Published:Updated:

மீசை முறுக்கும் திருமா!

மீசை முறுக்கும் திருமா!

மீசை மிறுக்கும் திருமா!
''தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகலா?''
மீசை முறுக்கும் திருமா!

'எழும் தமிழ் ஈழம்' என்கிற பெயரில், தொல்.திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை இன விடுதலை அரசியல் மாநாடாக மாற்றிக் காட்டத் திட்டமிட்டிருந்தார்கள் விடுதலைச் சிறுத்தைகள்! அதற்காக விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனையும் திருமாவளவனையும் ஒருசேரப் படமாக்கி, தமிழகம் முழுக்க பேனர், ஃபிளெக்ஸ், கட்-அவுட், சுவர் விளம்பரம் என அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஆனால், விழாவுக்கு முதல் நாள்... திடீரென திருமாவளவனை ஆதரித்து வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்களும் ஃபிளெக்ஸுகளும் கிழித்து வீசப்பட... தமிழகம் முழுக்கப் பதற்றம் பற்றிக் கொண்டது. இதற்கிடையில், பா.ம.க-வினரும் சிறுத்தைகளுக்கு எதிராகப் பாய... எந்த வருடமும் இல்லாத அளவுக்கு நெருக்கடிகளுடன் இந்த வருட பிறந்தநாளை எதிர் கொண்டார் திருமாவளவன். அந்தப் பரபரப்பான நிமிடங்களிலும் ஜூ.வி-க்காக நேரம் ஒதுக்கிப் பேசினார் திருமாவளவன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீசை முறுக்கும் திருமா!

''உங்களுடைய கட்-அவுட்களும் விளம்பர ஃபிளெக் ஸுகளும் கிழிக்கப்பட்டதற்கு போலீஸ்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?''

''எங்களின் 'எழும் தமிழ் ஈழம்' என்கிற இன விடுதலை அரசியல் மாநாட்டுக்கு அரசிடம் முறையான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். பல நாட்களுக்கு முன்பிருந்தே மாநாட் டுக்கான ஏற்பாடுகளையும் விளம்பரங்களையும் எங்கள் இயக்கத் தோழர்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அப்போதெல்லாம் விளம்பரப் படங்களை மாற்றக் கோரியோ, வாசகங்களைத் திருத்தக் கோரியோ

யாரும் எங்களிடத்தில் வலியுறுத்தவில்லை. எத்தகைய உணர்வையும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வெளிப்படுத்தக்கூடிய கண்ணியமும் கட்டுக்கோப்பும் எங்கள் இயக்கத்துக்கு இருக்கிறது. அப்படியிருக்க, மாநாட்டுக்கு முதல்நாள் எங்கள் விளம்பரங்களில் இருந்த புலிகளின் தேசியத் தலைவரான பிரபாகரனின் படத்தையும், ஈழம் என்கிற எழுத்துக்களையும் சிலர் மறைத்திருக்கிறார்கள். பல இடங்களில் கட்--அவுட்களும், பேனர்களும் கிழிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை மட்டுமல்லாது, மேற்கு மாவட்டங்களிலும் கிராமப்புற இண்டு இடுக்குகளிலும் இருந்த பேனர் களைக்கூட அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். போலீஸ் ஏன் எங்கள் மீது இந்தத் திடீர் நெருக்கடியைப் பாய்ச்ச வேண்டும்? கூலி வேலை பார்த்தும், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தும் எங்கள் தம்பிகள் உருவாக்கிய விளம்பர ஏற்பாடுகளை எவ்வித அறிவிப்புமின்றி போலீஸார் உருக்குலைத்துப் போட்டதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதனால்தான் எங்கள் இயக்கத் தோழர்கள் தமிழகத்தின் பல திசைகளில் போலீஸைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு உடனடியாக சாலை மறியலைக் கைவிட வும் செய்தார்கள். தொண்டர்களின் உழைப்பை போலீஸார் துவம்சம் செய்ததை நினைத்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.''

''நீங்கள் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிற நிலையிலும், போலீஸார் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டது ஏன்?''

''எழும் தமிழ் ஈழம் என எழுதுவதால், இங்கே இறை யாண்மை மீறல் ஏற்பட்டு விட்டதா? ஈழம் என்கிற வார்த்தை மீது ஏன் அப்படியரு எரிச்சல்? தமிழீழ கோரிக்கையை வேரோடு அழித்து விட்டதாக சிங்கள வெறியர்கள் திமிர்வாதம் பரப்பிக் கொண்டிருக்கையில், 'மீண்டும் எழுவோம்' என்கிற வார்த்தைகளைச் சொல்லக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா? எங்களின் விளம்பர ஏற்பாடுகளைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், மதுரையில் எங்கள் இயக்கத் தொண் டர்கள் மீது கொடூரத் தாக்குதலையும் போலீஸ் நடத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் மத்திய உளவுத்துறையின் நெருக்கடிகள் இருப்பதாக சிலர் உறுதி யாகச் சொல்கிறார்கள். இதற்கிடையில், வேறு சில கட்சியினரும் எங்களின் விளம்பரத் தட்டிகளை அகற்றி, ஆட்டம் போட்டிருக்கிறார்கள். எங்களின் குரல்வளையை நெரிப்பது யாராக இருந்தாலும், ஈழம் குறித்த முழக்கத்தை ஒருபோதும் முடக்கிவிட முடியாது!''

