Published:Updated:

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

Published:Updated:
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

மாடர்ன் தியேட்டர்ஸ் 'டி.ஆர்.சுந்தரம்'

வெள்ளையர் ஆட்சியில் மக்களின் அபிமானமாக விளங்கிய சினிமாவிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போர் சமயங்களில், பிரிட்டிஷாரின் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் எடுக்கப்பட வேண்டும் என கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்ட வரலாறும் தமிழ் சினிமாக்களுக்கு உண்டு. பிரிட்டிஷாரின் கெடுபிடிகளை மீறி, சுதந்திர உணர்வை வளர்த்தன சில சினிமாக்கள். சுதந்திர வீரர்களை தீரர்களாக சித்தரித்து, அவர்கள்தம் படைப்புகளை மறைமுகமாக திணித்து தங்கள் தேச உணர்வை வெளிப்படுத்தின அத்தகைய சினிமாக்கள்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நேரத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தமிழக தளகர்த்தகர்களில் ஒருவரும், மாபெரும் கவியுமான பாரதியின் எழுச்சி மிகு பாடல் ஒன்றை, தம் படத்தில் துணிச்சலுடன் முதன்முறையாக பயன்படுத்தினார் ஒரு தயாரிப்பாளர். அவர், தமிழ்த்திரையுலகில் மறக்கவியலா படங்களை தந்து, மக்களிடம் நற்பெயர் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட டி. ஆர். சுந்தரம்.

சினிமா வளர்த்த சீமான் டி.ஆர்.சுந்தரம்

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16- ஆம் தேதி பிறந்தார் டி.ஆர்.சுந்தரம். தந்தை ராமலிங்க முதலியார். திருச்செங்கோடு பகுதியில் பருத்தி நூல் விற்பனையில்  முக்கிய பிரமுகர். பள்ளிப்படிப்பை முடித்து, இளைஞர் வயதை எட்டிய தன் மகன் சுந்தரத்தை,  நெசவுத்தொழிலின் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள, 1930 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அனுப்பினார் ராமலிங்கம்.

பிரிட்டனில் லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழகத்தில், பருத்தி நூலின் மீது சாயம் ஏற்றும் புதிய தொழில் நுட்பத்தை பயின்று, பட்டம் பெற்றார் சுந்தரம். பிரிட்டனில் ஆங்கில பிரபு ஒருவர் சுந்தரத்திற்கு நண்பரானார்.

அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்ல நேர்ந்த சுந்தரம், பிரபுவின் மகள் கிளாடிஸ் மீது காதல் கொண்டார். ஆரம்பத்தில் எதிர்த்த அந்த ஆங்கிலேய நண்பர், பின்னர் சுந்தரத்தின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். கிளாடிஸ்ஸுடன் 1933 ல் தாய்நாடு திரும்பிய சுந்தரம், தனது காதல் மனைவியை ஏற்காடு மலைவாசஸ்தலத்தில் குடியமர்த்தினார்.

வெளிநாடு சென்றுவந்ததிலிருந்து சுந்தரம், தனது  மூதாதையினரின் தொழிலை தொடர்வதில் நாட்டமில்லாதவராக இருந்தார். அவரது கவனம், அப்போது மக்களிடையே எழுச்சிபெற்றுவந்த சினிமாவின் மீது திரும்பியது. 1934- ல்  சேலம் நகரத்தில் அப்பொழுது 'ஏஞ்சல் பிலிம்ஸ்' என்ற கம்பெனி, சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. அதன் உரிமையாளர்களான சுப்பராய முதலியார், வேலாயுதம் பிள்ளை ஆகியோருடன் ஏஞ்சல் பிலிம்ஸில் பங்குதாரரானார் டி.ஆர்.சுந்தரம்.

புதிய நிறுவனத்தின் சார்பில் கல்கத்தா சென்று ஐந்து பேசும் படங்களை தயாரித்தார். படத்தயாரிப்பிற்காக கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதில் நேர்ந்த சங்கடங்களையும், வீண் தாமதத்தையும் மனதிற்கொண்டு சேலத்திலேயே ஒரு ஸ்டுடியோவை நிர்மாணிக்க முடிவு செய்த டி.ஆர். சுந்தரம், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பாதையில் மலையடி வாரத்தில், சுமார் 10 ஏக்கர் புன்செய் நிலத்தை விலைக்கு வாங்கி 1936 ல் புதிய ஸ்டுடியோவை நிர்மாணித்தார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

'மார்டர்ன் தியேட்டர்ஸ்' என்ற பெயரில் கம்பீரமாக எழுந்து நின்ற அந்த ஸ்டுடியோவை, 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் ராமூர்த்தி திறந்துவைத்தார். தன் சொந்த ஸ்டுடியோவில் 1937 ஆம் ஆண்டு, தனது முதல் படமான சதி அகல்யா வின் படப்பிடிப்பை தயாரித்தார். அந்நாளைய ரசிகர்களை கிறங்கடித்த சிங்களத்து குயில், தமிழ் சினிமாவின் முதற் கவர்ச்சி கன்னி எனப்பட்ட தவமணி தேவி, அகல்யாவாக நடித்தார்.

இந்த படத் தயாரிப்பின்போது, கதாநாயகி தவமணிதேவியை சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார் சுந்தரம். அப்போது நடிகை தவமணிதேவி ' தமிழ்ப் பெண்கள் கூச்சத்தை துறந்து சினிமாவில் நடிக்க முன் வர வேண்டும்'  என்ற வேண்டுகோளை முன் வைத்தார். சந்திப்பிற்கு பின் நிருபர்களுக்கு கொடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களை கண்டு பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள் (அன்று!). படத்தில் நடிகை தவமணி தேவி நீச்சல் உடையில் புன்னகைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு தனது முதல் படமான 'சதி அகல்யா' விற்கு வித்தியாசமான முறையில் விளம்பரத்தை செய்தார் சுந்தரம். 'சதி அகல்யா' வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

ஆங்கில வீரதீர சாகசப் படங்களை விரும்பிப் பார்க்கும் சுந்தரத்திற்கு தமிழகத்தில் 'ஸ்டண்ட் படங்கள்" தயாரிக்க விருப்பமாக இருந்தது. இதற்கென ஜெர்மனியிலிருந்து வாக்கர் (Walker) மற்றும் (Baez) 'பேய்ஸ்' என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களை தனது ஸ்டுடியோவிற்கு வரவழைத்தார். ஒளிப்பதிவில் புதிய தொழில் நுட்பங்களில் தேர்ந்த அவர்களைக் கொண்டு, தமிழின் முதல் 'ஸ்டண்ட் படமான மாயா மாயவன் வெளியிடப்பட்டது.

தமிழ்த்திரையுலகின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பி. யு சின்னப்பாவை வைத்து,  பிரெஞ்சு எழுத்தாளர் 'அலெக்ஸாண்டர் தூய்மா' என்பவர் எழுதிய Mar in the Iron mask என்ற நாவலைத் தழுவி 'உத்தமபுத்திரன்' என்ற படத்தை சுந்தரம் டைரக்ட் செய்தார். இப்படத்தில் சின்னப்பாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில்தான் பாரதியாரின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என்ற பாடலை தன் சொந்தக் குரலில் சின்னப்பா பாடினார். தமிழ்த் திரை வரலாற்றிலேயே முதன் முறையாக பாரதியாரின் பாடல் இடம் பெற்றது இப்படத்தில்தான். இந்த புகழுக்குரியவர் டி.ஆர்.எஸ்.

24.10-1940ல் வெளியான உத்தமபுத்திரன் பெரும் வெற்றி பெற்றது. உத்தமபுத்திரனை தொடர்ந்து, சுந்தரம் எடுத்த தமிழ்ப் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆகவே உத்தமபுத்திரனுக்குப் பிறகு மற்றொரு வெற்றிப் படத்தை தர வேண்டிய கட்டாயத்தில் டி.ஆர்.சுந்தரம் இருந்தார். அதற்காக சுந்தரம்பிள்ளை இயற்றிய 'மனோன்மணியம்' என்ற கவிதை நடை காப்பியத்தை படமாக்க சுந்தரம் முடிவு செய்தார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

கதையை தேர்ந்தெடுத்தப்பின் நடிக, நடிகையர் தேர்வை புதுமையான முறையில் நடத்தினார் டி.ஆர்.சுந்தரம். அதாவது, அதற்கு முன் யாருமே செய்யாத வகையில், எல்லா தமிழ் நாளிதழ்களிலும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.

''சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணியை திரைப்படமாக தயாரிக்கவுள்ளோம். அப்படத்திற்கு பொருத்தமான கதாநாயகன், கதாநாயகியை ரசிகர்களே தேர்ந்தெடுத்து எங்களுக்கு கடிதம் எழுதுங்கள்'' என்பதுதான் விளம்பர வரிகள். இந்த விளம்பரத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள், 'மாடர்ன் தியேட்டர்ஸ்'க்கு நூற்றுக்கணக்கில் கடிதங்கள் எழுதினர். பெரும்பான்மை ரசிகர்களின் எண்ணப்படி பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் படத்தின் கதாநாயகன், கதாநாயகியாகவும் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்த்திரையுலகில் பெரும்பொருட்செலவில் உருவான படம் 'மனோன்மணி' என்ற பெயர் கிடைத்தது படத்திற்கு. படத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவழித்தார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு போர்க்காட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்தனர். படப்பிடிப்பு ஏற்காடு மலை அடிவாரத்தில் நடந்தது. இப்படப்பிடிப்பில் சேர, பாண்டிய படைவீரர்களாக நடித்தவர்களுக்கு நாள் ஊதியமாக 'மூன்றணா' கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உணவு, நீர் அளிக்க பத்து மாட்டுவண்டிகளில் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டன.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

ஆறு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் நிறுத்தப்பட்டு, போர் காட்சிகளை படம்பிடித்தது. பெரும் பிரம்மாண்டமான இந்த காட்சியை பத்து நாட்களில் எடுத்தார் சுந்தரம். படத்தில் பி.யு.சின்னப்பா மிகவும் கவர்ச்சிகரமாக புலித்தோல் உடையில் தோன்றியது, விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும் ரசிகர்கள் திரும்ப திரும்ப வந்து படத்தை பார்த்து வெற்றிகரமானதாக்கினர்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பிரிட்டனின் யுத்த முயற்சிகளை ஆதரித்து, ஒரு படத்தை 1944-ல் டி.ஆர்.சுந்தரம் எடுத்தார். பர்மா ராணி என்ற அந்த படத்தை 11000 ஆயிரம் அடியில் தயாரித்தார். இதில் 'சுந்தரமே பஜ்ஜினாமா' என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் கதாநாயகன் ஹொன்னப் பாகவதர், கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. ஜப்பான் ராணுவம், பர்மாவை ஆக்ரமித்திருந்ததை முறியடிக்க, பிரிட்டிஷ், இந்திய ராணுவம் போரிடுவதாக கதையை அமைத்தார் சுந்தரம்.

படத்தில் ஜப்பானிய போர் வீரராக நடித்தவர் காளி என்.ரத்தினம். சம்பிரதாயமாக எடுக்கப்பட்ட 'பர்மா ராணி' யில் சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்திருந்ததால் வெற்றிபெற்றது. நாடு சுதந்திரம் அடைந்ததபின் ஆங்கிலேயர் ஆதரவுப் படம் என்று முத்திரை குத்தப்பட்டு 'பர்மா ராணி' தடை செய்யப்பட்டது.

அடுத்ததாக 'சௌ சௌ' என்ற நகைச்சுவை துண்டுப் படத்தை சுந்தரம் தயாரித்து, இயக்கினார். படத்தில் மூன்று தனிதனித் நகைச்சுவை கதைகள் இடம்பெற்றிருந்தது மக்களை ரசிக்க வைத்தது.
1. கலிகால மைனர் - அதில் காளி என்.ரத்தினம்,  டி.எஸ்.துரைராஜன், மற்றும் சி.டி.ராஜகாந்தம் நடித்திருந்தனர்.  2. பள்ளி நாடகம் - இதில் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் நடித்திருந்தனர்.
3. சூரப்புலி - இதில் காளி என்.ரத்தினம், சி.டி. ராஜகாந்தம் நடித்திருந்தனர். இவர்கள் பின்னாளில் கணவன் மனைவியானார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி', அதுவரை மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய படங்களிலேயே மிக அதிக செலவும், மிகப் பெரிய வெற்றியையும் பெற்ற படம். 1947ல் வெளிவந்த இப்படத்தில், ஊமையனாக நடித்த காளி என்.ரத்தினம்" அந்நாளில் தியாகராஜ பாகவதர் பாடி நடித்த மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற பாடலை தனது நகைச்சுவையான பாணியில் " .... மம்மும மீமையை மெம்மார்..." என்று பாடி நடித்தது, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 

'சுலோச்சனா' என்ற இராமாயணக் கால கதையை படமாக்க சுந்தரம் முடிவு செய்தார். அப்படத்தின் கதா நாயகன் 'இந்திரஜித்' வேடத்தில் நடிக்க, பி.யு.சின்னப்பாவை ஒப்பந்தம் செய்தார். 1946 ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பின் முதல் நாள்,  இந்திரஜித்தாக நடிக்க வேண்டிய பி.யு.சின்னப்பா, ஸ்டுடியோவிற்கு உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. எரிச்சலான சுந்தரம், தானே இந்திரஜித்தாக மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார். பி.யு.சின்னப்பா, கதாநாயகன் வேடத்திலிருந்து நீக்கப்பட்டார். டி.ஆர்.சுந்தரம் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்ற பெருமைதான் வந்தது, 'சுலோச்சனா' விற்கு. மற்றபடி ரசிகர்களிடம் எடுபடவில்லை.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்குவதில்லை. தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட தயாரிப்பிற்காக அல்லாமல் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தை வளர்ப்பதற்காக, சுந்தரம் 100 ரூபாய் மதிப்பில் 5000 பங்கு பத்திரங்களை வெளியிட்டு, அந்த காலத்திலேயே ஐந்து லட்சத்தை திரட்டினார். இப்பங்குகள் மாடர்ன் தியேட்டர்ஸ் பெயரில் வெளியிடப்பட்டன. படத் தயாரிப்பிற்காக தனது ஸ்டுடீயோ வில் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் தங்கி பணிபுரிய, தனி குடியிருப்பு கட்டிக்கொடுத்தார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

படப்பிடிப்பின்போது கறாரான மனிதராக தோற்றம் காட்டும் டி.ஆர்.எஸ், மற்ற விதங்களில் கலைஞர் களோடு சுமூகமான தயாரிப்பாளராக விளங்கினார். கலைஞர்கள் அவரை முதலாளி என்று அழைத்தனர். இன்றளவும் சினிமா உலகில் முதலாளி என்றால் அது டி.ஆர்.எஸ் தான்.

தினந்தோறும் தனது ஸ்டுடீயோவிற்கு வரும் சுந்தரம், நேரே தன் அறைக்கு செல்லமாட்டார். படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று, படக்குழுவினரிடம் அவர்களது நிறை குறைகளை கேட்பார். அவர்கள் சொல்கிற குறைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு கூறி, நிவர்த்திச் செய்ய நடவடிக்கை எடுப்பார். ஸ்டுடியோ ஊழியர்களிடம், அந்த நேரத்தில் தங்களின் குறைகளை சிறிய தாளில் எழுதித்தரச் சொல்லி பெற்றுக்கொள்வார்.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பங்கேற்றதனால் புகழ்பெற்றனர். திரைப்பட பாடலாசிரியர்கள் மருதகாசி, கவி கா.மு.ஷெரிப் பாடல்கள் எழுதி புகழ் பெற்றது இங்குதான்.

பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் டி.எம்.சௌந்தர ராஜன் போன்றோர் ஆரம்ப காலத்தில் தங்களை திறமையை வளர்த்துக் கொண்டதும் இந்த ஸ்டுடியோவில் தான். நடிகர் ஜெயசங்கர், மனோகர், நம்பியார் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் பிரபலமடைந்ததும் இங்குதான்.

கண்ணதாசனின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது மாடர்ன் தியேட்டர்ஸில்தான். 'சண்டமாருதம்' என்ற தனது பத்திரிகையில் உதவி ஆசிரியராக கண்ணதாசனை நியமித்தார். கண்ணதாசன் முதன்முதலில் சினிமாவிற்கு பாட்டு எழுதியதும் மாடர்ன் தியேட்டர்ஸில்தான். அஞ்சலி தேவியையும், எம்.ஆர்.ராதாவையும் சினிமாவில் அறிமுகம் செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

கண்டிப்புக்கு பேர் போன சுந்தரம், படப்பிடிப்பின் போது ஒரு சர்வாதிகாரிப் போல்தான் நடந்து கொள்வார். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி, படத்தை குறித்த நேரத்தில் வெளியிடும் பழக்கமுடையவர். தனது ஸ்டுடியோவில் தயாராகி, எதிர்பாராதவிதமாக எரிந்து போன 'போஜன்' படத்தை ஒரே மாதத்தில் திரும்பவும் படமாக்கி திரையிட்ட சாதனையாளர் சுந்தரம். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை தயாரித்தது.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

மலையாள மொழியின் முதல் பேசும் படமான 'பாலன்' திரைப்படத்தை 1938 ல் எடுத்தவர் சுந்தரமே. தமிழின் முதல் கலர் படமான 'அலிபாபவும் நாற்பது திருடர்களும்' படத்தை தயாரித்தவரும் சுந்தரமே. அதேபோல் மலையாளத்தில் முதல் வண்ணப் படமான 'கண்டம்பெச்சகோட்டு' என்ற படம் மாடர்ன் தியேட்டர்ஸில் 1961ல் தயாரிக்கப்பட்டது என்பது ஒரு சாதனை. அமெரிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'Jungle' என்ற ஆங்கில படத்தையும் தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம் .

பாரதிதாசனின் 'எதிர்பாராத முத்தம்' என்ற கதையை பொன்முடி என்ற பெயரில் சுந்தரம் தயாரித்தார். இப்படத்தை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். இப்படம் 1950 ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. படத்தில் பொன்முடியாக நரசிம்ம பாரதியும், பூங்கோதையாக அந்நாளைய கவர்ச்சி ராணி எனப்பட்ட மாதுரிதேவியும் நடித்திருந்தனர். அப்படத்தின் காதல் காட்சிகள், மிக விரசமாக அமைந்திருந்தன என பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தன.

இப்படத்தை தொடர்ந்து 'திகம்பர சாமியார்' என்ற படத்தை தானே டைரக்ட் செய்து தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் நம்பியார், 10 வேடங்களில் தோன்றினார். இப்படத்தின் கதை வழுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவலைத் தழுவியது.

மந்திரி குமாரி


'மந்திரி குமாரி' என்ற நாடகம் தமிழ் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. கருணாநிதி எழுதிய இந்த நாடகத்தை விலைக்கு வாங்கிய டி.ஆர்.சுந்தரம், 'மந்திரகுமாரி' என்ற பெயரில் படமெடுத்தார். எல்லிஸ் ஆர். டங்கன் என்ற வெளிநாட்டைச்சேர்ந்தவர் டைரக்டர் பொறுப்பை ஏற்றார். திரைப்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுத, கருணாநிதி சேலம் வந்து, மாத சம்பளமாக ரூ500/- பெற்று திரைப்படத்தின் வசனத்தை எழுதிக் கொடுத்தார். கனல் பறக்கும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றது. படத்தின் கதாநாயகனாக, தளபதியின் வேடம் அப்போது வளர்ந்துவந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு தரப்பட்டது.

படத்தின் வில்லன் காதாபாத்திரம் பேசும் வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. தன் காதல் மனைவி, தன் திரைமறைவு வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவளை கொல்ல திட்டம் தீட்டி, மலையுச்சிக்கு கொண்டுவருகிறான் வில்லன். ஆனால் அதை புரிந்துகொள்கிற மனைவி, தன் சாமர்த்தியத்தால் அவனையே கொன்று, தான் தப்பிக்கும் உத்தியை மக்கள் ரசித்து பார்த்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

'Many Rivers to Cross' என்ற ஆங்கிலப் படத்தை தழுவி, 'கொஞ்சும் குமரி'  என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகி,  ஒரு ரௌடி டைப். ஹீரோவை முரட்டுத்தனமாகக் காதலிக்க கதாநாயகன் மறுக்க, இறுதியில் அவனை துப்பாக்கி முனையில் தன் சகோதரர்களின் ஆதரவில் மணக்கிறார். இதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் கதாநாயகி மனோரமா.

மனோரமாதான் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்த டி.ஆர்.சுந்தரம், முதன் முதலாக ஒரு காமெடி நடிகையைக் கதாநாயகி ஆக்கினார். 'கொஞ்சும் குமரி' படம் தயாராகிக் கொண்டிருந்த சமயம்தான் அந்த துக்ககராமான நிகழ்வு நடந்தது.  சாதனைகள் பல படைத்த சுந்தரம், திடீர் மாரடைப்பால் 1963 ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாள், சேலத்தில் மரணமடைந்தார். டி.ஆர்.எஸ். முழுமையாகத் தயாரித்த கடைசிப் படம் 'கவிதா'.

டி.ஆர். எஸ் மரணத்திற்குப்பிறகு அவரது மகன் தொடர்ந்து படங்களை எடுத்தார். இருப்பினும் கால மாற்றத்தால் தங்களை மெருகேற்றிக்கொள்ளமுடியாத சூழலில், மாடர்ன் தியேட்டர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டது. தன் புதுமையான தயாரிப்புகளால் மக்களை மகிழ்வித்த மாடர்ன் தியேட்டர்ஸ் தமிழ்சினிமா வளர்ச்சியின் ஒரு மவுன அடையாளமானது.

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

1937 முதல் 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய படங்களின் எண்ணிக்கை 136. இதில் டி.ஆர்.எஸ். தயாரித்தது 98 படங்கள். இதில் டி.ஆர்.எஸ் இயக்கியது 55 படங்கள். 1937-ல் சதி அகல்யாவில் தொடங்கி 1963ல் எடுக்கப்பட்ட 'யாருக்கு சொந்தம்' வரை (சுமார் 27ஆண்டுகளில்) 52 தமிழ்படங்களையும், ஏழு சிங்கள படங்களையும், எட்டு மலையாளப்படங்களையும் மற்றும் தெலுங்கு, கன்னடம் இந்தி ஆங்கிலம் உட்பட மொத்தம் 98 படங்கள் தயாரித்து அவற்றில் 55 படங்களை இயக்கியும் சாதனை படைத்தவர் சுந்தரம்.

டி.ஆர்.சுந்தரத்தை கவுரவிக்கும் விதமாக பாராட்டி, அவரது மார்பளவுச் சிலையை கடந்த 2000 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி, சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திறந்துவைத்தார்.

டி.ஆர். சுந்தரம், இரண்டுமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத அடையாளமாகவும், ஏராளமான திரைக்கலைஞர்களுக்கும் தாய் வீடாக விளங்கிய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தற்பொழுது நவீன குடியிருப்பு வளாகமாக மாறிவிட்டது. மாடர்ன் தியேட்டரை ஞாபகப்படுத்தும் ஒரே அடையாளமாக 'மாடர்ன் தியேட்டார்ஸ்'  என்ற அலங்கார வளைவு மட்டும் இன்றும் மௌன சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது.

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism