Published:Updated:

முஸ்லிம் சிறைவாசிகள் மீதான சித்ரவதை: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

முஸ்லிம் சிறைவாசிகள் மீதான சித்ரவதை: நீதி விசாரணைக்கு கோரிக்கை!
முஸ்லிம் சிறைவாசிகள் மீதான சித்ரவதை: நீதி விசாரணைக்கு கோரிக்கை!
முஸ்லிம் சிறைவாசிகள் மீதான சித்ரவதை: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

நாகூர்: தமிழக மத்திய சிறைச்சாலைகளில் முஸ்லிம் சிறைவாசிகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மிகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருவது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “ தீவிரவாதம், பயங்கர வாதத்தின் பக்கம் எந்த சமூகத்தின் இளைஞர்களும் செல்லக் கூடாது. தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், அனைத்து மதத்தினரின் தனித்தன்மைகளை காத்தல், கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச திட்டங்களை வலியுறுத்தி தேசிய அளவில் பிரச்சாரம் செய்வது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

சுதந்திர இந்தியாவில் ஆண்டாண்டுக்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த மதச்சார்பற்ற ஜனநாயக நிலைப்பாடு மெல்ல மெல்ல மாற்றப்பட்டு இந்துத்துவ கொள்கைகள் திணிக்கப்பட்டு வருகின்றன. 32 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த பா.ஜ.க 68 சதவீத மக்களை அன்னியப்படுத்தி ஆட்சி நடத்து கின்றனர்.

இதன் விளைவாக மத துவேஷம் தலைதூக்கி அது உணவுப் பிரச்னையில் கொலை செய்யப்படும் வரையிலும் உச்சத்தை தொட்டு நிற்கிறது.  முதலில் பசுவதை தடைச் சட்டம் என்றார்கள். பின்னர் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை என்றார்கள். தற்போது மாட்டிறைச்சியை காரணம் காட்டி ஒரு அப்பாவி கொல்லப்பட்டிருக்கிறார். எனவே உத்தரபிரதேச படுகொலை சம்பவத்தை கண்டித்து வரும் 7 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது.

புழல் சிறைச்சாலையில் முஸ்லிம் சிறைவாசிகள், சிறைக்காவலர்களை தாக்கினார்கள் எனக்கூறி அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மிகக் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

முஸ்லிம் சிறைவாசிகள் மீதான சித்ரவதை: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

புழல் சிறையில் தனி அறைகளில் 24 மணிநேரமும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள், சிறை அதிகாரிகளை தாக்கினார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

எனவே தமிழக சிறைகளில் முஸ்லிம் சிறைவாசிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இதை செய்ய தவறினால் மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல மாவட்ட தலைநகரங்களில் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம்” என்றார்.