Published:Updated:

விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

சென்னை: திருச்செங்கோடு  காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்று வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் காவலர்களுக்கு உயரதிகாரிகளால் ஏற்படும் இன்னல்கள் பற்றி நீதி விசாரணை தேவை என்றும், விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் வழக்குகளை சிபிஐ விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும், விஷ்ணுபிரியா மரணம் குறித்து கருத்து கூறிய டிஎஸ்பி மகேஸ்வரிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 27 வயது நிரம்பிய விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறது.

அவர் கடந்த 18 ஆம் தேதி  காலை  போக்குவரத்துக் காவலர் ஒருவர்  ஆசிரியரை தாக்கியதால் சாலை மறியல் போராட்டம் செய்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர் பத்து பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு  தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில்  தற்கொலைக்கும், கோகுல்ராஜ்  மரணம்  குறித்த  விசாரணைக்கும்  தொடர்பில்லை  எனவும், எனது  சாவை  அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் எழுதி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொள்பவர் இவ்வாறு எழுதி வைப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன? இவரது மரணம் குறித்து வலுவான சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இப்பின்னணியில், அவரது மர்மமான மரணம் குறித்து உண்மை நிலை கண்டறிய இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி

தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரச்னையான கோகுல்ராஜ் கொலை வழக்கு இதனிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியாதான் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தாலும், இதுவரை முக்கிய குற்றவாளியான யுவராஜை கைது செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக விஷ்ணுபிரியாவை, உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டித்து வந்ததாகவும், இதனால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் விஷ்ணுபிரியாவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பயிற்சியை ஒன்றாக மேற்கொண்டவரும், தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான மகேஸ்வரி சில அதிர்ச்சியான தகவல்களையும் வெளியிட்டார்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு இருப்பது கண் துடைப்பு நாடகமாகும். சி.பி.சி.ஐ.டி. தமிழக காவல்துறை கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும், இந்த விசாரணை மூலம் தமிழக காவல் துறையில் பெண் மற்றும் நேர்மையான நேர்மையான அதிகாரிகளுக்கு நிகழும் அநீதி வெளிவராது.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் மற்றும்  உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை வைத்து இதற்கு முன் தற்கொலை செய்துகொண்ட அரசு அதிகாரிகளின் மரணங்கள் மீது நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும் கீழக்கரையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான மகேஸ்வரி அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.