Published:Updated:

சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு!

Vikatan Correspondent
சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு!
சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு!
சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு!

''ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை" - கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறப்பிற்காக வெளியிட்ட அறிக்கைதான் இது.

இடைத்தேர்தலுக்கு ஒட்டு மொத்த அமைச்சரவையையும் அனுப்பிய ஜெயலலிதா, கலாமின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அகில இந்திய காங்கிரஸ் துந்த்தலைவர் ராகுல்காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டபோதும், தான் கலந்துகொள்ளாமல் வெறும் 6 அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைப்பதா? என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆனால், முதலாவது தேசிய கைத்தறி தினவிழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார்.

விழா முடிவடைந்தது, பிரதமர் மோடி நேராக போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்தார். 45 நிமிடத்திற்கும் மேல் இருவரின் சந்திப்பு நடந்தது. அநேகமாக இந்தியாவிலேயே ஒரு பிரதமர், முதல்வரின் வீடு தேடி சென்று மனு வாங்கி சென்றதும் இதுதான் முதல்முறையாக கூட இருக்கலாம். புரோட்டோகால் மரபுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்ட மோடியின் இந்த செயல் அரசியல் வட்டாரங்களில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு!

இதற்கிடையே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி கூட செலுத்த முதல்வர் வரவில்லை. ஏன், இஃப்தார் நோன்பில் கூட கலந்து கொள்ளவில்லை. பேராசியர்களுக்கு பணியாணை வழங்கும் விழாவை அறிவித்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை அடியோடு ஒத்திபோட்ட முதல்வர், இன்று வீடு தேடி வந்த பிரதமர் மோடியை, சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்கிறார் என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்து உள்ளன.

ஜெயலலிதா, பிரதமர் மோடியை வலியச்சென்று வரவேற்றிருப்பதும், கார்டனுக்கு மோடி சென்று ஜெயலலிதாவை சந்தித்திருப்பதும்  கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது வரை முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூட தகவல் வெளியாகி உள்ளது. 

போதாதற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''பா.ஜ.க.-அ தி மு க இடையே உள்ள கள்ள உறவைத்தான் மோடி-ஜெயலலிதா சந்திப்பு காட்டுகிறது" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதேபோல் இன்று ஈரோட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ''உடல் நிலை சரியில்லை என்று ஜெயலலிதா சொன்னது மக்களின் அனுதாபத்தை பெறதான். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்காக அரை மணி நேரம் நேற்று ஜெயலலிதா காத்திருந்திருக்கிறார். உலகமே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும்போது, ஜெயலலிதா அஞ்சலி செலுத்தாதது அவமானம்தான். ஆனாலும், அவர் குணம் அடந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறி உள்ளார்.

ஆக பிரதமர் மோடி, ஜெயலலிதா வீடு தேடி சென்று சந்தித்ததிலும், கலாமுக்கு அஞ்சலி செலுத்த போக முடியாத ஜெயலலிதா விமான நிலையத்திற்கே சென்று சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பிரதமர் மோடியை  வரவேற்றதிலும் உள்ள அரசியல் ஆதாயம்  பளிச்சென்று வெளிப்பட்டு உள்ளது.


- சி.ஆனந்தகுமார்