Published:Updated:

ராஜேந்திர பாலாஜியின் அடடே முன்னேற்றம்... அதிமுகவினரை ஆட்டி வைக்கும் நியூமராலஜி!

Vikatan Correspondent
ராஜேந்திர பாலாஜியின் அடடே முன்னேற்றம்... அதிமுகவினரை ஆட்டி வைக்கும் நியூமராலஜி!
ராஜேந்திர பாலாஜியின் அடடே முன்னேற்றம்... அதிமுகவினரை ஆட்டி வைக்கும் நியூமராலஜி!

விருதுநகர்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் நியூமராலஜிப்படி தங்களது பெயரை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜியின் அடடே முன்னேற்றம்... அதிமுகவினரை ஆட்டி வைக்கும் நியூமராலஜி!

தமிழக செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சராக பதவி வகித்து வருபவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வசித்து வரும் ராஜேந்திர பாலாஜி,  திருத்தங்கல் நகராட்சியின் துணைத்தலைவராக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பதவி வகித்து வந்தார். அதிமுகவில் சின்ன பதவியில் இருந்து வந்தபோது,  அவரது பெயர் கே.டி.ராஜேந்திரன். அரசியலில் வளர்ச்சி அடைந்து பெரிய பதவிகளை கைப்பற்ற நினைத்த கே.டி.ராஜேந்திரன்,  நியூமராலஜி நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ' திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் மிகவும் பிரசித்து பெற்றது. எனவே உங்களது பெயருடன் பாலாஜியை சேர்த்துக்கொண்டால், அரசியலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் வரும்'  என்று நியூமராலஜி நிபுணர்கள் ஐடியா கொடுத்தார்களாம். அப்போது முதல்,  அதாவது கடந்த 2007-ம் ஆண்டு முதல்,  கே.டி.ராஜேந்திரன் பெயரோடு பாலாஜியை சேர்த்துக்கொண்டு கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆனார். அதுவரை அதிமுகவில் சின்ன பொறுப்பு பதவி வகித்து வந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், சிவகாசியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் ஜெயித்த கையோடு, கொஞ்ச நாளில் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி தேடி வந்தது. பிறகு கொஞ்ச நாளில் அமைச்சர் பதவியும் அவரை தேடி வந்தது.

முதன் முதலாக எம்.எல்.ஏ.வாகி,  உடனே மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி எல்லாம் தேடி வந்ததற்கு காரணம் நியூமராலஜியின்படி செய்த பெயர் மாற்றம்தான் காரணம் என்று நம்புகிறாராம் அவர்.

ராஜேந்திர பாலாஜியின் அடடே முன்னேற்றம்... அதிமுகவினரை ஆட்டி வைக்கும் நியூமராலஜி!

இப்போது தமிழகத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,  விருதுநகர் மாவட்ட அதிமுக புள்ளிகள் பலரும், அடுத்த தேர்தலில் சீட் வாங்கி எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற கனவில் மிதக்கின்றனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைப்போல் தாங்களும் நியூமராலஜிப்படி பெயர் மாற்றினால் அரசியலில் முன்னேறி விடலாம் என்று கருதி,  இப்போது நியூமராலஜிப்படி பெயரை மாற்றத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த பெயர் மாற்றும் வைபவத்தை முதலில் தொடங்கி வைத்திருப்பவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மல்லியை சேர்ந்த துரைப்பாண்டியன். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துரைப்பாண்டியன் என்ற தனது பெயரை நியூமராலஜிப்படி ராஜவர்மன் என்று பெயர் மாற்றி வைத்தார். அதோடு அரசு கெஜட்டிலும் பெயரை மாற்றி விட்டு, அதிமுக நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப்பிதழ்களில் ராஜவர்மன் என்ற பெயர்தான் இடம் பெறுகிறது.

இவரை பின்பற்றி பெயரை மாற்றியிருக்கும் இன்னொருவர் காரியாபட்டி டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராமமூர்த்தி. இவரது சொந்த ஊர் காரியாபட்டி அருகேயுள்ள கரியனேந்தல். அதனால் இவரை எல்லோரும் கரியனேந்தல் ராமமூர்த்தி என்று அழைப்பதுதான் வழக்கம். திருச்சுழி தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற கனவில் மிதக்கும் ராமமூர்த்தி, சமீபத்தில் நியூமராலஜிப்படி தனது பெயரை ராமமூர்த்தி ராஜ் என்று மாற்றியுள்ளார். அதோடு தனது பெயருக்கு முன்னாள் தாத்தா, அப்பா பெயர்களின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளார்.

இவர்களை பின்பற்றி அதிமுக நிர்வாகிகள் பலரும் நியூமராலஜி நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். 'இது எங்கே போய் முடியுமோ..? ' என்று இந்த பெயர் மாற்றம் பற்றி சொல்லி கிண்டல் செய்கின்றனர் பிற அதிமுகவினர்.

-எம்.கார்த்தி


படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்