Published:Updated:

லாலுவும், நிதிஷ்குமாரும் சாதி மோதலை உருவாக்குகின்றனர்: குற்றஞ்சாட்டும் அமித்ஷா!

Vikatan Correspondent
லாலுவும், நிதிஷ்குமாரும் சாதி மோதலை உருவாக்குகின்றனர்: குற்றஞ்சாட்டும் அமித்ஷா!
லாலுவும், நிதிஷ்குமாரும் சாதி மோதலை உருவாக்குகின்றனர்: குற்றஞ்சாட்டும் அமித்ஷா!
லாலுவும், நிதிஷ்குமாரும் சாதி மோதலை உருவாக்குகின்றனர்: குற்றஞ்சாட்டும் அமித்ஷா!

பாட்னா: லாலுவும், நிதிஷ்குமாரும் சாதி மோதலை உருவாக்குகின்றனர் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

பிகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் லாலுபிரசாத், நிதிஷ்குமார் போன்ற தலைவர்கள்,  தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் கூறியதாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் பிகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இட ஒதுக்கீட்டு கொள்கையில் பா.ஜ.க. அரசு எந்த மாற்றத்தையும் செய்யாது. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையையே உறுதியாக ஆதரிக்கும். தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் அமைப்பு அளித்துள்ள புனிதமான உரிமைகளை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு மிகவும் உறுதியாக உள்ளது.

பிரதமரும், நானும் இட ஒதுக்கீட்டு கொள்கையில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறோம். இதில் எந்த வகையிலும் தலையிடும் நோக்கம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீட்டு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறவில்லை. நிதிஷ்குமாரும், லாலுவும், பின்தங்கியோருக்கும், உயர் சாதியினருக்கும் இடையே மோதலை உருவாக்குகின்றனர். ஆனால், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரைத்தான் பா.ஜ.க. பிரதமர் ஆக்கியது.

மாட்டிறைச்சி விவகாரம், இட ஒதுக்கீடு பிரச்னை ஆகியவற்றை லாலு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் சாதி மற்றும் மத ரீதியில் ஓட்டுகளை பெறுவதற்காகவே எழுப்புகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அவர்களுக்கு அக்கறை கிடையாது. அதனால் இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

உத்தரபிரதேச மாநில தாத்ரி சம்பவத்திலோ, கர்நாடகாவில் பகுத்தறிவுவாத எழுத்தாளர் கொலையிலோ பா.ஜ.க.வுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இந்த 2 சம்பவங்கள் நடந்த மாநிலங்களிலும் சமாஜ்வாதியும், காங்கிரசும்தான் ஆட்சியில் உள்ளன. அதனால், இந்த மாநில அரசுகளுக்குத்தான் இதில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறார்கள் என்றால் அதற்கு இந்த மாநில அரசுகளே பொறுப்பு ஏற்கவேண்டும்" என்றார்.