''முதலைமைச்சர் கருணாநிதியின் மனப்போக்கு தெரியாமலா இப்படி பேனர்களை போலீஸ் கிழித் திருக்கும் என்ற யோசனையோடு, தி.மு.க-வுடனான கூட்டணிக்கே நீங்கள் முழுக்குப் போடத் தயாராகி விட்டதாகச் சொல்லப்படுகிறதே..?''

''முதல்வர் கலைஞர் எங்கள் மீது மிகுந்த பாசத்தோடும் பேரன்போடும்தான் இருக்கிறார். என்னுடைய பிறந்த நாளுக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்தபடி வாழ்த்துச் சொன்னார். எங்களின் விளம்பர ஏற்பாடுகளைத் தடுக்கச் சொல்லி, முதல்வர் கலைஞர் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், எங்களின் ஆதங்கத்தையும் வேதனையையும் முதல்வரின் கவனத்துக்கே கொண்டு சென்றிருக்கிறோம். தொண்டர்களின் ரத்தம் தோய்ந்த வியர்வையில் உருவான ஏற்பாடுகளை நசுக்கி வீசுவது போல போலீஸார் செயல்பட்ட விதத்தைக் கண்டிக்கக் கோரி இருக்கிறோம். எங்களின் காயங்களுக்கு கலைஞர் களிம்பு பூசுவார் என்கிற நம்பிக்கை நிறைய இருக்கிறது. மற்றபடி, தி.மு.க-வுடனான அன்பும் உறவும் வழக்கம் போலவே தொடரும்!''

''ஈழம் குறித்த உங்களின் செயல்பாடுகள் மத்திய உளவுத்துறையால் தீவிரமாகக் கண்காணிக்கப் படுவதாகவும், உங்கள் மீது சட்டரீதியான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யத்துக்கில்லை எனவும் சொல்லப்படுகிறதே?''

''இனத்துக்காகப் போராடுவது இறையாண்மை மீறல் என்றால், அத்தகைய மீறலை பிறவிப் பெருங்கடனாக நினைத்து நாங்கள் மேற்கொள்ளவே செய்வோம். இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டிய கடமையை நன்கு அறிந்தவர்கள்தான் நாங்கள். ஆனால், ஈழத்தில் வஞ்சிக்கப்பட்டு ரத்த சகதியாகிக் கிடக்கும் என் இனத்தின் சொல்ல முடியா துயரம், என் இந்திய தேசத்துக்குத் தெரிய மறுக்கிறதே... ஈழ விடிவுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்க வேண்டிய இந்திய அரசு, வதை முகாம்களுக்குள் சிக்கி காயங்களாலும் வியாதிகளாலும் கதறிக் கிடக்கும் என் தமிழ் சாதியை, கைகட்டி வேடிக்கை பார்க்கிறதே... இந்தக் கொடுமைகளை எல்லாம் நெஞ்சுக்குள்ளேயே அடக்கி, நாங்கள் விம்மிவெடித்து சாக வேண்டும் என்பதைத்தான் என் தேசம் விரும்புகிறதா? 'எழும் தமிழ் ஈழம்' என நாங்கள் முழங்குவது தவறென்றால், அதற்காக எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் எங்களுக்குக் கொடுங்கள். ஈழத்தில் போராடிச் செத்தவர்களில் நாங்களும் ஒருவராக இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால், யாருக்கும்

அஞ்சி நடுங்கி, தொண்டைக்குழிக்குள் துணியை வைத்து அடைத்தபடி எங்களால் தூங்கிக் கொண்டிருக்க முடியாது. தனியீழத்தை அங்கீகரியுங்கள்... தடை செய்யப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பை மக்கள் இயக்கமாக அனுமதியுங்கள்... பிறந்த மண்ணை இழந்து தவிக்கும் என் தமிழினத்தைக் கைதூக்கி விடுங்கள்... அன்றைக்குத்தான் எங்களின் ஆவேசங்கள் அடங்கும்... எங்களின் மூர்க்கம் முடங்கும்!''

- பேட்டியை முடித்துக்கொண்டு ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டத்தில் கலக்கிறார் திருமா!

- இரா.சரவணன்
படம் வீ.நாகமணி