Published:Updated:

உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்!

விகடன் விமர்சனக்குழு
உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்!
உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்!
உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, வழக்கில் இணைந்து நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டுமென்பதுதான் ஜெயலலிதாவின் சவால் என்றால் அதற்கு நான் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக காவல் துறையால் உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்க இயலாது என கருணாநிதி உண்மையிலேயே கருதுவாரேயானால், அதற்கான காரணங்களை விளக்கி, இது தொடர்பான வழக்கில் மனு தாக்கல் செய்யத் தயாரா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, காவல் துறை மானியத்திற்குப் பதில் கூறும்போது எனக்கொரு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த முறை காவல்துறை மானியம் குறித்து நான் எதுவும் எழுதவில்லை. காவல்துறை சார்பில் பல்வேறு குறைபாடுகளை என்னிடம் அளித்து அது பற்றி எழுத வேண்டுமென்று சிலர் கேட்டதைக் கூட நான் நிறைவேற்றவில்லை.

முறையாக ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் இரண்டு பேருக்கு அனுமதி வழங்கப்படும். ஆளுங்கட்சியின் சார்பில் மூன்று நான்கு பேர்களுக்கு வாய்ப்புகள் தரப்படும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டப் பேரவையில் ஜனநாயகம் கொடி கட்டிப் பறக்கிறதே; காவல்துறை மானியத்தின் மீது ஒரே நாள் தான் விவாதம். அந்த ஒரே நாளில் கூட காவல்துறை மீது பேசுவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நேற்றையதினம் காவல்துறையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் டி.எஸ்.பி., ஜெயலலிதா ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் பாதிப் பக்கங்களைக் காணவில்லை. இது குறித்து பேரவையில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விவாதிக்கக் கோரியும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விஷ்ணு பிரியா விவகாரத்தில் சந்தேகம் அதிகரிக்கிறது

மறைந்த காவல்துறை நண்பர்களுக்கு அரசின் சார்பில் வழக்கமாகத் தரப்படும் உதவி நிதியை வழங்கும் முதல்வர் ஜெயலலிதா, டி.எஸ்.பி. தகுதியில் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விஷ்ணுபிரியாவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவருடைய தற்கொலை பற்றிய விசாரணையில் அவருடைய மேல் அதிகாரிகள் கொடுத்த 'டார்ச்சர்' தான் காரணம் என்று பேசப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. சார்பில் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதற்காகத் தான், சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், முதல்வர் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தெரிவித்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகமாகத்தான் ஏற்படுத்துகின்றது.

அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து பற்றி நான் விடுத்த அறிக்கையைக் குறிப்பிட்டு ஜெயலலிதா, அந்த வழக்கிலே இணைந்து கொள்ளத் தயாரா என்று எனக்கு சவால் விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்!

தலைமை நீதிபதி அவ்வாறு தமிழகக் காவல் துறை நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கவில்லை என்றும், அவர் தெரிவித்ததாக ஏடுகளில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா பேரவையில் கூறும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பு அளிக்க தமிழகப் போலீஸ் தவறி விட்டது என்றும் கருணாநிதி சொல்கிறார். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் போடப்பட வேண்டும் என்கிறார். இது தொடர்பாக வழக்கில் கருணாநிதி நினைத்தால் தன்னை இணைத்துக் கொள்ளத் தயாரா? இதற்கு மனு தாக்கல் செய்வாரா? நான் கருணாநிதிக்கு இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

'காவல்துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணிவகுத்து வந்து கொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல இன்று ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது' என்று செய்திகளில் வெளிவந்த தலைமை நீதிபதியின் கருத்துக்கு இந்த அரசின் பதில் என்ன என்று தான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா பேரவையில், "சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பாதுகாப்பு அளிக்க தமிழகப் போலீஸ் தவறி விட்டது என்றும் கருணாநிதி சொல்கிறார். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் போடப்பட வேண்டும் என்கிறார்" என்றெல்லாம் நான் கூறாததைக் கூறியதாக பேரவையிலேயே உண்மைக்கு மாறாக ஒரு முதல்வரே பேசி, அதையொட்டி எனக்கு சவாலும் விடுக்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்ன தான் நினைப்பது?

இந்த வழக்கே நீதிபதிகள் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ததன் மூலம் தொடங்கியதாகும். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) அல்லது அதுபோன்ற ஓர் அமைப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதுடன், நீதிமன்றப் பணி சுமுகமாக நடைபெறவும் வழி வகுக்கும் என தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தெரிவித்த இந்தக் கருத்துகளும் உண்மை இல்லையா? நான் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் அனைத்துமே நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்த கருத்துகள்தான்.

இதைக் கூறுவதற்காக நான் இந்த வழக்கில் இணைந்து நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டுமென்பது தான் ஜெயலலிதாவின் சவால் என்றால் அதற்கு நான் தயார்.

நான் தெரிவித்த கருத்துகள் நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்தவை என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்ளுமேயானால், முதல்வர் ஜெயலலிதா அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கத் தயாரா?" என்று கூறியுள்ளார்.