Published:Updated:

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!

''கோட்டைப் பக்கம் போயிருந்தேன். வெறிச்சோடிக்கிடக்கிறது!'' என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்! 

''முன்பெல்லாம் தேர்தல் கமிஷனைப்பற்றி அரசியல்​வாதிகள் கிண்டல்

##~##
அடிப்பார்கள்... 'அது குரைக்கும். ஆனால், கடிக்காது... கடிக்கவும் தெரியாது!’ என்று. ஆனால், இந்தத் தேர்தலில் அது பொய்த்துவிட்டது. தேர்தல் கமிஷன் கடித்துக் குதறிவிட்டது. அந்தக் காட்சிகளைக் காணத்தான் கோட்டைக்குச் சென்றேன்!'' என்ற கழுகார், நம் டேபிளில் இருந்த 'முரசொலி'​யில் தேர்தல் ஆணையம் பற்றி முதல்வர் கருணாநிதி எழுதி இருந்த கடிதத்தின் ஒரு பகுதியை உரக்கப் படித்தார்.

''அரசின் சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முக்கியமாக நடைபெற்றால்தான், ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காக செய்திட முடியும்.  பராமரிப்புப் பணிகளை ஆய்வுகூடச் செய்யக் கூடாது என்று அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுரை கூறி உள்ளதாம். அதனால், அடிப்படைப் பணிகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைமை!'' என்று வாசித்த கழுகாரிடம்,

''வாக்குப்பதிவுக்கு முன்பு வரை தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ஏற்கத்தக்கவைதான். நடுநிலையாளர்களும், பொதுமக்களும் இதை ஆதரிக்கவே செய்தார்கள். ஆனால், வாக்குப் பதிவு முடிந்த பிறகும் இவ்வளவு கெடுபிடிகள் தேவையா? இதைப் பார்த்துத்தானே கருணாநிதி கர்ஜிக்கிறார்?''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!

''பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான அன்றாடப் பணிகளும், டெண்டர் விடும் வேலைகளுமே  நிறுத்திவைக்கப்பட்டு உள்ளனவாம். துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை அமைச்சர்களால் நடத்த முடியவில்லை. முதல்வர், கோட்டைக்கு நேரில் வந்து பல நாட்கள் ஆகின்றன. உயர் அதிகாரிகள் பலரும் விடுமுறையில் போய்விட்டனர். நிதித் துறை, தேர்தல் துறை இரண்டையும் தவிர, மற்ற துறைகள் அனைத்துமே தூங்கி வழிகின்றன. மார்ச் 1 முதல் மே 15-ம் தேதி வரையி​லான இரண்டரை மாத காலம் எந்த ஒரு கொள்கை முடிவோ, நிர்வாக ரீதியான முக்கிய முடிவோ எடுக்க முடியாது.''

''கருணாநிதி அமைதியாக இருக்கிறாரா?''

'' 'புது அரசாங்கம் வர்ற வரைக்கும் நாம்தானே ஆட்சியை நடத்தி ஆக வேண்டும். தேர்தல் கமிஷன் சொல்​வதற்காக அமைதியாக இருந்தால், நம்மைத்தானே பொதுமக்கள் குறை சொல்வார்கள்’ என்றாராம் கருணாநிதி.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைப் பகுதியை நோக்கி மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்​களின் உடல்கள் சடலங்களாகக் கரை ஒதுங்கின. அவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கு​வதாக முதல்வர் அறிவித்தார். அது, ஆணையாக வரவில்லை. கருணாநிதியால் கையெழுத்துப் போட முடியவில்லை. தேர்தல் கமிஷன் அந்த ஃபைலை நிறுத்திவைத்து இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாயை கருணாநிதி கொடுப்பதாக அறிவித்தார். அந்தக் கோப்பிலும் கையெழுத்திட முடியவில்லை. அது தொடர்பான ஆணையும் தேர்தல் ஆணையத்தில் முடங்கிக்கிடக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி, சம்பள உயர்வுக்கான நிலுவைத் தொகை முறைப்படி ஏப்ரல் துவக்கத்தில் கிடைத்திருக்கவேண்டும்.  ஆனால் இந்த ஃபைல் ஏப்ரல் 16-ம் தேதிதான் க்ளியர் ஆனதாம் தேர்தல் ஆணையத்தில். இதுமாதிரி ஏராளமான விஷயங்கள் பெண்டிங்கில் கிடக்கின்றனவாம்.''

''தேர்தல் கமிஷனில் என்ன காரணம் சொல்கி​றார்கள்?''

''தேர்தல் தேதி அறிவித்த பிறகு எதையும் செய்யக் கூடாது என்றால் கூடாது என்கிறது தேர்தல் கமிஷன். 'தேர்தல்தான் முடிந்துவிட்டதே’ என்கிறது தி.மு.க. தரப்பு. 'வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் கமிஷனுக்குத்தான் அதிகாரம்’ என்கிறார்கள் அவர்கள். இதுதான் தி.மு.க-வுக்கு இடைஞ்சலாக இருக்கிறது.''

''ஐந்து ஆண்டுகளாக செய்ய மறந்ததையா, இந்த 30 நாட்களில் செய்துவிடப்போகிறார்கள்?''

''தேர்தல் கமிஷனின் அலுவலர் ஒருவர் என்னிடம் தனிமையில் பேசினார். 'தி.மு.க. பிரமுகர்களில் சிலர் பண்ட மாற்றுக் காரியங்களைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அதிகாரிகள் தரவில்லை. அந்த கோபத்தில்தான் கருணாநிதியின் காட்டமான அறிக்கை வெளியானது’ என்று காதைக் கடிக்கிறார். கடைசி நேரத்தில் பார்க்க மிச்சம்வைத்து இருந்த காரியங்களைக் கவனிக்க முடியாத அளவுக்குத் தேர்தல் கமிஷன் நெருக்கடி தருவதே, இந்தக் கோபங்​களுக்குக் காரணம். ஆனால்..?''

''என்ன ஆனால்?''

'' ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களைப் பாதிக்கும் ஒரு விவகாரமும் இதில் உண்டு. கடந்த இரண்டரை மாத காலமாக அரசு ஊழியர்கள் டிரான்ஸ்ஃபர்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. பதவி உயர்வில் ஆரம்பித்து எந்த ஒரு ரெகுலர் பணியும் நடக்கவில்லையாம். சுகாதாரத் துறையில் ஒரு பெண் ஊழியர் 35 வருடம் பணிபுரிந்து ஒய்வு பெறப்போகிறார். அவருக்கு பதவி உயர்வு வர வேண்டிய நேரம். தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் உள்ள இந்த கால கட்டத்தில், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்காதாம். இது மாதிரி சில விஷயங்களையாவது தளர்த்தக் கூடாதா? என்பதுதான் முதல்வரின் ஆதங்கம். இதை எல்லாம் வைத்துத்தான் 'தமிழகத்தில் நடப்பது எனது ஆட்சியா? தேர்தல் ஆணையத்தின் ஆட்சியா?' என்று வெளிப்படையாகவே முதல்வர் வினா எழுப்பினார்.''

''நியாயம்தானே?''

''கடைசியாக நடந்த ஒரு நிகழ்ச்சிதான் முதல்வரை டென்ஷனாக்கிவிட்டதாம். அவர் ஏதோ ஃபைல் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். 'தேர்தல் கமிஷனரி​டம் கேட்டுவிட்டுத் தருகிறோம்' என்று அதிகாரி ஒருவர் தயங்கித் தயங்கி சொன்னார். 'புதிய அரசு ஆணைகள், அறிவிப்புகள்... இதற்குத்தான் தேர்தல் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும் என்றீர்கள்?

முதல்வரான நான் ஒரு சாதாரண ஃபைல் பார்க்​கணும்னாகூட, தேர்தல் கமிஷனர் பெயரைச் சொன்னால் என்ன அர்த்தம்?' என்று வெடித்தாராம் முதல்வர். அந்த ஃபைல், வருவாய்த் துறை தொடர்புடையது. எந்த  விஷயத்துக்காக, அதைத்  தேர்தல் கமிஷன் எடுத்துவைத்து இருந்தது என்பதும் தெரியவில்லை. ஒரு சில விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் முயன்றபோது, தேர்தல் நடத்தை விதிகளை சொல்லி மூத்த அதிகாரிகள் தடை போட்டார்களாம். அதேபோல், மந்திரிகள் மத்தியில் ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. எந்த ஃபைலைக் கேட்டாலும், அது குறித்த விவரத்தை தேர்தல் கமிஷனருக்கு அதிகாரிகள் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அந்த தகவல். இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள், கோட்டை பக்கம் போவதையே தவிர்த்து​விட்டனர். இதை சீனியர் மந்திரிகள் முதல்வரிடம் சொல்ல, 'ஒருவகையில நல்லதுதான். இந்த நேரத்துல கோட்டைக்குப் போனா, முக்கியமான ஃபைல்களைக் கிழிச்சுப்போடுறாங்க... ரகசியமாக எடுத்துட்டுப் போயிட்​டாங்க... முன் தேதியிட்டு ஃபைல்களில் கையெழுத்துப் போடுறாங்கன்னு வதந்தி கிளப்பிடுவாங்க. அதுக்கு இடம் கொடுக்காம இருக்கிறது நல்லதுதான்' என்றாராம்.''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!

''தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், சூப்பர் முதல்வராக இருக்கிறார்போலும்!''

''அப்படித்தான் தி.மு.க. வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஆனால்,  பிரவீண் குமாரைக் கேட்டால், 'மாநில அரசுத் துறைகளிடம் இருந்து ஃபைல்கள் வருகின்றன. அதை அப்படியே மத்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் எடுக்கும் முடிவுகளை நாங்கள் மாநில அரசுக்குத் தெரிவிக்கிறோம். கூரியர் சர்வீஸ்போலத்தான் செயல்படுகிறோம். நாங்களாக எந்த முடிவும் எடுப்பது இல்லை’ என்கிறாராம் கூலாக!''

''தேர்தல் முடிந்து ஒரு மாத இடைவெளி தேவையா? தேர்தல் முடிந்து விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்​தலாமே?''

''இதையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்டேன். தமிழகத்துக்கு வேண்டுமானால், இது புதிய அனுபவமாக இருக்கலாம். ஆனால், வேறு சில மாநிலங்களில் இது மாதிரி கால இடைவெளி விடப்பட்டு உள்ளதை உதாரணம் காட்டுகிறார்கள். 2006-ல் அஸ்ஸாமில் ஒரு மாதம் கழித்துத்தான் வாக்குகள் எண்ணப்பட்டனவாம். பீகாரில் ஆறு வாரங்கள் இதே மாதிரி காத்து இருந்தார்களாம். பல கட்டங்களாகத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் போது,  இது மாதிரியான சூழ்நிலை தவிர்க்க முடியாதது என்கிறார்கள். ஆனாலும் கருணாநிதியின் அறிக்கை வந்ததும்... பிரவீண் குமார், 'அமைச்சர்கள் இனி ஆய்வுக் கூட்டங்களை நடத்தலாம். சிவப்பு சுழல் விளக்கு காரில் பயணம் செய்யலாம்' என்று பொதுவாக சில தளர்வுகளைச் செய்தார். எப்படிச் சொன்னாலும், அறிவாலயத்தின் கடுப்பு குறைந்தது மாதிரித் தெரியவில்லை!''

''இந்தக் கடுப்பைத்தான் அழகிரி காட்டுகிறாரா?''

''சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய அழகிரியிடம், 'தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் எப்படி?’ என்று ஒரு நிருபர் கேட்டார். 'தி.மு.க-வைத் தோற்கடிக்கும் அளவுக்கு செயல்பட்டது’ என்றாராம் அழகிரி. அந்த அளவுக்குத் தேர்தல் கமிஷன் மீது கோபத் தீ படர்ந்து உள்ளது. அழகிரியின் கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது...''

''சொல்லும்!''

''அவரது படையில் அங்கம் வகித்த இரண்டு பேர் கார்டனின் கதவைத் தட்டி இருக்கும் தகவல். கடந்த பத்து ஆண்டுகளில் இவர்கள் மிக மிக முக்கியமான பல காரியங்களைச் செய்து கொடுத்து அழகிரிக்குத் தோள் கொடுத்தவர்கள். 'ஆட்சி மாறப்போகிறது’ என்பதால் மனம் மாறினார்களா? அல்லது அண்ணன் மீதான கோபத்தில் தடம் மாறினார்களா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். தோட்டத்துக்கான என்ட்ரி டிக்கெட் வைத்திருக்கும் நபரை இவர்கள் பார்த்ததாகவும் அவர்களை அழைத்துச் செல்லும் காரியத்தை முன்பு கௌரவமான பதவியில் இருந்த ஓர் அதிகாரி பார்த்ததாகவும் சொல்கிறார்கள். தகவல் கேள்விப்பட்டு, இன்னும் சிலர் அடைக்கலத் தூது அனுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்!''

''தட்ப வெப்பம் மாறும்போது பறவைகள் இடம் மாறுவது வழக்கமானதுதானே?''

''அம்மாவுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்​கியவர்களே... ஐலசா போடக் கை கோத்தால் எப்படி என்றுதான் அ.தி.மு.க-வினர் ஆச்சர்யப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆல் இன் ஆலாக இருந்த அதிகாரி ஒருவர்... தோட்டத்து வாரிசு ஒருவரை சந்தித்து மனம் திறந்து பேசியதாகவும் தகவல்கள் கசிகின்றன. அதிகாரிகளுக்குள் இப்போதே இரண்டு டீம்கள் உருவாகிவிட்டன. கடந்த முறை சும்மா கிடந்தவர்கள், இப்போது சுறுசுறுப்பு அடைய ஆரம்பித்து இருக்கிறார்கள்.''

''இப்போதே ரிசல்ட் வந்த சூழ்நிலை வந்துவிட்டதோ?'' என்று நாம் கேட்ட கேள்விக்கு வானத்தில் பறந்தபடியே சைகையில் பதில் சொன்னார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன்

பாடப் புத்தகம் தரக் கூடாதா?

'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் இலவசப் பாடப் புத்தக விநியோகம் தேர்தல் நடத்தை விதியின் காரணமாக இந்த ஆண்டு நிறுத்தப்பட்டு உள்ளது’ என்று திடுக்கிடும் செய்தி பரவ... ஏழை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கொதித்துப்போனார்கள். இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருக்கு ஏராளமான போன்கள்!

''நோட்டுப் புத்தகங்கள் விநியோகிக்கக் கூடாது என்று நாங்கள் யாருக்கும் எந்தத் தடையும் பிறப்பிக்கவில்லை. பொதுவாக மே மாதக் கடைசியில்தான் பள்ளிகளில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வோம். அந்தந்த மாவட்டத்துக்குத் தேவையான பாடப் புத்தகங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்போதே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளலாம். இதுபற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த விவகாரத்தில் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம்!'' என்று விளக்கம் சொல்லி வருகிறார்.                   

மிஸ்டர் கழுகு: கருணாநிதி கேட்ட கடைசி ஃபைல்கள்!
அடுத்த கட்டுரைக்கு