Published:Updated:

கருணாநிதி முதல் குஷ்பு வரை... பாரபட்சமே பார்க்காமல் போட்டு தாக்கும் அனிதா குப்புசாமி!

Vikatan Correspondent
கருணாநிதி முதல் குஷ்பு வரை... பாரபட்சமே பார்க்காமல் போட்டு தாக்கும் அனிதா குப்புசாமி!
கருணாநிதி முதல் குஷ்பு வரை... பாரபட்சமே பார்க்காமல் போட்டு தாக்கும் அனிதா குப்புசாமி!

திருச்சி: கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, பிரேமலதா, குஷ்பு என அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரான பாடகி அனிதா குப்புசாமி கடுமையாக விமர்சித்து பேசினார்.

கருணாநிதி முதல் குஷ்பு வரை... பாரபட்சமே பார்க்காமல் போட்டு தாக்கும் அனிதா குப்புசாமி!

அ.தி.மு.க-வின் 44-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். திருச்சியில் எடத்தெரு கீழப்புதூரில் நடந்த கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் அனிதா குப்புசாமி பேசுகையில், "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தபோது கடனில் கோபாலபுரம் வீடு மூழ்கப்போவதாக கருணாநிதி நாடகமாடினார். உடனே  கருணாநிதிக்காக உதவி செய்ய 'எங்கள் தங்கம்' படத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் தலைவரும், அம்மா ஜெயலலிதாவும் நடித்தாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் நமது தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் அடுத்த மாதம் முரசொலி கட்டடம் கட்டப்பட்டது. அப்போதுதான் தலைவருக்கு கருணாநிதியின் கபட நாடகம் தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி தலைவரை கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பிறகு  17.10.1972-ல் உதயமானதுதான் நம் கட்சி. அப்போது தி.மு.க-வை அழிக்க வேண்டும் என தலைவர் நினைத்துதான் அ.தி.மு.க-வை உருவாக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசி. அதனால்தான் புரட்சி தலைவி அம்மாவை அடையாளம் காட்டினார். அம்மா, தி.மு.க-வை அடையாளம் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.

சென்னை தி.மு.க-வின் கோட்டை என கருணாநிதி சொல்லிக்கொள்வார். அதை அம்மா நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உடைத்தெறிந்தார். அம்மா போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியில் இருந்த அத்தனை தி.மு.க-வினரும் அம்மாவுக்கே வாக்களித்துள்ளனர். அப்படியானால் தி.மு.க. தொண்டர்கள் கூட தி.மு.க-வைக் கைவிட்டுவிட்டனர் என்றுதானே அர்த்தம். அதனால்தான் இந்திய தேர்தல் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையாக ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அம்மா வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றார்கள். அந்தத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் 217 தொகுதியில் அ.தி.மு..க வெற்றி, இன்னும் 17 தொகுதிகள்தான் நாம் வேலை செய்ய வேண்டியிருக்கு, அதையும் செய்துவிட்டால் 234 தொகுதியும் நமக்குதான். அவ்வளவு நலத்திட்டங்களை அம்மா வாரி வழங்கியுள்ளார்.

அவர் கடந்த சிலநாட்களுக்கு முன் உருக்கமாக கடிதம் எழுதினார். எனக்கு பிள்ளைகள் இல்லை, கணவர் இல்லை, உங்களுக்காகவே வாழ்கிறேன் என கடிதம் எழுதியிருந்தார். தமிழகத்தில் வாழும் தமிழர்கள் எல்லாம்தான் அம்மாவின் பிள்ளைகள். ஆனால் கருணாநிதி  அப்படியில்லை. குடும்பத்துக்காக வாழ்பவர். கனிமொழி சில நாட்களுக்கு முன் தேசிய தலைவர்கள் கவனம் கருணாநிதி பக்கம் என சொல்லியிருக்கிறார். கடந்த தேர்தல்களில் கருணாநிதி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தாரே... ஏன் யாரும் வரல. மாநகராட்சி, உள்ளாட்சி, நாடாளுமன்றம் உள்ளிட்ட எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே அமோக வெற்றி பெற்றது. அதன் காரணமாகத்தான் உதிரி கட்சிகள் கூட தி.மு.க-வை மதிக்கவில்லை.

நான் கேட்கிறேன்... கருணாநிதிக்கு தேசிய அளவில் செல்வாக்கு இருந்த காலத்தில் எல்லா துறைகளையும் தனது பிள்ளைகளுக்காக போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கியவர், ஏன் நீர்வளத் துறையை வாங்கவில்லை. அப்படி வாங்கினால் காவிரி கிடையாது என சொல்ல வேண்டியிருக்கும். அதனால் கர்நாடகாவில் நடக்கும் தொழில்கள் பாதிக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் அம்மா தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளை தீர்க்க இரும்பு கரம் கொண்டு செயல்படுபவர்.
 

கருணாநிதி முதல் குஷ்பு வரை... பாரபட்சமே பார்க்காமல் போட்டு தாக்கும் அனிதா குப்புசாமி!

இதுக்கு நடுவுல சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த், 2016 தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வராக விடமாட்டேன்னு சொல்லி காமெடி பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக காமெடி காட்சிகள் இல்லை. காரணம் விஜயகாந்த் உளறுவதுதான் ஹிட் அடித்து இருக்கிறது. பொதுக்கூட்டங்களில் பிரேமலதா, விஜயகாந்தைப்போலவே உளறிக்கொட்டுகிறார். யார் இந்த பிரேமலதா? விஜயகாந்தின் மனைவி என்பதைத் தவிர வேறென்ன தகுதியிருக்கிறது இவருக்கு? ஏழரை கோடி தமிழர்களைக் காக்கும் தெய்வம் எங்கம்மா. அவர்களை பற்றி பேச அருகதையில்லை. அ.தி.மு.க-வோடு கூட்டணியில்லை என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி அம்மா போட்ட பிச்சை. (பிரசுரம் செய்ய இயலாத இன்னும் சில மோசமான விமர்சனங்களையும் பிரேமலதா மீது அனிதா குப்புசாமி வைத்தார். )

தமிழ்நாடு முழுக்க ஸ்டாலின் மக்களை சந்திக்கிறாராம். கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியின் பேரன், வாரிசுகள் பிடியில் சினிமா உலகம் சிக்கித் தவித்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைக்காத ஸ்டாலினின் மகன் சபரீசன், தனது மாமனாரை வைத்து தமிழகம் முழுவதும் ஷூட்டிங் நடத்தி படம் எடுக்கிறார். 'மாமா கையை தூக்குங்க, சிரிங்க' என சபரீசன் சொல்லும்படிதான் ஸ்டாலின் நடக்கிறார். ஸ்டாலினின் இளம் வயதில் அவங்க மனைவி துர்கா நடிக்க விடல. அதனால வெள்ளை வேஷ்டி, சட்டை போட்டுகிட்டு இருந்தவர், இப்போ தனது நிறைவேறாத ஆசைகளைத் தீர்த்துக்கிறார். ஸ்டாலினுக்கு டை எங்கிருந்து வருது தெரியுமா? தாய்லாந்தில் இருந்து. அவர் அடிக்கடி மாற்றி கட்டுகிற வாட்ச் விலை ஒன்றரை லட்ச ரூபாய். அப்பா பத்தடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்பார்களே... அதுபோலத்தான் அப்பா கருணாநிதி நடத்தும் நாடகத்தை மிஞ்சும் அளவுக்கு ஸ்டாலின் பயணத்தில் பயங்கரமாக வேஷம் போட்டு நாடகம் போடுகிறார்.
 

கடந்த வருடங்களில் 5 முறை ஆட்சி உங்கள் கையில் இருந்தது. ஏன் மதுவிலக்கை அமல்படுத்தல. எல்லாம் நாடகம். அதேபோல ஒபாமா ரேஞ்சிக்கு அன்புமணி ராமதாஸ் போஸ்டர் ஒட்டி வருகிறார். முதல் கையெழுத்து மதுவிலக்குக்குதான் என சொல்கிறார். ஆட்சியைப் பிடித்தால்தான் மதுவிலக்கு பற்றி யோசிக்கணுமா. பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் குடிக்கக் கூடாதுன்னு உத்தரவு போடுங்க பார்ப்போம். வெறும் நாற்காலி மட்டும்தான் இருக்கும்.

வைகோவை பற்றி சொல்லணும். இந்த வைகோவுக்கு வாழ்க்கை கொடுத்தது அம்மாதான். 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயிச்சாங்களே... யார் கூட கூட்டணி வைத்து? விஜயகாந்துக்கு 29 எம்.எல்.ஏ-க்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதிலும் அவரின் கோமாளித்தனம் தாங்காமல் பலபேர் போயிட்டாங்க.

காந்தி, நேரு உள்ளிட்டோர் வளர்த்த காங்கிரஸ் இப்போ குஷ்பு கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது. ஒரு கட்சி துவங்கப்பட்டால் அது தேய்ந்துபோகும் என்பது வரலாறு. ஆனால் அ.தி.மு.க. துவங்கி திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டது முதல், இன்றுவரை 44 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஒரு துளியும் குறைவில்லாமல். மக்கள் செல்வாக்கோடு ஆலமரமாய் வளர்ந்து நிற்பது என்றால் அது அ.தி.மு.க-தான். அதற்குக் காரணம் புரட்சி தலைவி அம்மாதான்" என்று பேசி முடித்தார்.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்