Published:Updated:

திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

Vikatan Correspondent
திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!
திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

விருதுநகர்: அருப்புக்கோட்டை முன்னாள் தி.மு.க. அமைச்சர் பிறந்த நாள் விழாவுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தி.மு.க. மாஜி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,  கடந்த சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான வைகைச்செல்வனிடம் தோற்றுப்போனார். அது முதல் அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., தி.மு.க. என இரு தரப்பிலும் கடந்த 4 ஆண்டுகளாக பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணிகள் நடத்துவது என்று அரசியல் களம் களை கட்டி வருகிறது.

திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

மாஜி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஆகஸ்ட் 8ம் தேதி ( இன்று) , 66வது பிறந்தநாள் விழா. எனவே, சட்டசபை தேர்தல் நெருங்குகின்ற இந்த வேளையில், அவரது பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீடு உள்ள ராமமூர்த்தி ரோடு உள்பட பல இடங்களில் அவரை வாழ்த்தி கட்சியினர் சார்பில் பிளக்ஸ் போர்டு மற்றும் போஸ்டர்கள் அச்சடித்து ஓட்டப்பட்டுள்ளன. அதுபோல் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வழக்கமாக போட்டியிடும் அருப்புக்கோட்டை தொகுதியிலும், பிறந்த நாள் விழாவுக்கு பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களில் பிரியாணி வழங்குவது, அன்னதானம் செய்வது என்று தி.மு.க.வினர் பொதுமக்களை வரும் வகையில் பலத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

விருதுநகரில் இன்று காலை 10 மணிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து பிறந்த நாள் கேக் வெட்டினார். வடக்கு மாவட்ட செயலாளரான தங்கம்தென்னரசு, அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் உள்பட கட்சியின் முன்னனி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விருதுநகர் மாரியம்மன்கோவிலில் இருந்து தி.மு.க.வினர் கொட்டு மேளங்களுடன், கே.கே.எஸ்.எஸ்.ஆரை வாழ்த்தி கோஷமிட்டபடி, அவரது வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் தி.மு.க. நிர்வாகி துரை என்பவர், மாம்பழம், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்று கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி சால்வை அணிவித்தார்.

அருப்புக்கோட்டை கவுன்சிலர் சிக்கந்தர், மதுரை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. அனாதை ஆசிரமத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி வழங்கினார்.

திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

இந்நிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆரின். பிறந்த நாள் விழா கொண்டாடங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அருப்புக்கோட்டையில் இன்று காலை பெரிய தெரு, பாவடித்தோப்பு, புளியம்பட்டி மாரியம்மன்கோவில் உள்பட 4 இடங்களில் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கினார். இதற்காக அந்த இடங்களில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, ஆடல் பாடல் என்று அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

வைகைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு இடமாக சென்று மிக்சி,  கிரைண்டர் வழங்க செல்லும்போது, கூடவே 10 கார்களில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க கொடிகளை ஏந்தி, முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடி செல்கின்றனர். அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோகவாசுதேவன், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் முத்துராஜ், அருப்புக்கோட்டை நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், அ.தி.மு.க. நகர பிரதிநிதி மலைராஜன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

திமுக மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ!

அதுபோல் அருப்புக்கோட்டையில் மாலையில் புது பஸ் ஸ்டாண்ட், நெசவாளர் காலனி, சொக்கலிங்கபுரம், வெள்ளைக்கோட்டை ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.வின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அ.தி.மு.க. கொடிகளை ஏற்றி வைக்கிறார். இதற்காக அந்த வார்டுகளில் வழி நெடுக முதல்வர் ஜெயலலிதாவின் பிளக்ஸ் போர்டுகளும், அ.தி.மு.க. கொடிகள் தோரணங்களாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அருப்புக்கோட்டையின் முக்கிய வீதிகளில் வலம் வர, மற்றொரு பக்கம் தி.மு.க.வினர் மாஜி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கார்களில் வலம் வர மொத்தத்தில் அருப்புக்கோட்டை 'களை' கட்டியுள்ளது.
 
-எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்