Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 414.10.87

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 414.10.87

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

ழத் தமிழர்கள் துடிக்கிறார்கள். உயிர்த் தியாகம் செய்துகொண்ட திலீபனின் உடல், யாழ் மருத்துவமனையில் அவரது விருப்பப்படியே  ஆராய்ச்சி செய்ய ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், 12 விடுதலைப் புலிகள், சிங்களச் சிறையில் சயனைட் அருந்தி இறந்த செய்தி ஈழத் தமிழரைத் தாக்கியது.

 சிங்களப் படைகளைக் கதிகலங்கடித்த குமரப்பா, புலேந்திரனைப்போன்ற மாவீரர்​கள்,  

##~##
;தற்கொலை செய்து​கொண்டார்கள் என்றபோது யாழ் நகரில் பூகம்பமே ஏற்பட்டது.

சென்னையில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகம் மூடப்பட்டு, அங்கே இருந்த பொருட்கள் யாழ்ப்​பாணம் எடுத்துச் செல்லப்படும் முன்பு, வேதாரண்யம் கடற்கரையை ஒட்டிய ஒரு முகாமில் கிடந்தன.ஒரு மாதமாகக் கிடந்ததால், உப்புக் காற்றில் இரும்பு பீரோக்கள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் துருப்பிடித்தன. முக்கியமான ஆவணங்கள் சேதமடையத் தொடங்கின. வேதாரண்யம் வந்து அவற்றை எடுத்துச் செல்ல விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப் படையிடம் அனுமதி கோரினார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனிடமும், அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டனர். இந்திய அமைதிப் படையினரிடம் இருந்து, 'போகக் கூடாது’ என்ற தடையோ, 'போகலாம்’ என்ற அனுமதியோ வர​வில்லை. பண்ருட்டியிடம் இருந்தும் பதில் இல்லை!

அவற்றை எடுத்துச் செல்லும் நோக்​குடன், 'கடல் புறா’ என்ற பெரிய விசைப் படகில் யாழ் தளபதி குமரப்பா, திரிகோண​மலை புலேந்திரன் உட்பட 17 பேர் புறப்பட்டனர். இவர்கள் புறப்பாடு, போர்க்

பழசு இன்றும் புதுசு

காலம்போல ரகசியமாக வைக்கப்​படவில்லை. ஆகவே, எளிதாகச் செய்தி கிடைத்து, பருத்தித் துறை கடற் பகுதியில் இலங்கைக் கடற் படை அவர்களை வளைத்தது. இந்திய அதிகாரிகள் விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை குமரப்பாவுக்கும் மற்றவர்களுக்கும். தங்கள் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்களே தவிர, சண்டை ஏதும் போடவில்லை.

இவர்களிடம் ஜீ 3, எம். 16 என்ற துப்பாக்கிகள் மட்டுமே இருந்தன. இந்த மாதிரித் துப்பாக்கிகளைத் தற்காப்புக்காக வைத்துக்கொள்ள, இந்திய ராணுவம் அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால், அவற்றை இலங்கை ராணுவம் பறித்துக்கொண்டது!

குமரப்பாவையும் புலேந்திரனையும் ஏதோ கடல் கொள்ளைக்​காரர்களைப்போல நடத்த ஆரம்பித்தது இலங்கை ராணுவம். அவர்களைக் காங்கேசன் துறை ராணுவ முகாமுக்கு இழுத்துச் சென்று, பிறகு பலாலி முகாமுக்குக் கொண்டுவந்தனர்.

''குமரப்பாவையும் புலேந்திரனையும் இந்திய ராணுவத் தளபதிகள் நன்றாக அறிவார்கள். பிரபாகரன் சார்பில் குமரப்பா பேச்சுவார்த்தைக்குப் பல முறை வந்திருக்கிறார். குமரப்பா முக்கியமானவர் என்பதைத் தெரிந்தும், இந்திய அதிகாரிகள் பரபரப்பு அடையாதது ஆச்சர்யம்!'' என்றார் விடுதலைப் புலி பிரமுகர்களில் ஒருவர்.

குமரப்பாவும் புலேந்திரனும் ஈழத்தில் தன்னிச்சையாக நடமாடிக்கொண்டு இருந்த​வர்களே. அப்போது கைது செய்யாமல், திடீர்க் கைது செய்து, 'பொது மன்னிப்புப் பட்டியலில் இவர்களுக்கு இடம் இல்லை’ என்று வாதாடியது இலங்கை அரசு.

''பலாலி ராணுவ முகாமில் அவர்கள் சிறை வைக்கப்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி இலங்கை ராணுவம் காவல் காத்தது. இலங்கை ராணுவத்தைச் சுற்றி, இந்திய ராணுவமும் காவல் காத்தது!'' என்றார் அந்த விடுதலைப் புலி.

17 பேரையும் கொழும்புக்குக் கொண்டு​செல்ல இலங்கை ராணுவம் முடிவு செய்தது. 'எந்தக் காரணத்தைக்கொண்டும், சிங்கள ராணுவத்திடம் சிக்க மாட்டோம். சிக்கினால், சயனைட் அருந்திச் சாவோம்’ என்று சபதம் எடுத்தார்கள் புலிகள்.

'கொழும்புக்குக் கொண்டுசெல்ல முயன்றால், சயனைட் அருந்திச் சாவார்கள்’ என்று எல்.டி.டி.ஈ. சார்பில் மாத்தையா எச்ச​ரிக்கை செய்தார். அப்போதுதான் இந்திய - சிங்கள அதிகாரிகளுக்கு 'சயனைட்’ நினைவு வந்திருக்கிறது.

'சயனைட்’ அருந்தாமல் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இருந்த அறைக்குள் சிங்கள ராணுவத்தினர் நுழையமுடிய வில்லை. உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்​கொண்டுவிட்டதாகச் செய்திகள் கூறு​கின்றன. 'கொழும்புக்கு அழைத்துச் செல்லப்​போகிறோம்’ என்று சிங்களர் திமிராக அறிவிக்க... இந்த மாவீரர்கள் சயனைடை அருந்திவிட்டார்கள். சிங்களர்கள், உடனே கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே குதித்தனர். குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் கழுத்தை நெரித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுக்கப் பார்த்தனர். வாந்தி எடுக்கவைக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த அறையிலேயே குமரப்பா, புலேந்திரன் உட்பட பலரும் செத்து விழுந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பலன் இல்லை.

ஈழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்த ஓர் இளைஞர் கூட்டம், 'அமைதி வந்துவிட்டதாகச்’ சொல்லப்​பட்ட நேரத்தில் உயிர்த் தியாகம் செய்தது.

''இந்திய ஹை கமிஷனர் தீட்சித் மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் உடனே புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு இருந்தால், இவர்கள் உயிரைக் காத்திருக்கலாம். ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதற்கு இவர்கள் காட்டிய அலட்சியமே காரணம்!'' என்று புலிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தியா தவறு செய்தது என்பதை யாழ் கோட்டையில் இருந்த இந்திய அமைதிப் படை முகாம் பொறுப்பு அதிகாரி கர்னல் பராரே சொல்லி வருந்தினார். ''ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தே, 17 விடுதலைப் புலிகளும் இந்தியாவால் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரசியல் ரீதியாகக்கூட முயற்சி எடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்றே புரிய​வில்லை!'' என்று பராரே கூறியிருக்கிறார் (நல்ல மனிதர் பராரே - 12 பேர் உடல் தீக்கிரையாவதற்கு முன், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.)

பழசு இன்றும் புதுசு

இந்த 17 விடுதலைப் புலிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, எல்.டி.டி.ஈ-யின் பிரமுகர்கள் யாரும் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இறந்து போன 12 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டபோது, குமரப்பா, புலேந்திரன் மற்றும் பலர் உடல்களில் துப்பாக்கி பானட் காயங்கள். அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது புரிந்தது.

பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் மத்திய அரசு இதுவரை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பதே உண்மை. திலீபன் இறந்தபோது யாழ்ப்பாணம் வந்திருந்த நெடுமாறன் கூறினார்... ''எது நடைபெற வேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினாரோ, அது நடைபெறுவதை நான் பார்த்தேன். இந்தியருக்கும் ஈழத் தமிழருக்கும் இடையே மோதல் உருவாக வேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். அதற்காக, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தார். அவரது விருப்பத்தினை இந்திய அதிகாரிகள் கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். இந்திய அதிகாரிகளின் தவறான அணுகுமுறையின் விளைவாக, இந்திய எதிர்ப்பு உணர்வு ஈழ மக்களிடையே கொழுந்துவிட்டு எரிகிறது.

குறிப்பாக, தாய்மார்களிடம் இந்த உணர்வு அதிகமாகக் காணப்படுவதை நான் பார்த்தேன். செப்டம்பர் 15 - ம் தேதி திலீபன் உண்ணாவிரதம் தொடங்கினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நிலைமையை விளக்கி, பிரபாகரன், தீட்சித்துக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அதை தீட்சித் அலட்சியம் செய்தார்.

நார்வே, ஸ்வீடன், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணம் வந்து திலீபனைப் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால், யாழ்ப்​பாணத்துக்கு இருமுறை வந்த தீட்சித், திலீபனைப் பார்ப்பது தனது கௌரவத்துக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்.

தாங்கள் சொன்னபடி கேட்கும் இயக்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு பொம்மை இடைக்​கால அரசை அமைத்துக்கொண்டு உண்மையில் தமிழீழத்தை, தான் ஒரு வைஸ்ராய் போன்ற நிலையில் இருந்து ஆளவே இந்திய ஹை கமிஷனர்  தீட்சித் விரும்பினார்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கிட்டத்தட்ட அவர் தன்னை இந்தியாவின் வைஸ்ராய் போலவே காட்டிக்கொண்டார். அவரின் இந்த ஆணவப் போக்கு நிலைமையைச் சீர்கேடு அடைய​வைக்​கிறது!''

கடைசி நிலவரப்படி -

தனது ராணுவத் தலைமைத் தளபதி சுந்தர்ஜியை ஈழத்தில் அமைதியை நிலைநாட்ட அனுப்ப நேர்ந்து இருக்கிறது இந்திய அரசுக்கு! பங்களாதேஷ் யுத்தத்தின்போதே, தலைமைத் தளபதி டாக்கா போகவில்லை. இதில், இந்திய அரசு திணறும் நிலைமை ஏற்பட்டுவிட்டதா?!

- நமது யாழ் நிருபர்