Published:Updated:

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்!

விகடன் விமர்சனக்குழு
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்!
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்!
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று(திங்கள்) கூடுகிறது. இதனால் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை முடங்குமா அல்லது அவை நடவடிக்கை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.   

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடரின் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த தயார் என கூறிய மத்திய அரசு, நாடாளுமன்றத்தைச்  சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தக்  கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அவை நடவடிக்கைகளைத்  தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் மசோதா தாக்கல், விவாதம் போன்ற முக்கியமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை, 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

நடப்பு கூட்டத்தொடர் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனுமதிக்குமாறும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு  வருமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "8 முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. ஏற்கெனவே 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே காங்கிரஸ் கட்சி தனது கடமையை உணரும் என நம்புகிறேன்" என்றார்.
 
அவர் மேலும் கூறும்போது, "தயவு செய்து அவைக்கு  வாருங்கள் என நான் காங்கிரஸ் கட்சியிடம் கூறியுள்ளேன். திங்கட்கிழமை திங்கட்கிழமையாகவே இருக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமையாக இருக்கக்கூடாது என நான் விரும்புகிறேன். என்ன நடக்கிறது? என்று  பார்க்கலாம" என்றார்.

மேலும் நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார். "சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அனைத்துக்  கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்" என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் மத்திய அரசின் இந்த வேண்டுகோளை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "பா.ஜனதா தலைவர்களின் எண்ணங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களை தாக்குவதாக மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய துஷ்பிரயோக அரசியல், ஒருபோதும் ஒருமித்த இந்தியாவை உருவாக்குவதற்கான அரசியலுக்கு மாற்றாகாது என்பதை மோடி அரசுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

இந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்குப்பின் நாடாளுமன்றம் இன்று (திங்கள்) கூடுகிறது. 5 நாள் இடைநீக்கம் முடிந்துவிட்டதால் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

எனினும் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருவதால், நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும் என்பது கேள்விக்குறியே.