என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

'மதம்’ என்ற வார்த்தைக்கு வட மொழியில் நம்பிக்கை என்று பொருள். எல்லாவிதமான சாதி சமயங்களையும் தாண்டி, தேச வித்தியாசங்களைக் கடந்து, பல கோடி மக்களின் அன்பான நம்பிக்கையைப் பெற்றவர் சத்திய சாய் பாபா. தர்மம், சாந்தி, பிரேமை ஆகியவற்றையே தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளாகத் தொடர்ந்து போதித்து வந்த அவருடைய பிரிவைத் தாங்க முடியாமல், எல்லாத் தரப்பினருமே கண்ணீர் வடித்த காட்சியை உலகம் பார்த்தது.

பொது வாழ்க்கை என்பதில் அரசியல்போலவே ஆன்மிகமும் அடங்கும். அரசியலைப்போலவே ஆன்மிகத்தையும் சர்ச்சைகள் சுற்றி வரும். அதையும் மீறி,  சிறப்பான சேவைகளின் மூலம் வரலாற்றில் பதிக்கச் செய்வதுதான், பொது வாழ்க்கைப் பாதைக்கு வருபவர்களின் குறிப்பான சாதனையாக இருக்க முடியும். அந்த வகையில், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான சேவைகளைத் தன் ஆன்மிக அமைப்பின் மூலம் அளித்து, மக்கள் சேவையே மகேசன் சேவை என்று உலகுக்கு உரக்கச் சொன்னார் சாய் பாபா.

'நான் பசியாக இருந்தேன்... உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாக இருந்தேன்... குடிக்கக் கொடுத்தீர்கள். வியாதியாக இருந்தேன்... விசாரிக்க வந்தீர்கள்’ என்ற போதனைகளுக்கு ஒப்பாக மானுட சேவை செய்தவர் பாபா. வாடி வருபவர்களின் பசி தீர்க்க பாபா ஆசிரம அடுக்களையில் அணையாமல் எரியும் நெருப்பும், அனந்தப்பூர் மற்றும் சென்னைவாசிகளின் தாகம் தீர்க்க அவர் எடுத்த பெரு முயற்சிகளும், உயர்தர வைத்திய வசதியை நினைத்துப் பார்க்க முடியாத ஏழை எளியவர்களுக்கும் அத்தகைய சிகிச்சை அளிப்பதற்குக் கட்டிய மருத்துவமனைகளும் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள்!  

துக்கத்தை மட்டும் அல்ல, பேராசை, பொறாமை, தன்னலம் ஆகிய தீய குணங்களையும் கரைக்கக்கூடிய சக்தி கண்ணீருக்கு மட்டுமே உண்டு. சாய் பாபாவின் நினைவாகச் சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் கண்ணீரும், அந்த புனிதப் பணியைத் தொடரட்டும்!