
சென்னை: தேயிலை விவசாயிகளின் வாழ்வைக் காப்பற்ற பசுந்தேயிலைக்கு உரிய ஆதர விலை உடனடியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
" மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பச்சைத் தேயிலையின் விலை தொடந்து குறைந்து வருவது, கடந்த மூன்று வருடங்களாக பச்சைத் தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த விவசாயத்தை நம்பியிருக்கும் 65,000 குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. தேயிலை விவசாயிகள் தங்களின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கட்டணங்களைக் கட்ட முடியவில்லை.
அவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடனையும் அடைக்க முடியவில்லை. தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலையைக் கொடுத்தாலும் அவர்களும் உரிய விலையைக் கொடுப்பதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வற்புறுத்தலால் முன்பு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு 2 ரூபாய் என்று மத்திய அரசு கொடுத்து வந்தது. அந்த மான்யமும் இப்போது கிடைப்பதில்லை. பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய கண்காணிப்புக் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும், இதுவரை அது போன்றதொரு குழு அமைக்கப்படவில்லை. இது குறித்து பல முறை தேயிலை விவசாயிகள் முறையிட்டும் இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குறியது.
ஆகவே தேயிலை விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, தேயிலை விவசாயிகள் பெற்ற 107 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை கழக அரசு முன்பு தள்ளுபடி செய்தது போல், இப்போதும் அவர்களின் பயிர்கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.