Published:Updated:

காலம் தாழ்த்தும் ஆளுநர்கள்... கிடப்பில் கிடக்கும் தமிழக அரசின் 50+ சட்ட மசோதாக்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் 33 உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், தடைக்கான அவசரச் சட்டம் காலாவதியாகி இருக்கிறது.

Published:Updated:

காலம் தாழ்த்தும் ஆளுநர்கள்... கிடப்பில் கிடக்கும் தமிழக அரசின் 50+ சட்ட மசோதாக்கள்!

தமிழ்நாட்டில் 33 உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், தடைக்கான அவசரச் சட்டம் காலாவதியாகி இருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தர சட்டமாகிருக்க வேண்டும். அதன்படி, ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் நவ.27-ம் தேதியோடு காலாவதியாகி இருக்கிறது. அவசரச் சட்டம் நவ.27-ம் தேதியோடு காலாவதியாகிவிடும் என்று தெரிந்துதான், மசோதா குறித்து 24-ம் தேதி இரவு அரசுக்கு கடிதம் அனுப்பி சந்தேகம் கேட்டிருக்கிறார் ஆளுநர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் தி.மு.க-வினர். ஆளுநரின் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே விளக்கமும் அளித்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இருந்தபோதும் காலாவதியாகும் முன் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் சார்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குடியரசு தலைவர் மாளிகையிலும், ஆளுநர் மாளிகையிலும் கிடப்பில் கிடப்பது புதிதல்ல. 2018 முதல் 2022 வரை குடியரசுத் தலைவர், ஆளுநரின் ஒப்புதலுக்காக 67 மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 54 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அ.தி.மு.க ஆட்சியில்...

அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாடு மீன்வளம், கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத் திருத்தம், அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம்,

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் சட்டத் திருத்தங்கள், மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்தம், டி.என்.பி.எஸ் தேர்வில் தமிழ் பாடத்தையும் சேர்ப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்டவையோடு மொத்தம் 14 மசோதாக்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு அனுப்பப்பட்ட மசோதா, மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவது ஆகிய இரண்டுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைத்துள்ளது. மற்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.  

தி.மு.க ஆட்சியில்...

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு இருக்கும் பழைய சட்டங்களைத் திருத்துவதற்கு வழிசெய்யும் மசோதா, போதைப்பொருள், சைபர் சட்டம் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான சட்டத் திருத்தம்,

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட 52 மசோதாக்கள் தி.மு.க ஆட்சியில் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் அ.தி.மு.க போடப்பட்ட மசோதாக்களில் சில திருத்தங்கள், மாற்றங்களைச் செய்து அனுப்பப்பட்டவையும் அடங்கும். இவற்றுள், மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்காக மசோதா, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா, கும்பகோணம், தாம்பரம் உள்ளிட்ட 6 புதிய மாநகராட்சிக்கான மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்களுக்கு மட்டுமே இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடப்பில் கிடக்கும் மசோதாக்களில் பெரும்பாலானவைக்கு ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்கவேண்டியிருக்கிறது. நீட் தேர்வு விலக்கு, சிறைவாசிகளுக்கான சட்டதிருத்த மசோதா உள்ளிட்ட ஒருசிலவற்றுக்குதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் தாழ்த்தும் ஆளுநர்கள்... கிடப்பில் கிடக்கும் தமிழக அரசின் 50+ சட்ட மசோதாக்கள்!

இதுகுறித்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனிடம் கேட்டபோது, "அரசியல் சாசனத்தில் ஆளுநர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த கால வரம்பையும் உருவாக்கவில்லை. ஆனால், தற்போதுள்ள பெரும்பாலான ஆளுநர்கள் மத்திய அரசு சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கிறார்கள். இதனால், சட்டமன்றத்துக்கு அதிகாரமே இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதம் ஏற்படும்போது மாநில அரசு நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வழக்கு வெற்றியடையும் என்று சொல்ல முடியாது. ஆனால், மசோதா கிடைப்பில் உள்ளது என்பதைப் பொதுவெளிக்கு கொண்டுவர அது ஒரு வாய்ப்பாக அமையும். நீதிமன்றம் செல்லும் போது இதேபோல ஆளுநர்களுக்கு மறைமுகமாகச் சுட்டிக்காட்டலாம்" என்றார்.

கிடப்பில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “ஆளுநர் அதிகாரத்தை வரையறை செய்வது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு காலவரையறை நிர்ணயம் செய்யாமல் இருப்பது பெரும் சிக்கலாக இருக்கிறது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி
படம் : ஶ்ரீனிவாசலு

அமைச்சரவையின் கூட்டு முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை உச்ச நீதிமன்றம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். மசோதாக்களை நிச்சயம் நிறைவேற்றுவோம். நீதிமன்றத்தை நாடும் சூழல் வந்தால் அப்போதும் தயங்காமல் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு மாநில உரிமையை நிலை நாட்டுவோம்.” என்றார்.