Published:Updated:

மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)

Vikatan Correspondent
மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)
மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)
மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)

முடங்கிப்போன கை கால்களுடன் உருக்குலைந்த தேகத்துடன் தண்ணீர் தொட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும் இந்தப் பெண்ணின் புகைப்படத்தை எப்போது பார்த்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துவிடும்.

மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் சுய நினைவற்ற நிலையில் விட்டத்தை வெறித்துப் பார்க்கும் இந்த பெண்ணின் படம்தான் மெர்குரி எனும் பாதரசத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த நோயின் பெயர் மினமாட்டா நோய். இந்த நோய் முதன் முதலில் கண்டறியப்பட்ட கிராமத்தின் பெயரே இந்த நோயின் பெயராக நிலைத்துவிட்டது.

இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த பெண்ணின் பெயர் டொமொக்கோ யுமுரா (Tomoko Uemura), அருகிலிருக்கும் அவளது அம்மாவின் பெயர் ராய்க்கோ யுமுரா (Ryoko Uemura). 1971-ம் ஆண்டு ஜப்பானின் பாரம்பரியக் குளியல் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்போது வில்லியம் ஈஜன் ஸ்மித் (W.Eugene Smith) என்ற போட்டோகிராபரால் எடுக்கப்பட்டது.

1972-ல் ஜூன் 2-ம் தேதியிட்ட லைஃப் (Life) என்ற சர்வதேச பத்திரிகையில் நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட, மினமாட்டா நோயைப்பற்றிய பிரச்னை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. மினமாட்டா நோயின் தீவிரத்தை தனது குழந்தையின் புகைப்படம் மூலமாக உலகத்திற்கு தெரிவிக்க டொமொக்கோ யுமுராவின் பெற்றோர் ஸ்மித்தை படம் எடுக்க அனுமதித்தனர். மினமாட்டா நோயின் தீவிரத்தை உலகம் தெரிந்து கொள்ள காரணமாக இருந்த டொமொக்கோ யுமுரா நோய் முற்றியதால் 1977 ல் இறந்துவிட்டாள்.

1956-ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடக்க முடியாமலும் பேச இயலாததால் வாய்கள் குழறிய நிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை மினமாட்டா தீவில் இருந்த சிஸ்சோ கம்பெனியின் மருத்துவமனையில் (Chisso Corporation factory Hospital) அனுமதிக்கப்படுகிறாள். அதிலிருந்து இரண்டாவது நாளில் அந்தக் குழந்தையின் தங்கையும் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இது என்ன புதுமாதிரியான நோய் என்று மருத்துவர்கள் கையை பிசைந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, ’’எங்கள் குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று அந்தப் பகுதியில் உள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையை நோக்கி ஓட ஆரம்பித்தனர். என்ன நடக்கிறது என்று சிஸ்சோ தொழிற்சாலை நிர்வாகம் மருத்துவர்கள் குழுவை அனுப்பி ஆராய்ந்தபோதுதான் அந்த விபரீதம் வெளியே தெரியவந்தது. ஆம், அந்த மீனவ கிராமத்தில் அப்போது வசித்த வந்த பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து மக்களுக்குமே இந்த நோய் பரவி விட்டிருந்தது.

அனைத்து வீட்டிலுமே பக்கவாதம், கை கால் முடக்கம் என எதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்து தெரிய வந்தது. என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாததால் பல நாட்டு மருத்துவ பேரறிஞர்களோடு கலந்து ஆலோசித்தனர். அதன்பிறகுதான் மெர்குரியால் ஏற்படும் மூளை நரம்பு பாதிப்புகளை ஒத்த அறிகுறிகளுடன் மினமாட்டா நோய் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து செய்த பலவித பரிசோதனைகளின் முடிவில் மெர்குரிதான் மினமாட்டாவின் நோய்க்கான காரணி என்று கண்டுபிடித்தார்கள்.

’மினமாட்டா’ - ஜப்பான் நாட்டின் கியூஷு தீவில் கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய மீனவ கிராமம். அந்த கிராமத்தில் இரசாயன உரம் தயாரித்துக் கொண்டிருந்தது சிஸ்சோ தொழிற்சாலை (Chisso Corporation) நிறுவனம். 1908-ம் ஆண்டு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிலில் முதலில் ஈடுபட்டது இந்நிறுவனம். இரண்டாம் உலகப் போருக்கு பின்னான ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது. சரியாக சொல்வதென்றால் இந்நிறுவனத்தால் தான் மினமாட்டா தொழில் நகரமாக மாறியது. இதனால் இயல்பாகவே இதன் ஆதிக்கம் அப்பகுதி மக்கள் மீதும் அரசின் மீதும் அதிகமாக இருந்தது.

இத்தொழிற்சாலையின் இருந்து வெளியேறிய மெத்தைல் மெர்குரி (Methyl Mercury) மினமாட்டா விரிகுடா மற்றும் சிரானுயி கடலில் கலந்தது.  இது ஒரு கனரக உலோகம் என்பதால் இதற்கு செரிமானத் தன்மை என்பது இருக்காது. உதாரணமாக தண்ணீரில் கலந்திருக்கும் இவற்றை மீன்கள் சாப்பிட்டால் அந்த மீன்களின் கல்லீரலில் சேர்ந்துவிடும்.  அந்த மீன்களை உட்கொண்டால் உட்கொள்ளுபவரின் கல்லீரலில் போய் தங்கி மூளை, நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்புகளை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த முறையில்தான் மினமாட்டா மக்களுக்கும் இந்த நோய் பரவியது.  1956-ல் தான் இப்படி ஒரு நோய் இருப்பதையே கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் ஆனால் சிஸ்சோ நிறுவனம் 1932-லிருந்து 1968 வரை 36 ஆண்டுகளாக மெர்குரியை கடலில் வெளியேற்றிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மினமாட்டா கிராமத்தில் 36 வருடங்களாகவே தொடர் மரணங்கள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தலைகள் பெரியதாகி கை கால்கள் முடங்க ஆரம்பித்தது.

பிறக்கும் குழந்தைகளும் ஊனத்துடனேயே பிறக்கத் தொடங்கின. 2001 மார்ச் வரையிலுமே பாதிக்கப்பட்டவர்களில் 1784 பேர் இறந்திருக்கிறர்கள் என்றும் 10,353 பேர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,617 பேர் இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சிஸ்சோ நிறுவணம் 2004-ம் ஆண்டு வரை சுமார் 86 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக கொடுத்து வந்தது. இந்த சூழ்நிலைக் கேட்டினால் மனிதர்கள் மட்டுமல்ல கணக்கிலடங்காத பறவைகளும் விலங்குகளும் குறிப்பாக பூனைகளும் தலைமுறைகளாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகும் சிஸ்சோ தன் துணை நிறுவனத்தைக் கொண்டு கால்வாய் நீரில் கலந்திருந்த மெர்குரியை பிரித்தெடுத்து விற்று அதிலும் காசு பார்த்தது என்பது தனிக்கதை.

இந்தப்படங்களை எடுத்த ஈஜன் ஸ்மித் (W.Eugene Smith) 1918-ல் பிறந்தவர். இரண்டாம் போரின்போது அமெரிக்கா இராணுவத்தில் போர் புகைப்படக்காராக சேர்ந்து ஜப்பான் மீதான தாக்குதல்களை புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டிருந்தபோது ஒரு முறை குண்டடியும் பட்டிருக்கிறார். சர்வதேச பத்திரிகையான லைஃப் பத்திரிகையில் வேலை பார்த்த இவர் 1971 முதல் 1973 வரை மினமாட்டா கிராமத்தின் பாதிப்புகளை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக தனது மனைவி ஏலின் ஸ்மித்துடன் (Aileen smith) அங்கேயே தங்கி நோயின் கொடுமைகளை புகைப்படங்களாக பதிவு செய்தவர்.

அப்படி ஒருமுறை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது சிஸ்சோ நிறுவனம் இவரை குண்டர்களை வைத்து தாக்கியதில் இவரின் கண்கள் பாதித்ததால் இவருக்கு பார்வை குறைய  தொடங்கியது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஸ்மித் தனது மனைவியின் உதவியுடன் மினமாட்டாவின் பாதிப்புகளைப் பற்றி ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்தும் நுற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதித் தள்ளினார்.

1975-ல் இவரும் இவரது மனைவியும் சேர்ந்து ’Minamata- Words and Photographs’ (மினமாட்டா - சொற்களும் புகைப்படங்களும்) என்ற புத்தகத்தை வெளியிட்டு உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் மினமாட்டாவை நோக்கி திருப்பினார்கள். மெர்குரியின் கோரமான இன்னொரு முகத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்த ஸ்மித் 1978-ல் உயிரிழந்தார்.

குமமோட்டொ மாநிலத்தில் இருக்கும் மினமாட்டா மீனவர்கள் கிராமத்தில் தற்போது 26,400 பேர் வசிக்கிறார்கள். இதில் மினமாட்டா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 639 பேர் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பல அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கிய  சிஸ்சோ தொழிற்சாலை  கடந்த 2012 முதல் ஜப்பான் கெமிக்கல் கம்பெனி என்ற பெயர் மாற்றம் பெற்று இப்போதும்  ஜப்பானில் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

-ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...

மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)
மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)
மெர்குரி மரணங்கள்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-4)