Published:Updated:

மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு தப்ப முடியாது: கருணாநிதி

மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு  தப்ப முடியாது: கருணாநிதி
மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு தப்ப முடியாது: கருணாநிதி

மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு தப்ப முடியாது: கருணாநிதி

மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு  தப்ப முடியாது: கருணாநிதி

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் இருந்து அ.தி.மு.க. அரசு  தப்ப முடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்:

வரும் 15 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றும்போது மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறதே?

அதைத்தவிர அ.தி.மு.க. அரசுக்கு வேறு வழியில்லை. தமிழகத்திலே உள்ள தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் மதுவிலக்குக்கு ஆதரவாக கொடி உயர்த்தியுள்ளதால், நாள்தோறும் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதனை அறிவிப்பதிலிருந்து அ.தி.மு.க. அரசு தப்ப முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு சிலர் முதலமைச்சர், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பார் என்றும், விற்பனை நேரத்தைக் குறைப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் விற்பனை நேரத்தைக் குறைப்பதால் தீர்வு ஏற்படாது என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே தெரிவித்துள்ளார்.

தமிழக அரசில் முதல் அமைச்சரின் கையெழுத்துக்காக ஏராளமான கோப்புகள் தேங்கிக் கிடப்பதாகச் சொல்கிறார்களே?

எனக்குக் கிடைத்த தகவல், பத்து கோப்புகளை ஒன்றாக சேர்த்து, வரிசையாக ஒரே பேப்பரில் அதுபற்றி தட்டச்சு செய்து, அதிலே முதல்வரிடம் ஒரே கையெழுத்தினைப் பெற்று, கையெழுத்து கூட அல்ல, இனீஷியலைப் பெற்று அந்தப் பேப்பரை நகல் எடுத்து, ஒவ்வொரு கோப்பிலும் அந்தப் பேப்பரை வைத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து அனுப்பி விடுகிறார்களாம். அவ்வாறு செய்வது சரியல்ல என்றும், பின்னர் தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்றும் சில அதிகாரிகள், தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து கூறியபோதும், அது கவனிக்கப்படவில்லையாம்! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!

தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது என்று பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார?

அதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காகத்தான் பா.ஜ.க.வின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்றிருப்பாரோ?

கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியை திடீரென்று மூடி, அதிலே படித்து வந்த மாணவர்களையெல்லாம் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறதே?

உண்மைதான்! கொடநாடு எஸ்டேட்டில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்தப் பள்ளியிலே படித்து வந்திருக்கிறார்கள். அண்ணா நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளி, இப்போது 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பொதுப்பாதை அடைக்கப்பட்டது. தற்போது பள்ளியையும் மூடியிருக்கிறார்கள். அனைத்தும் அதிகார ஆக்கிரமிப்பின் அட்டூழியச் செயல்கள்!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

சுந்தர் பிச்சை “கூகுள்” நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழர் ஒருவரின் தனிச்சிறப்பான அறிவாற்றலுக்குக் கிடைத்துள்ள உலகளாவிய கவுரவம். ‘‘சமநிலையைச் சாத்தியப்படுத்தும் சக்தியாகவே கூகுளை நான் பார்க்கிறேன்” என்று சுந்தர்பிச்சை குறிப்பிட்டிருப்பது அவரது சிந்தனை ஓட்டம் எவ்வளவு சிறப்பானது, ஆக்கபூர்வமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. புகழையும் மேலும் உயர்த்துகின்ற வகையில் தன் பணியினைத் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்ற கேள்வியை கேட்டிருக்கிறதே?

இந்தப் பிரச்னையில் தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ததோடு பிரச்னையை முடிக்காமல், தேவையில்லாமல் மத்திய அரசிடம் அதற்கு ஒப்புதல் கேட்டு எழுதியது தான் தவறாகப் போய்விட்டதோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது. எனினும் இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த சுவாதி என்ற பிளஸ்-2 படித்த பெண்ணுக்கும், அவருடைய தாயாருக்கும் நடைப்பயிற்சி மேற்கொண்ட சிலர் செய்த உதவி பற்றி?

மனிதநேயம் அடியோடு பட்டுப்போய் விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுத்தான் அது. அனைத்து நாளேடுகளிலும் அந்தச் செய்தி வந்துள்ளது. கோவைக்குச் செல்வதற்குப் பதிலாக, தவறிச் சென்னைக்கு வந்து விட்ட, அந்தப் பெண் உரிய நேரத்தில் கோவைக்கு நேர்காணலுக்கு விமானத்திலேயே செல்ல வழி வகுத்து கொடுத்த சரவணன், பரமசிவன், முருகேச பூபதி ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

மத்திய முன்னாள் அமைச்சர், தயாநிதி மாறன் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அதிரடித் தீர்ப்பு பற்றி?

அவர் எதுவும் லஞ்சம் வாங்கியதாகவோ, வருவாய்க்கு அதிகமாகச் சொத்து குவித்து விட்டார் என்றோ, வெளிநாட்டுப் பணத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார் என்றோ, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றோ வழக்கு இல்லை. தொலை தொடர்புத் துறை அமைச்சராக அவர் இருந்த போது அவரது இல்லத்தில் பல தொலைபேசிகள் பயன்பாட்டில் இருந்தன என்று கூறி சி.பி.ஐ.யின் காலம் கடந்த வழக்கு இது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். தயாநிதி மாறனைக் கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்? தொலைபேசிகளுக்கான கட்டணத்தை வசூல் செய்யாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைதானே இது; என்றும் குறிப்பிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஏறத்தாழ ஒரு முற்றுப்புள்ளியே வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி சி.பி.ஐ.யின் அவசரமும், அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் முயற்சியும் ஏன், அதன் பின்னணி என்ன என்பது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சந்திப்புகளைக் கூர்ந்து கவனித்து வருவோர்க்கு நன்றாகவே விளங்கும்.

அ.தி.மு.க. ஆட்சி இன்னும் ஓராண்டு காலம் கூட இல்லாத நிலையில் அமைச்சரவையில் புதிதாக ஒருவரை ஜெயலலிதா சேர்த்திருப்பது பற்றி?

ஜெயலலிதா அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஆனந்தன் ஏற்கனவே அமைச்சராக இருந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். அப்போது ஏன் பதவியிலிருந்து அவரை நீக்கினார், அப்படி நீக்கப்பட்டவர் தற்போது மீண்டும் எப்படி அமைச்சராக்கப்பட்டார் என்பதெல்லாம் முதலமைச்சருக்கே தெரியும்.

மூத்த அதிகாரி, முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கு என்ன ஆயிற்று?

அந்த தற்கொலை வழக்கில் குற்றவாளியாகக் கூறப்பட்டவர் அ.தி.மு.க. அமைச்சர். அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார். இதுபோன்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார். அவர் வீடு சோதனையிடப்படும். ஆனால் இந்த வழக்கிலே அது இரண்டுமே நடைபெறவில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவரே கூறுகிறாராம். செம்மரக் கடத்தல் வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சுருட்டி மூடி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு