Published:Updated:

சசிபெருமாள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த போலீஸ்: வைகோ கொந்தளிப்பு!

சசிபெருமாள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த போலீஸ்: வைகோ கொந்தளிப்பு!
சசிபெருமாள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த போலீஸ்: வைகோ கொந்தளிப்பு!

சசிபெருமாள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த போலீஸ்: வைகோ கொந்தளிப்பு!

சசிபெருமாள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த போலீஸ்: வைகோ கொந்தளிப்பு!

சென்னை: மதுவிலக்குப் போராட்டம் நடத்தி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்திற்கு போலீசார் மிரட்டல் விடுத்துள்ள காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து சேலத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழகத்தை நாசமாக்கிக்கொண்டிருக்கும் மது அரக்கனை முற்றாக ஒழிப்பதற்காக வாழ்நாளெல்லாம் காந்திய வழியில் போராடி, தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சசிபெருமாளை தமிழக அரசு காப்பாற்றாததால், குமரி மாவட்ட அறப்போர்க் களத்தில் ஜூலை 31-ல் உயிரிழந்தார்.

கந்தகக் கிடங்கில் விழும் நெருப்புப் பொரியென சசிபெருமாளின் தியாக மரணம் தமிழக மக்களைக் கொந்தளிக்கச் செய்து, மது ஒழிப்பு பிரளயமென மக்கள் சக்தி எழுந்தது.

தியாகி சசிபெருமாளின் லட்சியமான முழு மது ஒழிப்பை தமிழக அரசு அறிவிக்கும் வரை அவரது சடலத்தை வாங்க மாட்டோம் என்று அவரது குடும்பம் உறுதியாய் நின்றது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக்கும், பதினொறு வயது மகள் கவியரசியும் சேலத்தில் அறப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றபோது, காந்தி சிலை அடியில் அமர்ந்திருந்த இருவரையும் காவல்துறையினர் மனிதாபிமானமின்றி இழுத்துச் சென்று கைது செய்தனர்.

முதல் நாளன்றே நாகர்கோவிலில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த விவேக், காவல்துறையினரின் கெடுபிடியால் நினைவிழந்து மயங்கியதால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த விவேக், அவரது தந்தையாரின் நல்லுடல் அவர்களது சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்னரே ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத அறப்போராட்டத்தை நிறைவு செய்தார்.

சசிபெருமாளின் துயர மரணம் காவல்துறை, வருவாய் அதிகாரிகளின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளால் நேர்ந்தது என்பதால், அதுகுறித்து பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் மறைந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கு முன்னால் நின்று தெரிவித்தேன்.

இதுகுறித்து சசிபெருமாளின் நண்பரும், வழக்கறிஞருமான சிவஞானசம்பந்தன் சசிபெருமாளின் மகன் விவேக்கின் சார்பில், நீதிவிசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நேற்று (13.08.2015) உயர்நீதிமன்ற நீதியரசர் சுந்தரேசன் அவர்களது அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரிட் மனுதாரர் தரப்பில் வழக்காடுவதற்கு என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் ஏற்று வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சசிபெருமாளை அவரது இல்லத்துக்கு முன்பு உள்ள அவர்களது நிலத்தில் அடக்கம் செய்வதற்காக, காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த ஒரு மின் கம்பம் அகற்றப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி விவேக் சேலத்திலிருந்து புறப்பட்டு வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு வந்தபிறகு, சசிபெருமாளின் துணைவியாரிடம் வற்புறுத்தி, இரண்டு வெள்ளைத் தாள்களில் மின்வாரிய அதிகாரிகள் கையெழுத்து பெற்றுள்ளனர். சசிபெருமாள் இல்லத்து மின் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

13 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சசிபெருமாள் இல்லத்துக்குச் சென்ற காவல்துறையினர், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் எங்கு வேலை செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டு மிரட்டி உள்ளனர். சசிபெருமாளின் குடும்பத்துக்கு யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்றும் கேட்டுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 14) காலையில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த சசிபெருமாளின் மகன் விவேக் இந்த விபரங்களை என்னிடம் தெரிவித்ததோடு, குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறினார்.

குடும்பத் தலைவனை மரணத்தில் பறிகொடுத்து இதயங்கள் நொறுங்கிப்போயுள்ள அக்குடும்பத்தினரை நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் மிரட்டியது ஈவு இரக்கமற்ற வேலையாகும்.

தமிழ்நாட்டில் காவல்துறை எதேச்சதிகார நடவடிக்கைகளை ஏவுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சரியான சாட்சியமாகும். காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பலத்த கண்டனம் தெரிவிப்பதோடு, இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறையினர் கைவிடாவிட்டால் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து சேலத்தில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு