. 1936ல் வின்சென்ட், பேலஸ் தியேட்டரை (palace theatre) நண்பர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி இந்த தியேட்டரில் இந்தி படங்களை வெளியிட்டார்.

இந்த தியேட்டர் பின்னர் கென்னடி (Kennedy) தியேட்டர் என்ற பெயரில் இயங்கியது. கோவையில் இவரது தியேட்டர்களில் ஒன்றான 'லைட் ஹவுஸ்' தியேட்டரில் உணவு விடுதி நடத்திய தாமோதரசாமி என்பவர்தான் கோவையின் பிரபல ''Annapoorna" ஹோட்டலின் நிறுவனர் என்பது ஆச்சரியமான செய்தி.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

கோவையின் முதன்முதலில் மின்சாரம் உற்பத்தி செய்த தனி நபரும் வின்செண்ட்தான். 1919-ல் கோவையில் மின்சார உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தைத் தொடங்கினார். ஜெனரேட்டர் மூலம் தயாரித்த மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் கம்பெனியின் (Stanes) ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளிக்கு விநியோகம் செய்து பெரும் பொருள் ஈட்டினார்.

சினிமா அதிபர் தொழிலதிபர் என்ற அடையாளங்களோடு மட்டுமின்றி வின்செண்ட் பத்திரிகையாளராகவும் விளங்கினார். காங்கிரஸ்காரரான அவர் சத்தியாகிரக போராட்டங்களை ஆதரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் "மஹஜனநேசன்" என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார். காங்கிரஸ் மதுவிலக்கு பிரசாரத்திற்காக பல தடவை தன் அச்சகங்களில் தம் சொந்த செலவில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து கொடுத்தார்.

இவரது முயற்சிகளுக்கு வின்செண்ட்டின் சகோதரர் ஜேம்ஸ் வின்செண்ட் பெரும் பலமாக இருந்தார். சகோதரர்கள் இருவரும், வெள்ளை "சூட்" அணிந்து, தங்கள் மீசைக்கு பசை போட்டுக் கூர்மையாக முறுக்கிய கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

படத்தயாரிப்பாளர்


தனது தியேட்டர் பெயரிலேயே (Variety Hall Theatre) படத் தயாரிப்பு தொழிலிலும் கால் பதித்தார் வின்செண்ட். 1935 ம் ஆண்டு கல்கத்தா பயனீர் ஸ்டியோவில் தயாரான அவரது "சம்பூர்ண ஹரிச்சந்திரா" என்ற தமிழ்ப் படம் வெளியானது. முதல் தமிழ்ப்படமான காளிதாஸ் பல மொழி பேசி வந்ததால் அது முதல் தமிழ்ப்படம் என்பதில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்த சமயம் என்பதால் தனது படத்தின் விளம்பரத்தில் வின்செண்ட், '100% முதல் தமிழ் படம்' என்று விளம்பரப்படுத்தினார். இப்படத்தில் V.A. செல்லப்பாவும் டி.பி. ராஜலஷ்மியும் நடித்தனர். படம் நல்ல வசூலை தந்தது. பிரபல நடிகை லட்சுமியின் தாயான பேபி ருக்மணி லோகிதாசன் என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் அறிமுகமானார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

வள்ளித்திருமணம் என்ற படத்தை இவர் தயாரித்தார். இப்படத்தில் V.A. செல்லப்பா-டி.பி.ராஜலஷ்மி ஜோடியாக நடித்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் பாக் ஆஃபிஸ் ஹிட் ஆக இப்படம் அமைந்தது. இப்படம்தான் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட பேசும் படங்களில் வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது. இப்படத் தயாரிப்புக்கு பின் சாமிகண்ணு வின்சென்ட் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்தார். கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோவை நண்பர்கள் ஆர்.கே. ரங்கசாமி, 'பக்‌ஷீராஜா' ஶ்ரீராமுலு நாயுடு ஆகியோர் துணையுடன் தொடங்கினார்.

மஹாஜன நேசன் பத்திரிகை


வின்செண்ட் சகோதரர்கள் தங்கள் எலக்ட்ரிக் பிரிண்டிங் அச்சகத்திலிருந்து "மஹாஜன நேசன்" எனும் தமிழ் ஆங்கில இரு மொழி வார ஏடு ஒன்றையும் சில காலம் நடத்தினர்.

வின்செண்ட் அந்நாளில் ராணுவ வீரர்கள் பிரத்யேகமாக சினிமா காட்சிகளை பார்க்க Vincent Forces Cinema என்ற பெயரில் திருச்சி ரோட்டில் ஒரு டூரிங் டாக்கீஸை உருவாக்கினர். ஆங்கில படங்களை திரையிடுவ தற்கென வின்செண்ட் உருவாக்கிங Rainbow தியேட்டர், தற்போது Kennedy Theatre என்று அழைக்கப்படு கிறது. Variety Hall Talkies திலிப் குமாரின் பல ஹிந்தி படங்களை திரையிட்டன அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. Edison மற்றும் Carnatic தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.

கடும் உழைப்பாளியான வின்செண்ட் தன் வாழ்வின் எந்தநாளையும் வீணாக்குவதை விரும்பாதவர். தன் அலுவலகத்தில் தன் இருக்கைக்கு மேலே எந்த ஒன்றையும் முடிக்காமல் ஒரு நாளை கடத்திவிடாதே என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். தன் வாழ்நாள் முழுமையும் தானும் அதை பின்பற்றினார்.

1883 மு ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பிறந்த சாமிக்கண்ணு வின்செண்ட் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ந்தேதி தனது 59 வயதில் மறைந்தார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறப்பில் கிருஸ்துவரானாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந் தார். கோவை பேரூரில் உள்ள சிவன் கோவிலுக்கு வாரந்தோறும் செல்வதை இறுதிவரை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அங்குள்ள யானையை அழைத்துவந்து தன் வெரைட்டி தியேட்டரில் வைத்து வணங்கி உணவிடுவார். இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை முதலில் கண்டு அதை வெற்றிகரமாக கைக் கொண்டு புகழின் உச்சியை தொட்ட முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்செண்ட் ஆவார்.

மறக்கடிக்கப்பட்ட மனிதர் வின்செண்ட்

தென்னிந்திய மக்களுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்செண்ட்டின் புகழ் பிற்காலத்தில் மக்களால் மறக்கப்பட்டது சோகம். சினிமா வரலாற்று ஆய்வாளர்களும் அவருக்குரிய புகழோடு அவரை பதிவுசெய்யவில்லை என்பது வேதனையானது.

அதை விட அவலம், வெரைட்டி தியேட்டரை அலங்கரித்த அவரது பிரம்மாண்ட சிலை,  இப்போது வறுமையில் வாடும் அவரது 4- வது தலைமுறை வாரிசுகளின் ஏதோவொரு வீட்டில் தட்டுமுட்டு சாமான்கள் அறையில் கிடப்பது.

சாமிக்கண்ணு வின்செண்ட் இறப்புக்கு பின் ஒரு பிரபல இதழ் அவருக்கு பின்வருமாறு குறிப்பு எழுதியிருந் தது.

காலஞ்சென்ற திரு .டி. வின்செண்ட் முன்னோடியாகச் சிறப்புற விளங்கிய பட விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், தயாரிப்பாளராவர். ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் சினிமாவைப் பரப்பியதற்கு இவரே முக்கிய பொறுப்பாளராவார். 1925ஆம் ஆண்டிலிருந்து மலபாரில் டூரிங் சினிமாக் காட்சிகளை நடத்தினார்.

கோவையில் வெரைட்டி ஹாலைக் கட்டினார். வெற்றிகரமாக ஓடிய 'வள்ளி திருமணம்' படத்தைத் தயாரித் தவர் இவரே. டி.பி.ராஜலட்சுமி, வி.ஏ. செல்லப்பா ஆகியோர் இதில் நடித்தனர். பிறகு இவர் தமிழில் 'அரிச்சந்திரா' வைத் தயாரித்து வெளியிட்டார். அதுவும் இவருக்குப் பெரும் வெற்றியையே அளித்தது. தனது பங்களிப்பின் மூலம் சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்களும் தமிழ் சினிமாவின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக திகழ்கிறார்


தமிழ் சினிமா உலகம் தங்கள் முன்னோடிகளில் ஒருவரான சாமிக்கண்ணு வின்செண்ட் புகழ்வாழ்க்கையை நினைவு கூர்ந்து மரியாதை செய்வது தங்களை தாங்களே கவுரவப்படுத்தும் செயலாகும். சலனப் படங்களின் மூலம் தென்னிந்திய மக்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி சினிமா உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சிய சாமிக்கண்ணுவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு