
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்
தென்னிந்திய மொழிப்படத் தயாரிப்புகள் பரவலான ஒரு வியாபார வட்டத்தைப் பெற்றிருக்காத காலம் அது. குறிப்பாக, தமிழ்த் திரைப்படங்கள் வட இந்திய உலகில் தீண்டத்தகாதவையாகக் கருதப்பட்ட கால கட்டம்! அப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வட இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தின் கதவுகளையே தட்டித் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்தப் படத்தின் பிரமாண்டமும் தொழில்நுட்ப விஷயங்களும் ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்தன. படத்தின் காட்சியமைப்புகளும், பிரமாண்டமான செட்டுகளும் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பிரமிப்பில் ஆழ்த்தின. இம்மாதிரி மீண்டும் ஒரு படம் வெளிவருமா என எல்லா தரப்பினரிடையேயும் பட்டிமன்றமே நடந்தது அந்நாளில்!
ஒரே நாள் இரவில், ஒரு தமிழரின் பெயரை வட இந்தியா தன் திரைப்பட வரலாற்றில் குறித்துக்கொண்டது. திரையுலகம் அவர் பெயரைப் பொன்னேட்டில் பொறித்துக்கொண்டது.
அந்தத் திரைப்படம் - சந்திரலேகா. அந்தத் தமிழர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்.
தென்னிந்திய மொழிப்படங்களுக்கு, வட இந்திய வியாபார வாசலை திறந்துவிட்ட முதல்திரைப்படம் சந்திரலேகா.
இளமைப் பருவம்
1903-ஆம் ஆண்டு, திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் எஸ்.சீனிவாசன். தனது நான்காவது வயதில் தந்தை சுப்பிரமணிய அய்யரை இழந்தார். தாயார் வாலாம்பாள் அரவணைப்பில், திருத்துறைப்பூண்டியில் பள்ளிக் கல்வியை முடித்தார். மேற்படிப்புக்காக சென்னைக்குத் தன் தாயாருடன் வந்து சேர்ந்தார்.
சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் B.A. வகுப்பில் சேர்ந்தார். ஏழ்மை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்கமுடியாமல் போனது. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை ரயில்வே கம்பெனியில் வேலை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ’குடியரசு’, 'ஊழியன்' போன்ற பத்திரிகைகளுக்கு விளம்பரங்களைப் பெற்றுத்தந்து, கமிஷன் பெற்று வருவாய் ஈட்டினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர் வாசன். வாசிக்கும் ஆர்வமும் இயல்பாகவே இருந்ததால், சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அடிக்கடி சென்று, அங்கு கிடைக்கும் பிரபலமான ஆங்கில நாவல்களையும், வாழ்க்கை முன்னேற்றத்துக்கான நூல்களையும் வாங்கி வந்து படிப்பார்.

படித்து ரசிப்பதோடு மட்டுமின்றி, அவற்றை எளிய தமிழில் மொழிபெயர்த்து, பாமரனும் படிக்கும் வகையில் புத்தகமாக வெளியிட்டார். இதனால் வருவாய் சற்று அதிகரித்தது.
அந்த வகையில், 1920-களில், ஆங்கிலத்தில் வெளிவந்த ’Thirty three Secrets to a Successful Marriage' என்ற நூலை வாசித்தவர், அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து, 'இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். 400 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாய்.

கைவசமானது விகடன்!
பூதூர் வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்த ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் விளம்பரம் சேகரித்துக் கொடுத்து வந்தார் வாசன். ஒருமுறை, தனது புத்தகம் பற்றியும் அதில் விளம்பரம் தந்தார். ஆனால், அந்த இதழ் ஆனந்த விகடன் வெளிவரவில்லை. விசாரித்தபோது, பணமுடை காரணமாகவே வைத்திய நாதய்யரால் பத்திரிகையை வெளியிடமுடியவில்லை என்பது தெரிந்தது. அவரது தவிப்பைக் கண்ட வாசன், ”ஆனந்த விகடன் பத்திரிகையை நான் எடுத்து நடத்துகிறேன். உங்கள் உரிமையை விட்டுத் தர என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒரு எழுத்துக்கு 25 ரூபாய் வீதம், ஆனந்த விகடன் என்னும் எட்டு எழுத்துக்களுக்கு ரூ.200/-” என்று வைத்தியநாதய்யர் விலை சொல்ல, அதன்படியே கொடுத்து ஆனந்த விகடன் பத்திரிகையைச் சொந்தமாக்கிக் கொண்டார் வாசன். இது நடந்தது 1928-ஆம் ஆண்டு.
விகடனின் அடிப்படை நோக்கம், 'நகைச்சுவையோடு, நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, சமுதாயத்தை மேம்படுத்துவதே' என்பதில் உறுதியாக நின்று, சமூகத்தின் அடித்தள மக்களுக்கும் நகைச்சுவை உணர்வை ஊட்டிய முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெயரை விகடனுக்குப் பெற்றுத் தந்தார் வாசன். விகடன் தன் கைக்கு வந்த பின்பு, அதில் பல புதுமையான அம்சங்களைப் புகுத்தி, அதன் விற்பனையைப் பல மடங்கு உயர்த்தினார்.

கல்கி
கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி), தேவன் (மகாதேவன்) போன்ற திறமையான எழுத்தாளர்களைத் தனது பத்திரிகையின் பணியில் நியமித்து, அவர்களின் எழுத்துக்களை வெளியிட்டார். மார்கன், மாலி போன்ற பிரபல ஓவியர்களைப் பணியில் அமர்த்தி, தரமான கார்ட்டூன்களையும் அற்புதமான சித்திரங்களையும் வாசகர்களின் பார்வைக்கு விருந்தாக்கினார்.
புத்தகக் கட்டுகள் வந்து இறங்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு, விடியற்காலையிலேயே வாசகர்கள் வந்து காத்திருந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு ஆனந்த விகடன் பத்திரிகையில் சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சேர்த்து, அதன் மீது ஒரு ஈர்ப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தினார். தமிழர்களின் இல்லங்கள்தோறும் வெற்றி உலா வந்தது விகடன்.

பத்திரிகை, சினிமா இரட்டைச் சவாரி
தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாக வலம் வந்த எஸ்.எஸ்.வாசன், திரையுலகிலும் சாதனை படைத்தார். ஆரம்பத்தில் விநியோகஸ்தராக திரையுலகில் களம் இறங்கியவர், பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டினார்.
1935-ஆம் ஆண்டில், ஆனந்த விகடனில் வெளியான தொடர்கதை 'சதிலீலாவதி'. அதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன்தான். வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற அந்த நாவலைத் திரைப்படமாகத் தயாரிக்க விருப்பம் கொண்டார் மருதாசலம் செட்டியார் என்ற பட அதிபர். எந்தத் தொகையும் கோராமல், படத்தை எடுக்கத் தன் மனப்பூர்வமான ஒப்புதலைக் கொடுத்தார் வாசன்.

இந்தப் படத்துக்குக் கந்தசாமி முதலியார் (நாடக வாத்தியார்) வசனம் எழுதினார். 1936-ல் 'சதிலீலாவதி' படம் வெளியாகி, வசூலை அள்ளிக் குவித்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான இரண்டு நடிகர்கள் கிடைத்தார்கள். ஒருவர், ராம்சந்தர். பின்னாளில் தமிழ்த்திரையுலகையே கட்டி ஆண்டதோடு, தமிழகத்தின் முதலமைச்சராகவும் கோலோச்சிய எம்.ஜி.ஆர்-தான் அவர். மற்றொருவர், குணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையா.
’சந்திரலேகா’வின் மாபெரும் வெற்றிக்குப் பின், வாசன் எடுத்த மற்றுமொரு பிரமாண்ட திரைப்படம் ‘ஔவையார்’. அதில் ஔவையாராக நடிப்பதற்கு கே.பி.சுந்தராம்பாளுக்கு அந்நாளிலேயே வாசன் கொடுத்த தொகை ஒரு லட்சம் ரூபாய்.
(தொடரும்)
- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்
இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...









