Published:Updated:

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?
மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

தீபாவளிக்கு முன்பு வரை, ரியல் எஸ்டேட்டின் உச்ச நட்சத்திரப் பட்டியலில் இருந்த சென்னையின் வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளிலிருந்து ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி மக்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், தொடர் கனமழை.

அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் எல்லாம் இன்று ஏரி, குளங்களாக உருமாறி பல இடங்களில் படகுப் போக்குவரத்து விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக கன மழை பெய்தால் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை விடப்படும். இந்த முறை பல இடங்களில், கல்லூரி மற்றும் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு சமயங்களில் பாதிக்கப்படுபவர்களை தங்க வைக்க வசதியாகத்தான், பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த முறை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாதாரணமானவர்களை விட வசதிபடைத்தவர்கள்தான். காரணம், அடுக்குமாடி குடியிருப்புகளில் தரை தளம், கார் பார்க்கிங் பகுதி மூழ்கி, முதல் மாடி மூழ்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கியதே. இரண்டாம், மூன்றாம் மாடிகளுக்கு தண்ணீர் ஏறவில்லை என்றாலும் அவர்கள் செல்லும் சாலைகளில் இரண்டு ஆள் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அவர்களும் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிவிட்டது.

சென்னையில் பெய்த தொடர் கனமழையால், இந்த முறை அதிக லாபம் பார்த்தவர்கள் ஹோட்டல்காரர்கள். பல குடும்பங்கள் வாரக் கணக்காக ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். அங்கிருந்தபடிவே அவர்கள் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால், மழை நீர் சில இடங்களில் வடிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த மழையால் சென்னையில் ரியல் எஸ்டேட் பாதிக்கப்படுமா? என்கிற கேள்வியுடன் தென் சென்னை அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் (ஃபிளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் - சென்னை சௌத்) தலைவர் ஏ.ஆர். ஆத்மாவை சந்தித்துப் பேசினோம்.

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

மந்தநிலை

''இது ரியல் எஸ்டேட் துறைக்கு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசின் வழிகாட்டி மதிப்பு, அறிவிப்பு இல்லாமலேயே கண்டபடி அதிகரிக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 வருடமாகவே தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. கடந்த வருடம் முகலிவாக்கத்தில்  11 மாடி கட்டடம் இடிந்துவிழுந்த சம்பவத்தை அடுத்து, ஃபிளாட்கள் விற்பனை சுணங்க ஆரம்பித்தது. இப்போது பள்ளமான பகுதிகளில் தண்ணீர் வார கணக்கில் தேங்கியதால், மழை தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மிகவும் மந்தமாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

விற்பவர் விலை சொன்ன காலம் போய், வாங்குபவர் விலை சொல்லி கேட்கும் நிலைக்கு தமிழக ரியல் எஸ்டேட் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு அரசின் அலட்சியப் போக்கு, அதிக வருமானம் பார்க்க வேண்டும் என்கிற நிலை, உள்ளாட்சி நிர்வாகம் சீர் இல்லாத நிலை என்கிற மூன்று காரணங்கள் இருக்கின்றன" என்றார்.

தொடர்ந்து அது குறித்து விரிவாக பேசிய அவர், "அரசின் அலட்சிய போக்கு என்பதில் ஏரி பகுதியில், அதாவது முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது மற்றும் அதன் கட்டுமானத்தை சிஎம்டிஏ அதிகாரிகள் சரிவர கவனிக்காதது அடங்கும். அடுத்து, அரசின் வருமானத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தில் ஒருவர் அதிக வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக மனை மதிப்பை கூட்டி பதிவு செய்தால், அதையே அந்த பகுதியில் அடுத்து செய்யப்படும் பத்திரப் பதிவுகளுக்கும் அரசு வழிகாட்டி மதிப்பாக (கைடு லைன் வேல்யூ) மாற்றி விடுகிறார்கள்.

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

மழை நீர் வடிகால் பணிகளை, உள்ளாட்சி அமைப்புகள் சரியாக நிர்வாகம் செய்யாமல் விட்டதால்,  சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி வாழ தகுதியற்றதாகிவிட்டது.  நம்மவர்களிடமும் தங்கள் வீடு நல்லா இருந்தால் போதும் என்கிற மனப்பான்மைதான் இருக்கிறது. இதனால்தான் குப்பைகளை சாலையில் - சாக்கடையில் கொட்டுவது நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளும் கால்வாய்களை சரியாக கட்டவில்லை. தண்ணீர் வேகமாக வெளியேற வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

அடைப்புகளும் நீக்கப்படவில்லை. பல இடங்களில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகளின்  உயரம் உயர்த்தப்படுகிறது. அப்போது பழுதடைந்த சாலைக் கழிவுகள் அகற்றப்படாமல் அல்லது வெட்டி எடுக்கப்படாமல், அதன் மேலே சாலைகள் உயர்த்தப்படுவதால் வீடுகள் இருக்கும் இடம் பள்ளமாகி, சாலைகள் உயர்ந்துவிடுகிறது.

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

இதனால், மழை நீர் பிரதான சாலையிலிருந்து தெருக்களுக்கு வந்து குளம் போல் தேங்கி விடுகின்றது" என்றவரிடம்,  ''மழையால் வீடுகள் தண்ணீரில் மிதக்கும் இந்தச் சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்குமா? என்று கேட்டோம்.

''நிச்சயமாக..! மழை நீர் தேங்கும் பகுதிகளில் மனை மற்றும் வீடுகளின் விலை குறையும். தாம்பரம் முடிச்சூர் சாலையில் கிருஷ்ணா நகர், சக்தி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைத் தண்ணீர் தேங்கி நின்றது. இது வீட்டில் குடியிருந்தவர்களின் மனநிலையை பாதித்துள்ளது. பலர் வீட்டை விற்று விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மழை வெள்ளம் வீட்டுக்குள் புகும்போது, டிவி, வாஷிங் மிஷின், கட்டில், அலமாரி என்று பல பொருட்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இதனால், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நண்பர் ஒருவரின் கார் மழையில் மூழ்கி விட்டது. செலவு ரூ. 1 லட்சம். இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீடு ரூ. 25,000 தான் கிடைக்கும் என்கிறார்கள்.

மழை மீண்டும் பெய்ய ஆரம்பிப்பதால், வீட்டுக்குள் மீண்டும் செல்ல பயப்படும் நிலை காணப்படுகிறது. இந்தப் பயம் இன்னும் 6 மாத காலத்துக்கு இருக்கும். அந்த வகையில் மனை விலை 10%, அடுக்குமாடி குடியிருப்பு விலை  20% இன்னும் குறையக் கூடும்" என்றார்.

காரணம் பிளாஸ்டிக்!

சென்னையை அடுத்த தாம்பரத்திலுள்ள சூரியன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மணி, '' பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2005 ல் கன மழை பெய்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாததால் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. இப்போது தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருப்பதால் பாதிப்பு அதிகம். பள்ளத்தில், ஏரியில், குளத்தில் வீடுகள் கட்டியதால் இந்த நிலை என்கிறார்கள். இப்போது பாதிக்கப்பட்டவைகளில் பல அரசின் டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி பெற்ற லே அவுட்களில் கட்டப்பட்ட தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகளாகதான் இருக்கின்றன.

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

சென்னை புறநகர்களில் மட்டும் மழை நீர் தேக்க பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. சென்னை நகருக்குள் அடையாறு, சைதாப் பேட்டை பகுதிகளில் எல்லாம் கூட மழை வெள்ளம் தேங்கி இருக்கிறது.

மழைக் காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் கால்வாய் பராமரிப்பை மேற்கொண்டால், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவை சாக்கடையை அடைக்காமல் பார்த்துக் கொண்டாலே, கால்வாய் அடைத்து தெருக்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும், இந்த மழை பாதிப்பு மற்றும் அச்சம் இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்கு இருக்கும். பின்னர் சகஜ நிலை வந்துவிடும்.

2005 -ல் மழை பாதிப்புக்கு பிறகு இப்படிதான் நடந்தது. பாதிப்பு கற்று தரும் பாடமாக, மேடான பகுதிகளில் வீட்டு மனையை வாங்க வேண்டும் மற்றும் சாலையிலிருந்து குறைந்தது 5 அடியாவது வீட்டை உயர்த்திக் கட்டவேண்டும் என்பதாக இருக்கிறது" என்றார்.

வாடகை வீடு நிலவரம்..


தாம்பரத்தை அடுத்து கிஷ்கிந்தா பகுதியில் மாதம் ரூ.3,500 என்ற அளவில் வாடகைக்கு இருந்தவர்கள், தாம்பரத்தை ஒட்டி, மழை வெள்ளம் தேங்காத மேடான பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி அலைவதை பார்க்க முடிந்தது. அவர்கள் ஏற்கெனவே இருந்த வீட்டின் அளவுள்ள வீட்டுக்கு, இப்போது ரூ. 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு வந்திருக்கிறார்கள்.

கிஷ்கிந்தா பகுதி வீடுகளின் உரிமையாளர்கள், மழை விட்டதும் வீட்டின் முன் பகுதியில் சாலையை உயர்த்தி தருவதாக சொன்னதை அடுத்து,  அங்கே மீண்டும் குறைந்த வாடகைக்கு போய்விட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.

மழையில் மிதக்கும் வீடுகள்..! ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன?

அதாவது, நம்மவர்கள் தற்காலிக மழை வெள்ள பாதிப்பை தாங்கிக் கொள்ளவும், அப்போதைய தீர்வுகளை தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் வருமானத்தில் பெரும்பகுதியை வாடகைக்கு கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.

எது எப்படியோ, வீடு என்பது அத்தியாவசியம் மற்றும் அந்தஸ்து என்பதால், ரியல் எஸ்டேட் குறுகிய காலத்திற்கு பாதிக்கப்பட்டாலும்,  நீண்ட கால அடிப்படையில் எடுத்துக்கொண்டால் வளரும் என்பதுதான் மழை பாதிப்பையும் தாண்டிய நிதர்சனம்!

- சி.சரவணன்

அடுத்த கட்டுரைக்கு