Published:Updated:

'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'

Vikatan Correspondent
'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'
'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'

மிழகத்தில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து நாளுக்கு நாள் ஹெல்மெட்டின் டிமாண்ட் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், ‘போனா வராது பொழுது போன கிடைக்காது’ என்பது போல, கடைகளுக்கு முந்தியடித்துக் கொண்டு சென்றவர்கள் கைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அகப்பட்டது. ஆனால், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று அசால்டாக காலம் கடத்தியவர்கள் கடை கடையாக ஏறினாலும், அவர்களுக்கு ஹெல்மெட் கிடைப்பது என்னமோ குதிரை கொம்பாகதான் இருக்கிறது.

'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'

எதையும் வியாபார நேக்கத்துடன் பார்க்கும் விற்பனையாளர்கள், ஹெல்மெட் பற்றாகுறையை பயன்படுத்திக் கொண்டு தரம் இல்லாத ஹெல்மெட்டுகளை இரண்டு மடங்கு விலை உயர்த்தி விற்கின்றனர். அப்படி, இரண்டு மடங்கு விலை கொடுத்து மக்கள் வாங்க தயாராக இருந்தாலும், பெரும்பாலான கடைகளில் தற்பொழுது ஹெல்மெட் ஸ்டாக் இல்லை என்ற குரலே வருகிறது.

உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால், ஹெல்மேட் டீலர்களை தாண்டி, பெட்டிக் கடைகளும், உணவகங்களும் கூட தற்காலிக ஹெல்மெட் விற்பனை நிலையங்களாக அவதரித்தது. போலீசுக்கு கப்பம் கட்டுவதைவிட, கிடைக்கும் ஏதாவது ஒரு ஹெல்மெட்டை வாங்கி அணிவது மேல் என்று, ‘‘கிமா, லூமா’’ என்பன போன்ற ஊர், பெயர் தெரியாத ஹெல்மெட்டுகளையும், தரம் இல்லாத ஹெல்மெட்டுகளையும் பொதுமக்கள் வாங்கி மாட்டிக்கொண்டு உலா வருகிறர்கள். இதுபோன்ற, தரம் இல்லத ஹெல்மெட்டுகளால், உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கிய ஹெல்மெட்டுகளின் நோக்கமே சிதைந்துவிடும்.

'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'

சரி கடைகள்தான் நம்மை கைவிட்டுவிட்டது, ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஹெல்மெட் ஆர்டர் செய்ய சென்றவர்களுக்கு அங்கும் ஏமாற்றம். என்ன ஒரு அக்கிரமம்? இந்தியாவில், தமிழ்நாட்டுக்கு மட்டும் ஹெல்மெட் டெலிவரி கிடையாது என்று சொல்லி வைத்ததுபோல எல்லா ஆன்லைன் நிறுவனமும் கைவிரித்துவிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா அல்லது வேறு எங்காவது இருக்கிறதா என்று பொதுமக்களை குழப்பும் அளவிற்கு ஹெல்மெட் விவகாரம் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடைகளில் தரமாக ஹெல்மெட் கிடைக்காதவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தரமான ஹெல்மெட்டுகளை வாடகைக்கு அளித்து கைக்கொடுத்து வருகிறார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளைஞர் தம்பிதுரை. உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் தம்பிதுரை, அவரது கடையிலே பதினைந்து ஹெல்மெட்டுகளை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் மட்டுமே ஹெல்மெட் வாடகையாக வசூலிக்கிறார். கிராமத்தில் இருந்து டவுனுக்கு வரும் விவசாயிகளும், அதிக விலை கொடுத்து ஹெல்மெட் வாங்க முடியாத ஏழை மக்களுமே இவரது ரெகுலர் கஸ்டமர்கள்.

'இங்கு ஹெல்மெட் வாடகைக்கு கிடைக்கும்!'

இந்த புதுவகை பிசினஸ் பற்றி தம்பிதுரை கூறும்போது, ''ஹெல்மெட் கட்டாயமாக்கிய உடனே நானும் ஹெல்மெட் வாங்க கடைக்கு போனேன். 550 ரூபாய்க்கு வித்துகிட்டு இருந்த ஹெல்மேட்டை 1,100 ரூபாய்க்கு வித்தாங்க. ஒரே இரவுல ஹெல்மெட் விலை இரண்டு மடங்கு உயர்ந்திருதுச்சு. என்ன செய்வதுனு தெரியாம இருந்த நேரத்தில், டெல்லியில் இருக்கற என்னோட மாமாகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவர் உடனே, அங்க தரமான ஐ.எஸ்.ஐ ஹெல்மெட் 650 ரூபாய்க்கு கிடைக்குதுனு சொல்லி எனக்கு மட்டுமல்லாம என்னொட பிரண்ட்ஸ்க்கும் ஹெல்மெட் வாங்கி அனுப்பினாரு.

என்னை போல அதிக விலை கொடுத்து ஹெல்மெட் வாங்க முடியாம எங்க ஊர்ல இருக்கிற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் எனக்கு, ஏன் தரமான ஹெல்மெட்டை வாங்கி நம்ம கிராம மக்களுக்கு வாடகைக்கு கொடுக்க கூடாதுனு ஒரு யோசனை தோனுச்சு. உடனே என் மாமாகிட்ட சொல்லி டெல்லியில இருந்து 15 தரமான ஐ.எஸ்.ஐ. ஹெல்மெட்களை வாங்கி அனுப்ப சொன்னேன்.

அவரும் நான் கேட்டப்படி அங்க வாங்கி எனக்கு அனுப்பினார். அந்த பதினைச்சு ஹெல்மெட்டை இப்ப எங்க ஊர் மக்களுக்கு வாடகைக்கு விட்டுட்டு இருக்கேன். ஹெல்மெட் கேட்டு வர்றவங்ககிட்ட 100 ரூபாய் வாங்கிகிட்டு ஹெல்மெட்டை கொடுப்பேன். அவங்க திரும்ப கொடுக்கும்போது வாடகையை கழிச்சிகிட்டு மிச்ச பணத்தை திருப்பி கொடுத்துடுவேன். நான் வச்சிருக்க ஹெல்மெட் தரமா இருக்கறதால, சிலர் சொந்தமாகவும் வாங்கிட்டும் போறாங்க. நான் இதை பிசினசா செஞ்சாலும், எங்க கிராம மக்களுக்கு குறைந்த விலையில் சேவை செய்வதா நினைக்கிறேன்" என்கிறார் தம்பிதுரை.

வாடகைக்கு ஹெல்மெட் வாங்க வந்த கந்தசாமி என்பவர், ''நான் உளுந்தூர்பேட்டை பக்கத்துல இடைக்கல் கிராமத்தில விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். வாரம் முழுக்க வயல்ல வேலை இருக்கும். வாராவாரம் சனிக்கிழமை வயல்ல விளைஞ்ச காய்கறிகள வண்டியில கொண்டு வந்து உளூர்ந்தூர்பேட்டை சந்தையில வித்துட்டு போவேன். இப்ப திடீர்னு ஹெல்மெட் அவசியம் போடனும்னு சொல்லிட்டதால, ஹெல்மெட் போடாம போகும்போது போலீஸ்காரங்க தொந்தரவு அதிகமா இருக்கு.

ஆனா நான் வாரத்துல 2 நாள் தான் வண்டியில் கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்துட்டுபோவேன். அதனால் எதுக்கு 2 நாளைக்காக ஹெல்மெட் வாங்கனும்னு இவருக்கிட்ட வாடகைக்கு வாங்கிக்கிறேன். போலீஸ்காரங்கக்கிட்ட ஹெல்மெட் இல்லாம மாட்டிக்கிட்டு 50, 100ன்னு கொடுக்கிறதுக்கு பதில் இவருக்கிட்ட 20 ரூபா கொடுத்து ஹெல்மெட்டை வாடகைக்கு வாங்கிக்கிறேன்." என்றார்.

வாடகையோ, சொந்தமோ ஹெல்மெட் போட்டால் உயிருக்கு பாதுகாப்பு தானே!

- ஆ.நந்தகுமார்