Published:Updated:

ஜெயலலிதா - மோடி பேசியது என்ன?

Vikatan Correspondent
ஜெயலலிதா - மோடி பேசியது என்ன?
ஜெயலலிதா - மோடி பேசியது என்ன?
ஜெயலலிதா - மோடி பேசியது என்ன?

நாகர்கோவில்: சென்னை வந்திருந்த பிரதமர் மோடி  தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியது அரசியலில் மிகுந்த விவாதத்தை உண்டாக்கியுள்ள நிலையில், இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவலை பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.  

 நாகர்கோவிலில்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக, எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற ஆகஸ்ட்  7 ஆம் தேதியை நெசவாளர் தினம் என அறிவித்து விழா எடுத்து அவர்களை கௌரவித்தார்.

வழக்கமாக இத்தகைய விழாக்கள் டெல்லியில் தான் நடைபெறும். ஆனால் தற்போது முதன்முறையாக இந்த விழா சென்னையில் நடத்தப்பட்டு நெசவாளர்கள் கௌரவிக்கப்பட்டு உள்ளனர். இது நெசவாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர்  ஜெயலலிதாவை சந்தித்துப்  பேசினார். அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருப்பார்கள் என கருதுகிறேன். இந்தியா வளர்ச்சி அடையும்போது தமிழகம் முன்னிலை பெற வேண்டும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் மாநில அரசு பல்வேறு விஷயங்களில் இன்னும் அதிகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சோவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்ததால் அவரை பிரதமர் சந்தித்தார். இது நல்ல நட்புக்கு அடையாளம். இந்தியாவில் 101 நீர் வழிச்சாலைகளை தொடங்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பழையாறு, ஏ.வி.எம். கால்வாய்களை சீரமைத்து நீர் வழிச்சாலைகள் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின்  எண்ணம். இதற்காக வருகிற 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக  சார்பில் போராட்டங்கள் நடக்க உள்ளது. மது ஒழிப்பை வலியுறுத்தி பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. சிறை நிரப்பும் போராட்டம், தாலி காக்கும் தாமரைப் போராட்டம் போன்றவற்றை பாஜக நடத்தி இருக்கிறது. எனவே யாரும் பாஜகவிற்கு போராட்டம் நடத்துவது பற்றி சொல்லி தர வேண்டியதில்லை.

மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் அடைந்துள்ளார். 5 மணி நேரம் செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று போராடிய அவரை காப்பாற்ற அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் நினைத்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். எங்களிடம் வலைகள் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் தோழர் பலர் உள்ளனர். அவர்களிடம் கேட்டிருந்தால் வலைகள் கிடைத்து இருக்கும். பல வலைகளை ஒன்றிணைத்து அவரைக்  காப்பாற்றி இருக்கலாம். அதைச்  செய்யவில்லை. இதை பாஜக வன்மையாகக்  கண்டிக்கிறது. சசிபெருமாளின் சாவை தற்கொலை வழக்காக பதிவு செய்து இருப்பதை வன்மையாகக்  கண்டிக்கிறோம். சசிபெருமாள் தற்கொலை செய்தார் என்று கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது மான நஷ்ட வழக்கு தொடர்வார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.