Published:Updated:

தைரியம் இருந்தால் லலித் மோடியை கைது செய்யுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி சவால்!

Vikatan Correspondent
தைரியம் இருந்தால் லலித் மோடியை கைது செய்யுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
தைரியம் இருந்தால் லலித் மோடியை கைது செய்யுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
தைரியம் இருந்தால் லலித் மோடியை கைது செய்யுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி சவால்!

புதுடெல்லி: உங்களுக்கு தைரியம் இருந்தால் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்விட்டு உள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் எனது தந்தை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சர்ச்சைக்குரிய முக்கியமான பிரச்னைகளில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, நான் ஊழல் செய்யமாட்டேன்; மற்றவர்களும் ஊழல் செய்வதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார். ஆனால், இப்போது அவர் தனது வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுவிட்டார். தவறுகள், முறைகேடுகளை தடுத்து நிறுத்தும் துணிச்சல் அவருக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்தும், மோடியிடம் இருந்தும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இரு வகை உள்ளது. ஒரு போட்டியை ரசிகர்கள் நேரடியாக காணமுடியும். மற்றொன்று மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெறும் லலித் மோடி சம்பந்தப்பட்ட போட்டி. இந்த இரண்டாவது வகை போட்டி, கருப்பு பணம் சம்பந்தப்பட்டது. இந்த இரண்டாவது வகை விளையாட்டுக்கு சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வசுந்தரா ராஜே ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர். அரசியலுக்கும் கருப்பு பணத்துக்கும் லலித் மோடி முக்கிய பாலமாக விளங்கி இருக்கிறார்.

இந்திய மக்கள் இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால், உங்களுக்கு தைரியம் இருந்தால் வெளிநாட்டில் இருக்கும் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். சுஷ்மா சுவராஜ் போன்றோர் லலித் மோடிக்கு உதவி செய்வதை நீங்கள் தொடர்ந்து அனுமதித்தால் உங்களுக்கு தைரியம் இல்லை என்று எல்லோரும் நினைத்துவிடுவார்கள்" என்றார்.