Published:Updated:

தனியாருக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்க முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு!

விகடன் விமர்சனக்குழு
தனியாருக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்க முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு!
தனியாருக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்க முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு!
தனியாருக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்க முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு!

சென்னை: தனியார் துறைமுகங்கள் வளர்ச்சியடைவதற்காக, சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்க அ.தி.மு.க. முயற்சி செய்து வருவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் இரண்டாவது பெரியதும், மூன்றாவது பழையதுமான துறைமுகம்தான் சென்னைத் துறைமுகம். 2008-2009ல் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் இந்தியாவில் 17 சதவிகிதம் சென்னைத் துறைமுகத்தில் தான் கையாளப்பட்டது.

இந்தத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் புள்ளி விவரத்தைப் பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் அளவும், செயல்திறனும் குறைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு குறைவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசல் தான். சென்னையின் புற நகரங்களிலிருந்து சென்னைத் துறைமுகத்தினை சரக்குகள் வந்தடைய நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை சரி செய்து, சரக்குகள் போக்குவரத்தைத் தேக்கமின்றி விரைவுபடுத்துவதற்காகத் தான் தி.மு.க ஆட்சியில் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டமே தொடங்கப்பட்டது.

சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்ட காரணத்தால், அதுவரை ஏற்றுமதியாகி வந்த 100 லட்சம் டன்னில், 60 லட்சம் டன் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்திற்கும், 30 லட்சம் டன் எண்ணுர் துறைமுகத்திற்கும் சென்றது. இதில் கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் தனியார் துறைமுகமாகும். 2008ஆம் ஆண்டு தான் இந்தத் துறைமுகம் தொடங்கப்பட்டு, இந்தக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய துறைமுகமாக வளர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தத் துறைமுகத்தில் ஏற்றுமதி 250 லட்சம் டன்கள் என்றால், 2015ஆம் ஆண்டு 407 லட்சம் டன்கள் ஏற்றுமதியாகி உள்ளன.

இதனைப் பார்க்கும்போது, இரண்டாவது பெரிய துறைமுகமாக இருந்த சென்னைத் துறைமுகம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து, புதியதாக தொடங்கப்பட்ட கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடல்சார் வாணிபத்தின் மிக முக்கிய அடையாளமான சென்னைத் துறைமுகத்தின் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணங்களில் மையமான ஒன்று தான் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை உள்நோக்கத்துடன் முடக்கிப் போட்டதாகும்.

அதானி குழுமத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அரசினால் அவசர அவசரமாக சூரிய மின்சக்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் கூட, மற்ற தனியாரிடம் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி கிடைக்கும்போது, அதிக அளவுக்கு விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.

அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கையாண்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் எண்ணுர் காமராஜர் துறைமுகம். அந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலே தான் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்திருக்கிறது. தற்போது அதே அதானி குழுமம் தான், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு, முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தை நலிவடைந்திடச் செய்ததே அதானி குழுமத்திற்கு உதவிடும் உள்நோக்கத்தோடு தானா என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழத் தான் செய்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா? தனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன'' எனக் கூறியுள்ளார்.