Published:Updated:

அரசு முறைப் பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி!

Vikatan Correspondent
அரசு முறைப் பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி!
அரசு முறைப் பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி!
அரசு முறைப் பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.அபுதாபியில் சிறப்பான வரவேற்புகள் மோடிக்கு வழங்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிறு) பிற்பகல் தனி சிறப்பு விமானத்தில் அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்டுச்  சென்றார்.  அபுதாபி சென்றடைந்த அவரை, இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீது அல் நயான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதன்மைத் தளபதி ஆகியோர் வரவேற்றனர். அப்போது பேசிய மோடி, இந்தியாவுக்கு வளைகுடா நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன் கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு மோடி அளித்த பேட்டியில், அமீரகத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் 34 ஆண்டுகள் கழித்து வருவது வினோதமானது என்றும், இந்தியாவும், அமீரகமும் ஒன்றுக்கு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்றும் குறிப்பிட்டார். மேலும் அமீரகம் தன் இதயத்திற்கு நெருக்கமான குட்டி இந்தியா என்றும், இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மோடி இன்றும், நாளையும் 2 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீது அல் நயானை சந்தித்துப் பேசுகிறார். அவர்களது பேச்சில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்கப்படும். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

பிரதமர் மோடி தன் இரண்டாவது நாள் பயணமாக நாளை(திங்கள்) துபாய் செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் மக்டோமை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தன் கடைசி நிகழ்ச்சியாக துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் ‘‘இந்தியர்களுடனான சந்திப்பு’’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவரின் உரையைக் கேட்க 51 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.