Published:Updated:

ஸ்டாலின் பேஸ்புக்கில் எழுதுவது உண்மையா?- ஜெயலலிதா கேள்வி!

விகடன் விமர்சனக்குழு
ஸ்டாலின் பேஸ்புக்கில் எழுதுவது உண்மையா?- ஜெயலலிதா கேள்வி!
ஸ்டாலின் பேஸ்புக்கில் எழுதுவது உண்மையா?- ஜெயலலிதா கேள்வி!
ஸ்டாலின் பேஸ்புக்கில் எழுதுவது உண்மையா?- ஜெயலலிதா கேள்வி!

சென்னை: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவுகள் அவருடைய கருத்துதானா? என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சந்தேகம் எழுப்பி இருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம், அவராகவே எழுதி கொண்டு வந்தாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ''விவாதம் என்றாலே ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துகள் கூறப்படுவது வாடிக்கை. தமிழக சட்டம்-ஒழுங்கு, போலீசாரின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆதரவாகவும், எதிராகவும் அவையில் கருத்துகள் கூறப்பட்டன. அவை உறுப்பினர்களாக இருந்தும் அவைக்கு வராமல் அவைக்கு வெளியே சிலரால் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

இங்கு கூறப்பட்ட எதிர்மறை கருத்துகளை பற்றி சிந்திக்கும்போது, பிராங்க் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி தெரிவித்த கருத்துகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவர், "உண்மை நிலையை மாற்றுவதே விவாதத்தின் குறிக்கோள்" என்றார். அதன்படி, உண்மையை திரித்து, மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் பேச்சு, சிலர் அறிக்கைகள், சிலர் முகநூல் பதிவு போன்றவற்றின் மூலமாக கருத்து கூறுகின்றனர்.

சட்டமன்ற தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா? என்பதை அவர் விளக்கவேண்டும். ஏனென்றால், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது மு.க.ஸ்டாலின் தனது முகநூல் மூலம் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், தி.மு.க.வின் தலைமைக்கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

அந்த இணையதளத்தை பராமரிக்கும் சில தோழர்கள் அந்த வாழ்த்தை வெளியிட்டார்கள் என்றும், அந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, தற்போதும் சட்டம்-ஒழுங்கு பற்றி மு.க.ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்துள்ள பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துதானோ, என்னவோ?" என்றார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பள்ளிவாசல் திடல் முன் திரண்டிருந்த பொதுமக்களிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசும்போது, ''சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில், எனது ‘பேஸ்புக்’ கணக்கில் (முகநூல்) வெளியிடும் கருத்துகள் என்னுடையது அல்ல என்றும், அந்த கருத்துகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் குற்றம்சாட்டி இருக்கிறார்.

ஆனால், ஜெயலலிதா சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம், அவராகவே எழுதி கொண்டு வந்தாரா? வேறு நபர்கள் எழுதியதை வாசித்தாரா? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எங்களை பேச விடுவது கிடையாது. சட்டமன்றத்தில் பேச முடியாததால், உங்களைத் தேடி மக்கள் மன்றத்தில் பேச வந்துள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும்" என்றார்.

இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.