Published:Updated:

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!
மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக்  கேட்டு அறிந்து இருக்கிறார்.

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.     

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி  பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும்  மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும்  மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார்.  5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று  படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.
 
காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின்  மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள  பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்  அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி  மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள்  பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள்,  விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர்.  இதற்கு,பாஜகவும்  திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  பந்த் மூலம் பெருமளவில்  மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம்  தேதி  மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் மதுவிலக்கு சாத்தியம்தானா?

மதுவின் கொடுமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது நூலில் `கள்ளுண்ணாமை` என்று  தனி அதிகாரம் எழுதியுள்ளார்.

அதில், " துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்" என்று கூறியிருக்கிறார். கள் குடிப்பது அதாவது மது அருந்துவது நஞ்சு உண்பது என்று கூறியிருக்கிறார்.இது தற்போதைய டாஸ்மாக் மதுவகைகளுக்கு சாலப்பொருந்தும்.கல்லீரல்,சிறுநீரக பாதிப்பு என்று பல்வேறு நோய்களைக் கொண்டுவருவது மதுவகைகளால்தான் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள். மேலும் குடிப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பு அளவிட முடியாததாகும்.   இதனாலயே சமூக பெரியவர்களும் அரசியல் கட்சியினரும் மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் அரசு கொள்கை முடிவு எடுத்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே என்றாலும் அதனை

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!

நடைமுறைப்படுத்த  அரசு தரப்பு தீவிர தயக்கம் காட்டிவருகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக அதிமுக ஆகிய இருகட்சிகள். இரண்டிலும்  சாராய ஆலை அதிபர்கள் முக்கிய அதிகார மையமாக இருந்து வருகிறார்கள்.

எலைட்,எஸ்.என்.ஜே.,கால்ஸ்,இம்பெரியல்,மிடாஸ்,ஈகிள் என்று ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை வாரிக் குவிக்கும் மதுபான ஆலைகள் திமுக அதிமுக கட்சியினரின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானவையே.இதுவே கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கைக் கொண்டுவர வர பெரும் தடையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழகம் அண்மைக்காலமாக பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்கவில்லை.கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்டித்து தமிழக அளவில் மாணவர்கள் தரப்பில் எழுந்த தன் எழுச்சியான  போராட்டத்தைப் போல தற்போது மீண்டும் தமிழகத்தில் மாணவர் இயக்கங்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் தாமாகவே முன்வந்து இறங்கியுள்ளன. இது மதுவிலக்குப்   போரட்டத்தில் பெரிய அளவிலான  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம்  திருச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.அதே போல அதற்கு முன்பாக புதுச்சேரியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுக்கடை ஒன்றை அடித்து நொறுக்கினர். தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது.

டாஸ்மாக் போராட்டம் இன்னும் தீவிரமாக வண்ணமும் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையும் தீர்வும்.

முடிவு அரசின் கையில்...    .

 - தேவராஜன்.

மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு