Published:Updated:

மோடி அரசு வந்தபிறகு வகுப்பு வெறி உணர்வு தூண்டப்படுகிறது: சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

விகடன் விமர்சனக்குழு
மோடி அரசு வந்தபிறகு வகுப்பு வெறி உணர்வு தூண்டப்படுகிறது: சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!
மோடி அரசு வந்தபிறகு வகுப்பு வெறி உணர்வு தூண்டப்படுகிறது: சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

கோவை: மோடி அரசு வந்தபிறகு வகுப்புவெறி உணர்வு தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மோடி அரசு வந்தபிறகு வகுப்பு வெறி உணர்வு தூண்டப்படுகிறது: சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

இதுகுறித்து அவர் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மோடி பிரதமரான பிறகு 25வது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முன்னெப்போதும், நமது நாட்டின் வேறெந்த பிரதமரும் இதுபோல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதில்லை. தற்போது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்குச் சென்று 'டிஜிட்டல் இந்தியா' என்ற முழக்கத்தை கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே மேக் இன் இந்தியா என்று மோடி முழங்கினார். அதன் பிறகுதான் இங்குள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. இதனால் படித்த திறமையான 30 ஆயிரம் இளம் பொறியாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இப்போது டிஜிட்டல் இந்தியா என்று மோடி சொல்வதால் என்னாகும் என்று பார்க்கலாம்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி அருகே காத்திரி என்ற கிராமத்தில் வகுப்பு மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது மகன் படுகாயம் அடைந்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று சொல்லி அவர்கள் மீது வகுப்புவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் வகுப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த வந்த காவல் துறையினர் மீதும் வகுப்பு வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை நடத்தி மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இந்த கலவரம் தூண்டப்பட்டுள்ளது.

மோடி அரசு வந்தபிறகு வகுப்புவெறி உணர்வு தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மோடி அரசின் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதவெறியைத் தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். கடந்த 16 மாத காலத்தில் இதுவரை மத துவேஷத்தைத் தூண்டிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது இந்த அரசு குறைந்தபட்சம் ஒரேயொருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.

-ச.ஜெ.ரவி